எழுதியவர் – கோபிகை.

நான் அப்பம்மாவோடு வந்த சில நாட்களிலேயே சித்தப்பா வெளிநாடு போய்விட்டார். நானும் அப்பம்மாவும்தான் நெல்லியடி வீட்டில் இருந்தோம். அப்பப்போ என் வீட்டில் இருந்து கடிதம் வரும், அப்பாவோ அம்மாவோ எழுதியிருப்பார்கள். அதற்குள் என் தங்கையின் குட்டி குட்டி எழுத்துகளுடன் சின்ன துண்டுக்கடிதம் ஒன்றும் தவறாமல் வந்துவிடும். வீட்டில் இருந்து கடிதம் வரும் நாட்களில் நான் சாப்பிடுவதே இல்லை. என் மகிழ்வான வசந்தகாலம் எனக்குள் ஊஞ்சலாடி உயிர்ப்பிக்கும். நினைவின் நிறைவில் நான் பசியை மறந்துவிடுவேன். சில நாட்களின் பின்னர் புதுப்பாடசாலை, புதிய வாழ்க்கை முறை என நானும் மாறிப் போயிருந்தேன்.
சீராளனும் பகலவனும் முதலில் கடிதம் போட்டுக்கொண்டிருந்தார்கள், நாளடைவில் கடிதப் போக்குவரத்து தாமதமானதில் கடிதம் எழுதுவதும் நின்றுபோனது. அனுமதி எடுத்து, அப்பாவும் அம்மாவும் ஒருமுறை என்னை வந்து பார்த்துவிட்டுப் போனார்கள்.
அம்மா என்னைக் கண்டதும் கதறி அழுது தீர்த்துவிட்டா, அப்பாதான் அம்மாவைச் சமாதானப்படுத்தினார், அம்மாவுக்கு, அப்பாவும் நாங்களும் தான் உலகமாயிருந்தோம், அம்மாவின் சந்தோசங்கள் அதற்குள்தான் அடங்கியிருந்தது. நான் இல்லாதது வீட்டை இருளடைய வைத்துவிட்டதாகவும் தனக்கு மனம் நிம்மதியில்லாமல் இருப்பதாகவும் அம்மா சொன்னபோது நானும் அழுதுவிட்டேன்.
இதையெல்லாம் அம்மா, அப்பம்மாவின் முன்னால் சொல்லவில்லை, அவ. குளிப்பதற்காகச் சென்றபோதுதான் சொன்னா, அம்மாவின் அன்பு என்னை நெகிழ்த்தியது என்றால் அப்பா சொன்ன விடயங்கள் என்னை, ஒரு பெரிய மனிதனாய் உணரவைத்தது.
“அன்பு, அப்பாவால உன்னை விட்டு இருக்கமுடியேல்லைதான்டா, உனக்கு அந்த காடுதான் உலகம் எண்டும், உன்ர நண்பர்கள் எண்டால் உயிரெண்டும் அப்பாவுக்கு தெரியும், ஆனா என்ன செய்யிறது, அப்பம்மாவை தனிய விடுறது நல்லது இல்லைதானே, அவ பாவம், கொஞ்சம் கோபம், கொஞ்சம் பிடிவாதம் இருந்தாலும் என்னில நிறைய பாசம் வைச்சிருந்தவா, திடீரெண்டு நான் அவவின்ரை கையைவிட்டுப் போனது, அவவுக்குப் பெரிய அதிர்ச்சி, வெளியில காட்டுறது இல்லையே தவிர மனசால உடைஞ்சிட்டா,”
“அப்பா இருந்து அவவை எப்பிடி கவனிப்பனோ, அதை நீ அப்பம்மாவுக்குச் செய்யவேணும், என்ர சுயநலத்துக்காக உன்ர அம்மாவை நான் காயப்படுத்திறன் எண்டு எனக்குத் தெரியும், எனக்கு வேற வழி தெரியேல்ல, ஆனா ….அன்பு…உன்னைக் கண்டதும் இப்பிடி கதறி அழுத உன்ர அம்மா, இதுவரைக்கும், ‘என்ர பிள்ளையை என்னைவிட்டு பிரிச்சு அனுப்பிபோட்டியளே’ எண்டு ஒரு வார்த்தைகூட சொல்லேல்ல, அதுதான்…அதுதான்…எனக்கு குற்ற உணர்ச்சியா கிடக்கு,”
அப்பா சொல்லிமுடிப்பதற்குள் அருகில் வந்த அம்மா, “என்ன சொல்லுறியள், மாமியை கவனிக்கவேண்டியது எனக்கும் கடமைதானே, உங்கட கடமை எனக்கில்லையே, என்ர பிள்ளை அப்பிடி ஒண்டும் நினைக்கமாட்டான்…என்னராசா” என்றதும்
அப்பா, அம்மாவைப் பார்த்த அந்தப் பார்வையில் இருந்தது…….. அதீத அன்பியல்….கபடமில்லாத காதல் என்பதை நான் பின்னாளில் உணர்ந்துகொண்டேன்.
தொடரும்…