
ஊற்றெடுக்கின்ற சில தாகங்கள் அடி மனதில் ஆழப்பதிந்து விடுகின்றது, எந்த ஒன்றையும் போராடிப் பெறவேண்டும் என்பது எனது சிறுவயது முதலான விருப்பம், கனவு காண்பதென்பது என் குழந்தை தாகம். எப்போதுமே மதத்தை நான் பிரித்துப் பார்ப்பதில்லை. இன உணர்வின் தேடலில் மதப்பிரிவினைகள் அர்த்தமற்றது என்பது எனது எண்ணம்.
அது வைகாசி மாதம், காற்று சுழன்று சுழன்று விசிக்கொண்டிருந்தது. நண்பர்கள் இணைந்து காவோலை பொறுக்கச் செல்வோம், மாறிமாறி விழும் காவோலை, பன்னாடை, பனம்பாளை இவற்றை ஒடிஓடி பொறுக்கிக்கொண்டுவந்து அவரவர் ஒவ்வொரு குவியலாக வெட்டையில் குவித்துவைப்போம், மாலையானதும் ஒவ்வொருத்தர் வீட்டிற்காக எல்லோருமாய் சேர்ந்து கொண்டுபோய் போட்டுவிடுவோம்,
நான் பனம்பாளை அதிகமாக பொறுக்குவது, அப்பம் சுடத்தான், பாளையை பொறுக்கிவைத்துவிட்டு, அம்மாவை ஒருமுறை பார்ப்பேன், அம்மாவுக்கு என் வேண்டுகோள் புரிந்துவிடும், இப்போது போல உடனடி அப்பமாவு ஒன்றும் அந்த நாட்களில் கிடையாது,
சிவப்பு பச்சை அரிசியை ஊறவைத்து, உரலிலே இடித்து மாவாக்கி, குறுணல் எடுத்து அதை கஞ்சி காய்ச்சி, கள்ளுமண்டிவிட்டு குழைத்துவைத்து சுடும் அப்பம்…அப்பப்பா…அப்படியொரு சுவை. அடுத்தநாள் அப்பம் என்றால் முதல் நாளே தனிக்கொண்டாட்டம்தான். பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் தான் அப்பம் சுடுவதென்பது எழுதாத சட்டம், காரணம் இரண்டு இருந்தது. ஒன்று அப்பம் என்றால் நிறைய சுடவேண்டும், மற்றது அப்பம் சாப்பிட்டால் கட்டாயம் 11 மணியளவில் நித்திரை கண்ணைச்சுற்றும்,
அதிகாலையிலேயே எழுந்துவிடும் அம்மா, பனையின் பாளையை மட்டும் ஒவ்வொன்றாகவைத்து அளவான தணலில் சுட்டுத்தரும் அப்பத்தின் சுவையோ அலாதிதான். என்னுடைய நண்பர்கள், அண்ணாவின் நண்பர்கள் என்று அப்பத்திற்காக ஒரு கூட்டமே கூடிவிடும், அதுவும் சீராளனுக்கு அப்பம் என்று எழுதிவிட்டு கொடுத்தால் கூட சாப்பிட்டுவிடுவான், அப்படியொரு அப்ப பைத்தியம்.
நானும் எனது நண்பர்களுமாய் அப்பத்தை வாழை இலையில் சுற்றிக்கொண்டு, எங்கள் வீட்டின் பின்பக்கமாய் இருக்கிற ஆத்தங்கரையில் அமர்ந்துதான் சாப்பிடுவோம். சாப்பிட்டுவிட்டு, கொஞ்சநேரம் தாயம், ஆடுபுலி ஆட்டம் விளையாடுவோம், பிறகு, அப்படியே ஆற்று மணலோரமாகவே சரிந்து படுத்துவிடுவோம். ஆத்தோரமாய் வளைந்து நிற்கும் மரங்கள் இதமாய் நிழல் தரும்,
சொர்க்கம் என்பது அந்த சிறுவயது நாட்கள் தான் என நினைத்தபடி ஆழமான பெருமூச்சு ஒன்றை எடுத்துவிட்டுக்கொண்டேன்.
எண்ணங்களே செயல்கள் ஆகிறது என்றும் அந்த செயல்களே பின்னர் வாழ்க்கை ஆகிறது என்றும் அப்பா அடிக்கடி சொல்வார். ஒப்பற்ற தியாகங்கள் உன்னதமான வாழ்க்கையின் உயிர்நாடி என்பதை நாங்கள் சிறுவயது முதல் பார்த்துப் பழகியிருந்தோம்.
நாட்கள் உருண்டோடி நகர்ந்துகொண்டிருந்தன, பதினாறு வயதைத் தொட்டுக்கொண்டிருந்தேன்…..அப்போதெல்லாம், மின்சார வசதி கிடையாது, குப்பி விளக்குதான். அதிலும் ஜாம் போத்தலின் அடியில் சிறு பஞ்சு துண்டை வைத்து சிறிய அளவில் மண்ணெண்ணெய் விட்டு அதன் மேலே சைக்கிளின் வார்க்கட்டையில் திரிவைத்து விளக்கெரிப்பது தான் வழமை.
மெல்லிய அந்த வெளிச்சத்தில் தான் எங்கள் கல்வியின் கனவுகள் பூத்துக் குலங்கின. அந்த வெளிச்சம் போதாது என்றால் கைவிளக்கில் தான் படிப்பது. சிம்னி லாம்பு கூட ஓரிருவர் வீட்டில்தான்…….
அன்றும்……அதிகாலையிலேயே அம்மாவின் குரல் அருகில்……”அன்பு….அன்பு…..எழும்பையா….அண்ணா எழும்பி படிக்கிறான், நீயும் எழும்பி படி”
தொடரும்……
கோபிகை