
விமானத்தில் அறிவிப்பு சொல்லப்பட்டதும் அவற்றை செவிமடுத்துக்கொண்டேன். எண்ணங்கள் அடம்பிடித்து ஊருக்குத் தாவியது.
சின்ன வயது முதல் காட்டோரம் நடந்து பறவைகளையும் விலங்குகளையும் பார்த்து ரசிப்பதும் விளையாடுவதும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தடிகள் கொஞ்சம் வெட்டவேண்டும் என்று அப்பா போன போது அவரோடு சென்ற முதல் அனுபவமே காட்டுக்குள் செல்லும் ஆசையை எனக்கு ஏற்படுத்தி விட்டிருந்தது.
இது, மாம்பழ குருவி, இது பாணிச்சிட்டு, இது பொன்வண்டு, இது ஆள்காட்டி குருவி, இது மரங்கொத்தி , இது காட்டுக்கோழி. என்று ஒவ்வொரு பறவையினதும் பெயர்களை அப்பா சொல்லச்சொல்ல ஆவலோடு கேட்டுக் கொண்ட அந்த தருணத்தில் தான் அந்த காட்டின் மீது எனக்கு காதல் வந்திருக்க வேண்டும். இனி அடிக்கடி காட்டுக்குள் வரவேண்டும் என அவ்வேளை தான் நினைத்துக் கொண்டேன்.
அப்போது எனக்கு பத்து வயதிருக்கும். நாளோட்டத்தில் நண்பர்களையும் அழைத்துக்கொண்டு அடிக்கடி காட்டுக்குள் போவது வழமையாகிற்று. அப்போதெல்லாம் அருவி ஓரமாக தண்ணீர் குடிப்பதற்காக வரும் மான் கூட்டங்களைப் பார்ப்போம்.
பன்றிகள் கூட அசைந்து அசைந்து நடந்து வரும் போது பார்க்க அழகாக இருக்கும். நாங்கள் போகும் இடத்திற்கு அருகில் பயிற்சி பாசறைகள் இருப்பதால் அவர்கள் கொட்டும் மீதிச்சாப்பாட்டை சாப்பிடுவதற்காக பன்றிகள் வரும் என்று அப்பா சொல்ல கேட்டிருக்கிறேன்,
சொல் கேட்காத சிறுவான் குரங்குகளையும் பனிச்ச மரங்களில் தாவித்திரியும் தாட்டான் குரங்குகளையும் பார்க்க எனக்கு மிகவும் பிடிக்கும். அவைகளின் உலகத்தில் நாங்களும் அடங்கிவிட்டால் என்ன என பத்து வயதில் நான் யோசித்திருக்கிறேன்.
காட்டுக்குள் செல்வதற்கு முன்பாக தண்ணீர், சிறு உணவுப் பொதிகள் என்று ஒரு ஆர்ப்பாட்டம் தொடங்கிவிடும். அந்த நாட்களில் மரவள்ளி கிழங்கு பொரியல் பக்கற் ஒன்று வாங்குவதே மிகப்பெரிய விசயம்.
அந்த வேலையை எப்போதும் என்னுடைய நண்பன் சீராளன் தான் ஏற்றுக்கொள்வான். அவன் மட்டும் தான் எங்கள் ஐவரிலும் சற்றே வசதியானவன். அவனுடைய அப்பா சம்மாட்டியார். அம்மம்மாவோடு தங்கி நின்று படித்தான். கையில் எப்போதும் காசு வைத்திருப்பான்.
நாங்கள் நால்வரும் கடாபி இனிப்பும் டெல்டா ரொபியும் மைலேடி ரொபியும் வாங்குவோம். நான் கூடுதலாக புளுக்கின ஒடியலும் பாணிப்பனாட்டும் கொண்டு சொல்வதுண்டு……..
தொடரும்……
கோபிகை