
வெண்மேகங்களை ஸ்பரிசித்தபடி ஜோன் ஒவ் கெனடி விமான நிலையத்தில் இருந்து பயணித்தது அந்த எயார்வெயிஸ் கட்டார் விமானம். சாய்ந்து அமர்ந்தபடி பெரிய மூச்சொன்றை எடுத்து என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.
நான் வாழ்ந்த நியூயோக் சிற்றி மெல்ல மெல்ல புள்ளியாகிக் கொண்டிருந்தது, மின்மினிப் பூச்சியைப்போல அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒளித்துகள்கள்……..
இன்னும் இரண்டே நாட்கள், என் மண்ணை முத்தமிட்டு அள்ளிக் கொள்வேன், என் தாய் மண்ணில் என் கால் பதியும். என் மூச்சுக்காற்று என் மண்ணோடு கலந்து மகிழும், இத்தனை ஆண்டுகளாய் என்னை அழுத்திநின்ற அந்த எண்ணச் சிலுவைகள் மெல்ல கழன்று கொள்ளும்.
வீட்டை ஒட்டிய பனந்தோப்பும், சற்றே தள்ளியிருக்கும் மரக்காடும் என்னை நலம் விசாரிக்கும். தூக்கணாங்குருவிகள் என்னைத்தேடி வரும், புலுணிகள் வந்து என்னில் பூச்சொரியும். வீரையும் பாலையும் கூட வேகக்காற்றை தூதனுப்பி என்னை தொட்டிழுக்கும்.
நீலக்கடல் என் நெஞ்சம் தழுவும். அலைகளோ எனக்காய் ஆர்ப்பரிக்கும். துள்ளி ஓடும் வெள்ளி மீன்கள் கூட என் பெயரை சொல்லிச் செல்லுமே……
வாகை மரப்பூக்கள் எல்லாம் வரிசை கட்டும். நாவலும் எருக்கலையும் சேர்ந்து சிரிக்கும். சேற்று நில புற்கள் எல்லாம் சங்கேத மொழி பேசும்…கண்டல் மரங்களும் மகிள மரங்களும் எனக்கு சாமரம் வீசும்….மருத மரக்காற்று என்னை தழுவிக்கொள்ளும்.
நந்திக்கடல் நயனம் விரிக்கும், என் வரவை அறிந்து அது புன்னகைக்கும். செங்காந்தள் என்னை வரவேற்கும்……சிட்டுக்குருவிகள் என்னோடு செல்ல மொழி பேசும்.
உலகத் தமிழர் மனங்களில் எல்லாம் என் மண்ணின் பெயர் உறைந்து கிடக்கிறதே……
அப்பப்பா,என் கனவுகள் விரிந்தவை, விசித்திரமானவை. எதை எதையோ இலக்கு வைத்து ஓடும் இந்த உலகத்தில் இயற்கையை நோக்கி ஓடும் நான் யாரென்று நினைக்கிறீர்களா?
உயிர் துடிக்கும் தாய்நாட்டு நினைவுகளை எனக்குள்ளே புதைத்தபடி ஆண்டுகள் பலவற்றை வெளிநாட்டில் கழித்துவிட்டு இன்று தாய்த்தேசம் நோக்கி பயணிக்கும் மனிதப்பறவை நான், என் வேர் முள்ளிவாய்க்கால் மண்ணில் தான் இருக்கிறது.
நான், குருதி உறைந்து உரமாகிக் கிடக்கும் அந்த மண்ணில் பிறப்பெடுத்தவன் ………
என்னோடு பயணியுங்கள், ஒரு காவியம் புரியும்……..
தொடரும்…..
கோபிகை