
பனங்காயை பிளிந்து பாணி எடுத்து பனந்தடுக்கில காயவைச்சு சின்ன சின்ன துண்டுகளா வெட்டி உறைப்பு கலந்த பனங்கருப்பணிபாணியில போட்டு அம்மா செய்யிற பாணிப்பனாட்டின்ர சுவையே தனிதான்.
நான் பாணிப்பனாட்டு கொண்டு போனா காணும்……. அடிபட்டு பறிச்சுப்போடுவாங்கள்.
ஆளுக்கொரு போத்தலில தண்ணியும் எடுத்துக்கொண்டு காட்டுக்குள்ள செல்லும் போது ஒவ்வொரு தடவையும் நான் அதை உணர்வதுண்டு, அது வேறொன்றும் இல்லை,
காட்டின் வாசலில் செல்லும் போதே ஒரு வாசம் வரும், ‘விருட்சங்கள் எல்லாம் வெளியேற்றும் சுவாசத்தின் வாசம் அது’ என்பதை வளர்ந்த பின்னர் அறிந்து கொண்டேன்.
மற்றவர்கள் ‘விறகு எடுக்கிறேன், ஈச்சங்காய் புடுங்கிறன், கொப்பு வெட்டுறன் ‘ எண்டு ஓடித்திரிய நான் மட்டும் அமைதியா பாத்தபடி நிண்டிடுவன், அப்ப இருந்தே அந்த காட்டுக்கும் எனக்கும் ஒரு பந்தம் ஆரம்பமாச்சு,
நான் வளர வளர என் சிந்தனைகள் அதிகம் வளர்ந்ததுக்கு அந்தக் காடுதான் காரணம். வீட்டில் அண்ணாவோடு சண்டை பிடித்த நாட்களில் எல்லாம் அந்த புல்வெளியில் படுத்து உறங்கி விட்டு மாலையில் தான் வீட்டிற்கு வருவேன்.
‘ ஓயாமல் காட்டுக்குள்ள போறாய், உதென்ன பழக்கம்?, நீங்கள் என்னெண்டாலும் கேட்க மாட்டியளே.? ‘ அப்பாவிடம் அம்மா கத்திக்கொண்டிருப்பா…….அப்பா எதுவும் சொல்ல மாட்டார்,
என்னை ஒருமுறை ஆழமாக பார்த்து விட்டு போய்விடுவார், அப்பாவின் ஆழமான பார்வைக்கு எனக்கு அர்த்தம் தெரியும். அப்பா ஒருபோதும் என் விருப்பங்களுக்கு குறுக்கே நின்றது கிடையாது, சொல்லப்போனால் அந்தப் பார்வையில் ஒரு தட்டிக்கொடுப்பு இருக்கும். அதுதான் என் விரிந்த விசாலமான எண்ணங்களுக்கு காரணம்……
ஒருமுறை காட்டிற்கு போன போது வானகன் பாணிச்சிட்டு ஒன்றை கெற்றப்புல்லால் அடித்து விட்டான், அது துடிதுடித்து கீழே விழுந்தது. எனக்கு வந்த கோபத்துக்கு வானகனுக்கு விட்டேன் ஒரு அறை, அவன் என் காலடியிலேயே சுருண்டு விழுந்து விட்டான்.
தொடரும்….
கோபிகை.