எழுதியவர்- கோபிகை.

அதன் பின்னர் நான் படிப்பதற்காக அப்பம்மாவுடன் யாழ்ப்பாணம் போய்விட்டேன். நெல்லியடி மத்திய கல்லூரியில் தான் என் கல்விக்காலம் கழிந்தது.
வீட்டிற்கு வந்த அப்பம்மாவும் சித்தப்பாவும் தங்களுடன் என்னை அனுப்பிவிடும்படியும், சில நாட்களில் சித்தப்பாவும் வெளிநாடு போகவுள்ளதால் பாட்டி தனித்து எனவும் கேட்டபோது அப்பாவால் மறுக்க முடியவில்லை.
அப்பாவின் மனம் ‘அலையில் துரும்பென’ தவிப்பது எனக்குப் புரிந்தது. என்னைப்பிரிய முடியாதென்றாலும் அப்பம்மாவிற்கு மறுப்பாக பதில் சொல்லவும் அவரால் முடியாது.
அம்மா பாவம், இதுவரை அவரை ஏற்றுக்கொள்ளாத மாமியார், வீடு தேடி வந்தது பேரின்பமாக இருக்க, அவரே என்னை தன்னோடு அனுப்பும்படி வேண்டிக்கேட்க, அம்மாவால் என்ன சொல்லமுடியும்.
தங்கை மட்டும்தான் ‘அண்ணா போகப்போறியா? நீ போகாத’ என மெதுவாக என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தாள். அண்ணா, பேசாமல் நின்றுவிட்டான், ‘அப்பப்போ வரும் சின்னச் சண்டைகள் இனி இல்லை’ என மகிழ்ந்திருப்பானோ தெரியாது.
அம்மாவும் அப்பாவும் என்னைப் பார்க்க, நான் தலையை மட்டும் ‘சரி’ என்பதுபோல ஆட்டினேன். அப்பம்மா, ஓடிவந்து என் கரங்களை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டபோது அந்த அன்பின் ஏக்கம் எனக்கும் புரிந்தது.
அப்பாவைப் பிரிந்திருந்த ஏக்கம், அப்பம்மாவின் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது என்பதை நன்றாக உணரமுடிந்தது. சித்தப்பா எதுவும் பேசவில்லை. தங்கையை அருகில் அழைக்க, அவள் போகவும் இல்லை,
தொண்டையைச் செருமியபடி அப்பம்மா இப்படிச் சொன்னா, ” எத்தினை வருசமாச்சு, அம்மா வைராக்கியமானவா எண்டு உனக்கு தெரியும், ஆனா அம்மாவுக்கு உன்னில பாசம் எண்டும் தெரியம்தானே, ஒரு தரமேனும் என்னை வந்து பாக்கவேணும் எண்டு நீ நினைக்கவேயில்லை.
இத்தனை வருசம் என்னைவிட்டு இருந்திட்டாய் எண்டால், மனிசி பிள்ளையளில நீ நிறைய அன்பும் அக்கறையும் வைச்சிருக்கிறாய் எண்டுதானே அர்த்தம், அப்பிடி இருக்க. இவனைப்பிரிஞசிருக்க உன்னால முடியுமே?”
அந்தக் கணம்தான், அப்பா உடைஞ்சுபோய் நான் பாத்தது, கலங்கி அழுத அப்பாவை நானும் அண்ணாவும் அணைத்துக்கொள்ள, தங்கைச்சி ஓடிவந்து கட்டிக்கொண்டாள்.
அம்மாவும் அழ, சித்தப்பாவும் அழுதிட்டார்.
அம்மா கோழிக்கறி சமைத்து, இருவருக்கும் சாப்பாடு கொடுக்க, அப்பா, எங்கள் காணியில் இருந்த அத்தனை பழவகை, கீரை வகைகளையும் பிடுங்கி கட்டிக்கொடுக்க, வரும் போது வந்த மாதிரி இல்லாமல் இனிய மனநிலையோடுதான் அவர்கள் எங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டனர்.
மனதோரம் முள்ளிவாய்க்கால் மண்ணில் நான் ஓடி விளையாடிய சுகந்தமான பொழுதுகளைச் சுமந்துகொண்டு, நானும் அன்றே அப்பம்மாவுடனும் சித்தப்பாவுடனும் வடமராட்சி நோக்கி புறப்பட்டு விட்டேன்.
தொடரும்…