
நான் தனியாக காட்டுக்குள் போய்விட்டு வந்தது தெரிந்ததும் என் நண்பர்கள் கோபப்பட்டார்கள், நான் ஒருவாறு அவர்களை சமானப்படுத்திவிட்டு ‘விரைவில் மீண்டும் போவோம்’ எனச் சொன்னதால் கேட்டுக்கொண்டார்கள்.
அன்று ஒரு மழை நாள், எங்கள் ஊரில் இருந்த ஆலமரம் மிகப் பெரியது, வீதியோரமாக நீண்டிருக்கும் பூவரசு மரங்களின் வரிசை, போர் வீரர்களின் அணி வகுப்பு போல இருக்கும். அந்த ஆலமரத்தடியில் இளவட்டங்கள் அதிகம் ஒன்று கூடி நிற்பார்கள், நாங்கள் ஓரளவு சிறு வயதினர் என்பதால் அங்கு செல்வது குறைவு,
மழை இருட்டிக்கொண்டிருந்தது, புழுதியை வாரி இறைத்த காற்று வாசத்தோடு வீசிக் கொண்டிருந்தது.. . நானும் சீராளனும் சைக்கிளில் சென்று கொண்டிருந்தோம்,
நான் இருக்கையில் அமர்ந்தபடி ஓட பின்னால் கரியலில் இருந்தபடி பெடலை தானும் உழக்கிக் கொண்டிருந்தான் சீராளன், எங்கள் சைக்கிளை பிடித்தபடி தான் உளக்காமலே சைக்கிளில் வந்து கொண்டிருந்தான் வானகன்,
ஆலமரத்தடியில் செல்லும் போது மழை பலத்து பெய்யத் தொடங்கியதால் மரத்துக்கு கீழே நிற்பதற்கு நினைத்து மரத்தடிக்குச் சென்றோம்,
‘சனிப்பிடிச்ச மழை’ திட்டிக் கொண்டு கூடவே வந்த வானகனிடம் முறைப்பாய் பார்வையைத் திரும்பினேன்,
‘போச்சுடா…..’ ” ‘ஏதோ வியாக்கியானம் சொல்லப்போறான்’ ” சீராளன் வானகனிடம் முணுமுணுத்தது எனக்கும் கேட்டது,
“வியாக்கியானம் ஒண்டும் இல்லை, சும்மா மழையை திட்டாத எண்டுதான் சொல்ல நினைச்சன், “
“கேட்டுப் போட்டுதாடா…”
“ம்ம்……” தலையை மட்டும் ஆட்டினேன்….
என் தோளில் கையைப் போட்டுக்கொண்டே, ‘ பகிடிடா ‘ என்ற சீராளனிடமோ, சிரித்தபடி தலையை ஆட்டிய வானகனிடமோ நான் எதுவும் சொல்லவில்லை.
மழை வந்ததும் நாம் மகிழ்ச்சி அடைகிறோமோ இல்லையோ ஒரு விவசாயியின் கண்ணில் தெரியும் ஆனந்தத்திற்கும் மனதில் தோன்றும் உவகைக்கும் அளவுண்டோ?
விதைகள் விழி திறக்கும் போது அவர்களின் உள்ளங்கள் உணரும் பேரின்பத்தின் எல்லையை அளந்திடத்தான் ஆகுமோ
எனக்குள்ளே ஊடுருவிய எண்ண ஓட்டங்களை எப்படியும் கணித்து விடுவதில் சீராளன் கெட்டிக்காரன்.
“என்னடா யோசிக்கிறாய், எங்களுக்கும் சொல்லு, நீ சொல்லும் போது புத்தகங்களே சொல்லுற மாதிரி இருக்கும் டா, ” என்றான்,
நான் மெளனமாக சற்று தள்ளி நின்று காகிதத்தில் கப்பல் விட்டுக் கொண்டிருந்த வானகனைக் காட்டினேன்,
“அடப்பாவி…..இன்னும் குழந்தை பிள்ளை மாதிரி என்ன செய்யிறான் எண்டு பாருடா…..”
இருவரும் சிரித்துக்கொண்டே அவனிடம் சென்றோம்….
தொடரும்….
கோபிகை