
விழிகளால் வானவட்டத்தை அளவெடுத்து பதுங்கி வாழப் பழகிக்கொண்டவர்கள் நாங்கள். அது போர்க்காலம் தான், ஆனால் எங்கள் கனவுகள் எங்கள் மண்ணில் உயிர்ப்புடன் தான் இருந்தது.
கேற்றடியில் தொடர்ந்து சைக்கிள் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது, நான்தான் எட்டிப் பார்த்தேன், என் மைத்துனன் ஆதித்தன் நின்றுகொண்டிருந்தான்.
“உள்ள வாடா ….”
சைக்கிளை உருட்டியபடி வந்து அமர்ந்தவன்,
‘மாமி, நாளைக்கு இரவுக்கு வீட்ட படம் போடுறதாம், அம்மா சொல்லிப்போட்டு வரச்சொன்னவா’ என்றான் அம்மாவிடம்.
அம்மாவின் முகத்தில் ஆயிரம் வோல்ரேஜ் ஒளிர்வு, ‘சரி…சரி..இரு, பலாப்பழம் பழுத்துக்கிடக்கு, வெட்டித்தாறன் கொண்டுபோ, அதோட அந்த முத்தின அன்னமுன்னாவிலையும் அஞ்சாறு புடுங்கித்தாறன், கொண்டுபோய் பழுக்கவைச்சு சாப்பிடு’ என்றுவிட்டு அவசரமாக சமையல் கட்டிற்குள் நுழைந்து அவனுக்கு சாப்பாடு போட்டுக்கொண்டு வந்து குடுக்க, அவன் மளமளவென்று சாப்பிடத் தொடங்கினான்.
‘பிள்ளைக்கு நல்ல பசி போல, கனக்க வீட்டில சொல்லிப்போட்டு வாறியே’ தலையைத் தடவிக்கொண்டே அம்மா கேட்பது என் காதிலும் விழந்தது. இது ஒரு விசயம், அந்த நாட்களில் படம் போடுவதைச் சொல்லப்போகும் வாண்டு அன்று ராஜா தான்….அவருக்கு சாப்பாடு என்ன, உபசரிப்பு என்ன, அந்நேரத்து வரவேற்பு களைகட்டும். அவர்கள், மற்றவர்களை, ‘அற்ப பதரே’ என்பது போல பார்த்துவைப்பார்கள், அப்படித்தான் பன்னிரண்டு வயதான அதித்தனும் பார்த்தான்.
கொஞ்சம் கோபமாக நானும் பார்க்க அவன் பேசாமல் சாப்பிடத் தொடங்கினான்.
சாதாரணமாக திரைப்படம் பார்ப்பதென்றால் எப்போதும் பார்த்துவிட முடியாது அந்நாட்களில்…., ரீவி, டெக், இஞ்ஜின் எல்லாம் வாடகைக்கு எடுத்து ஒரே நாளில் ஐந்து படம் பார்த்துவிடுவோம். பாதி ஊரே திரண்டிருந்து படம் பார்ப்போம், ஒரு வீட்டில் படம் போடுவதென்றால் அயலூரில் இருக்கும் உறவினர் வீடுகளுக்கெல்லாம் முதல் நாளே தகவல் சைக்கிளில் இறக்கை கட்டிப் பறந்துவிடும்.
படம் போடும் நாளில் ஆறு மணிக்கு முன்னர் அனைவரும் ஒன்றுகூடி விடுவார்கள். மைத்துனியர், சகோதரியர் சண்டைகள் பல படம் போடும் நிகழ்வால் காணாமல் போவதுண்டு. அன்றைய இரவில் 10, 15 இறாத்தல் பாண் வாங்கி, இரண்டு தேங்காய் உடைத்து சம்பல் இடித்து வந்திருக்கும் உறவுகளுக்கு விருந்தோம்பல் நடக்கும்.
‘நான் வரவில்லை’ என்று பலமுறை சொல்லியும் அம்மா விடவில்லை, அம்மாவிற்கு, என்னைத் தனியவிட்டு போகவும் மனமில்லை, படம் பார்க்க போகாமல் நிற்கவும் மனமில்லை, என்ன செய்வதென யோசித்தேன், என் நண்பர்களும் போவோம் என நச்சரித்ததால் ஒருவாறு புறப்பட்டேன்.
அப்பாவுடன் சாளி மோட்டார் சைக்கிளில் அம்மாவும் தங்கச்சியும் போய்விட, அண்ணா தன்னுடைய நண்பர்களோடு போய்விட்டான். நானும் சீராளனும் ஒரு சைக்கிளிலும் வானகனும், கோமகனும் ஒரு சைக்கிளிலுமாக வெளிக்கிட்டோம்.
“என்னடா அன்பு…..யோசினையா வாறாய், அத்தை மகள் ரத்தினத்தை பாக்கப்போற யோசினையோ????” கோமகன் கேட்க நான் திரும்புவதற்குள் அவனை முறைத்தான் சீராளன்.
தொடரும்….
கோபிகை