
அவசரமாய் ஓடி வந்தனர் சீராளனும் மற்ற மூவரும். சட்டென்று அடித்து விட்டேனே தவிர எனக்குள் பயப்பந்து உருண்டது. முதலில் ஓடிப்போய் குருவியைப் பார்த்தேன், அது இறந்துவிட்டிருந்தது, என்னை அறியாது கண்களில் கண்ணீர்,
வானகனை மற்றவர்கள் தூக்க மெல்ல எழுத்து நின்றான், அவனருகில் சென்று நின்று கொண்டேன், பேச வார்த்தை ஏதும் வரவில்லை எனக்கு. மன்னிப்பு கேட்கலாமா, மனம் ஒரு நொடிதான் யோசித்தது, சட்டென்று அவனுடைய கைகளைப் பற்றிக்கொண்டேன், முதலில் தட்டிவிட்டான், பிறகு என்ன நினைத்தானோ, அவனே என் கைகயைப்பிடித்து , “குருவி செத்துப்போச்சாடா” என்றான்,
அவனுக்கு பதில் சொல்ல முடியாது , நான் வெறித்தபடி நிற்க, என் விழிகளில் உருண்ட கண்ணீர் கன்னங்களை நனைத்தது,
” டேய்…..அன்பு, அழுறியாடா?” சீராளன் கேட்டதும் மற்றவர்களும் பதறிப்போனார்கள்.
“கு….ரு…..வி செத்துப்போச்சுடா”
வானகனுக்கு குற்ற உணர்வு உறுத்த என்னையே பார்த்தான்,
“சரி…..விடு….” ஆதவன் சொன்னதும் பெரிய மூச்சொன்றை எடுத்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். அதன் பிறகு யாருக்கும் பழைய மனநிலை இருக்கவில்லை, அன்று, கொண்டு சென்ற எதையுமே சாப்பிடாமல் திரும்ப கொண்டு வந்து விட்டோம்,
வீட்டிற்குச் சென்ற போது , அம்மா விசித்திரமாக பார்த்து, “என்னடா, முகமெல்லாம் ஒரு மாதிரி கிடக்கு, ஏதாவது பிரச்சினையா?” என்றா,
சீராளன் சொல்ல எடுக்க நான், தலையை ஆட்டி , ‘சொல்லாதே’ எனத்தடுத்தேன், ஆனாலும் அம்மா துருவித்துருவி கேட்டதால் அவனும் சொல்லிவிட்டான்,
அதைக்கேட்டு வீட்டிலிருந்த மற்றவர்கள் சிரித்த சிரிப்பு…… அப்பப்பா……இன்னும் ஒரு ஜென்மத்திற்கு காணும்…..அவ்வளவு எரிச்சல் எனக்குள்,
அவசரமாய் எழுந்து வீட்டிற்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டேன், அம்மாவிற்கு தெரியும், யார் கூப்பிட்டாலும் இனி திறக்க மாட்டேன் என்பது, ‘பாவம் சீராளன், சங்கடத்தோடு வீட்டிற்கு சென்றிருப்பானே’ மனம் அங்கலாய்த்தாலும் பூட்டையும் திறக்கவில்லை,
எண்ணங்கள் என்னைத் தாலாட்ட மேகத்தை தொட்டபடி பயணித்துக் கொண்டிருந்தேன், உணவு பரிமாறப்பட்டது, எனக்கு பசியில்லை, இனிப்பான நினைவுகள் மனதை நிறைத்துவிட்டதால் வயிற்றில் பசி இருக்கவில்லை, உணவை மறுத்துவிட்டு மீண்டும் நினைவுகளுக்குள் புதைந்து கொண்டேன்,
தொடரும் ……
கோபிகை