
வெண்ணிலா என்றொரு குட்டிப்பெண்
3ஆம் வகுப்பு ஏ பிரிவில்
படிக்கிறாள்
எப்போதும் கணக்கில் 98 வாங்குவாள்
2 மார்க்
முறுக்கு விக்கும் பாட்டிக்காக
விட்டு கொடுப்பாள்
ஒரு பொருளின் விலை 2 ருபாய்
என்றால்
பத்து ரூபாய்க்கு எத்தனை பொருள் கிடைக்கும்
என்ற கேள்வி எல்லாத் தேர்விலும் வரும்
வெண்ணிலா அதற்கு 6 என்று
எழுதுவாள்
2 மார்க் குறைந்துவிடும்
அவள் அடிக்கடி செல்லும்
பூங்காவில் தான்
முறுக்கு பாட்டி இருப்பார்
வெண்ணிலா
அம்மாவிடம் 10 ருபாய்
வாங்கிவருவாள்
அவர் தரவில்லையாயென்றால்
பக்கத்து வீட்டு அக்காவிடம்
முறுக்கு வாங்கிக்கொடுக்கவா என்று கேட்டு
10 ரூபாய் வாங்கி வருவாள்
முறுக்குப் பாட்டி
வெண்ணிலாவிற்கு 6 முறுக்கு கொடுப்பார்
வெண்ணிலா இதனால் 2 மார்க்
இழந்த நாளில்
முறுக்குப் பாட்டியிடம் கேட்டாள்
5 வருமா , 6 வருமா என்று
மத்தவங்களுக்கு 5
உனக்குமட்டும் 6
ஏன் தெரியுமா
நீ என்னோட ராசாத்தி
என்றார்கள்
அதற்கு பிறகு வந்த
எல்லாத் தேர்விலும்
அவள் அந்தக் கேள்விக்கு விடையாக
6 என்றே எழுதினாள்
எல்லாத் தேர்விலும்
வெண்ணிலாவிற்கு 98 மார்க் தான்
கிடைத்தது.
தமிழ்செல்வன்