
என்னுடைய பள்ளிப்படிப்பு முடிந்து, உயர்தரம் முடித்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்தேன்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அனுமதி கிடைத்திருந்த போதும் அப்போதைய நாட்டுச் சூழல் காரணமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில்தான் என்னுடைய பல்கலைக்கழக படிப்பு நிறைவுற்றது.
இடைப்பட்ட காலத்தில் எனது நண்பர்கள் நாட்டுக்காக தம்மை அர்ப்பணித்து இருவர் விதையாகியுமிருந்தனர். அந்த நேரங்களில் அடிக்கடி என்னாலும் வன்னிக்குச் சென்றுவர முடியவில்லை. அப்பம்மா என்னில் வைத்திருந்த அதிக அக்கறையும் பாசமும் கூட ஒரு தடையாகி விட்டிருந்தது. அப்பப்போ வீட்டிற்கு கடிதம் எழுதுவதோடு சரி.
என்னுடைய வாழ்க்கை முறையும், இங்குள்ள நண்பர்கள் உறவுகள் என மாறிவிட்டிருந்தது. ஆனாலும் மனதின் ஓரத்தில் என் மண்ணுக்காக, அந்த கிராம மக்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆசை மட்டும் தீயாய் எரிந்துகொண்டிருந்தது.
பல்கலைக்கழக் படிப்பை முடித்த காலத்தில் வன்னியில் இறுதி யுத்தம் முனைப்பு பெற்றிருந்தது. அந்த நாட்களில் சித்தப்பா என்னை வெளிநாடு எடுக்கும் முயற்சியில் இருந்தார். அம்மா அப்பாவை, அப்பம்மாவை விட்டுப் போகமுடியாது என நான் தான் மறுத்துக்கொண்டிருந்தேன். அந்த யுத்த நாட்களில்தான் அந்தக் கோரமான துயரமும் நடந்து முடிந்துவிட்டிருந்தது.
அன்று மேமாதம் பத்தாம் திகதி. எறிகணை வீச்சில் எமது முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே எனது அம்மாவும் அப்பாவும் ஒன்றாகவே பலியாகிவிட்டிருந்தனர். அண்ணாவும் அவர்களுடன் இருக்கவில்லை, தங்கை மட்டும் ஓலமிட்டு அழுதபடி தனியாக இருந்ததாக அண்ணாவுக்கு யாரோ தகவல் சொல்ல, ஓடிவந்தவன், கதறி அழுது தீர்த்திருக்கிறான்.
அதன் பிறகு, பெரிய மாமா அவனை எங்கும் போகவிடவில்லை, தங்கச்சியும் அவனைவிட்டு விலகாமல் அழுதுகொண்டிருக்க, அவளோடு இருந்துவிட்டான்.
அவர்கள் இறந்த விடயம் கூட எனக்கோ அப்பம்மாவிற்கோ தெரியாது. யுத்தம் முடிவுற்ற பின்னர், நானும் அப்பம்மாவும் முகாமில் போய் பார்ப்போம் என ஆயத்தம் செய்தபோதுதான், யார் மூலமாகவோ அண்ணாதான் விடயத்தை அறிவித்திருந்தான்.
அதை நினைத்தபோது இப்போதும் எனது உடல் ஒரு கணம் குலுங்கிச் சரிகிறது. அண்ணாவின் நண்பன் ஒருவரின் உறவினர்தான் வந்து விடயத்தை எங்களுக்குச் சொன்னார். கேட்ட உடனே அப்பம்மா மயங்கிவிட்டா, பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்துதான் உடனடியாக வைத்தியரை வரவைத்தனர். நானோ, சுரணையற்றவன் போல சுவரில் சாய்ந்தபடி அப்படியே இருந்துவிட்டேன்.
என் கண்ணில் வழிந்த கண்ணீரைச் சுண்டிவிட்டுக்கொண்டேன். இதயம் இப்போதும் ஒருமுறை நொறுங்கிப்போனது. ‘இறுதியாக ஒருமுறையேனும் அவர்களைப் பார்க்க முடியவில்லையே’ என்ற ஏக்கம் என் மனதில் தீயாய் எரிந்து கொண்டிருந்தது. எரிந்துகொண்டே இருக்கிறது.
முட்கம்பி வேலிக்குள் என் அண்ணனையும் தங்கச்சியையும் மாமா குடும்பத்தினருடன் கண்டபோது எனக்கு ஏற்பட்ட துயரத்தை வார்த்தைகளால் சொல்லிவிடமுடியாது. அதுதான் நான் முகாமிற்குச் சென்ற கடைசியும் முதலுமான நாள்.
பணத்தைக் கொட்டி சித்தப்பா, அண்ணனையும் தங்கச்சியையும் வெளியே கொண்டு வந்துவிட்டதோடு எங்கள் மூவரையும் அப்பம்மாவையும் இந்தியாவிற்கு வரவைத்திருந்தார்.
தொடரும்……