கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குப்பிட்டி கடல் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் உடல் கூற்றுபரிசோதனைக்க்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
பூநகரி சங்குப்பிட்டி கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் நேற்று மாலை சடலம் ஒன்று மீட்கப்பட்டது. குறித்த சடலம் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீன்பிடி வலையினால் சுற்றப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சடலம் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து நேற்று மாலை பூநகரி, சாவகச்சேரி பொலிஸார் மற்றும் கடற்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் சதீஸ்குமார் விஜயராணி முன்னிலையில் பூநகரி பொலீஸாரினால் சடலம் மீட்கப்பட்டு உடல்கூற்று பரிசோதனைகளிற்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
குறித்த சடலம் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்படுவதனால் கொலையாக இருக்கலாமென பொலிசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் பூநகரி பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை யாழ்ப்பாணம் கைதடி நாவற்குழி தெற்கு பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய சதாசிவம் நாகராசா என்பவரை 26.04.2021 முதல் காணவில்லை என தெரிவித்து அவர்களின் உறவினர்கள் குறித்த பகுதிக்கு வந்திருந்தனர்.
நாவற்குழி தெற்கிலுள்ள அவரது மகளின் வீட்டில் படுக்க சென்ற நிலையில் அவர் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தார் கூறியுள்ளனர். இந்த நிலையில் குறித்த சடலம் காணாமல் போனவருடையது தான் என உறவினர்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



