எழுதியவர் – துளசிவேந்தன்
பெரும்பாலும்
ஒரு மஞ்சள் பையை
உடன் சுமக்கவே,
பாட்டியிடம்
ஒப்படைக்கப்பட்டது
என் குழந்தை பருவம்,
வெற்றிலை கட்டு,
தேன் போத்தல்,
மாவடு,
கனகாம்பரம்,
கருவாடு,
வரிக்கத்திரிக்காய்,
கண்ணாடி வளையல்,
கருப்பட்டி,
புகையிலை சுருட்டு,
சீம்பால் சீசா,
பலாக்கொட்டை,
நெளியும் விரால்,
இப்படி
ஏதோவொன்றால்,
எப்போதும்
பாதி நிறைத்தே
வைத்திருப்பாள்
நான் சுமந்துவரும்
மஞ்சள் பையை,
வீட்டுக்கு வந்ததும்
கடைசியாய்,
வெறும் பையை
என் முன்னே நீட்டுவாள்,
வேக வேகமாய்
துழாவியெடுக்கையில்
கையில் சிக்குமொரு
பொரி உருண்டையோ,
கடலை மிட்டாயோ,
இப்படியாய்,
பாரம் தாங்க மாட்டேனென்று,
கடைசிவரை,
பாதிக்கு மேல்
அந்த மஞ்சள் பையை
நிரப்பியதே இல்லை,
எனை முழுமையாய்
அன்பால் நிரப்பியிருந்த பாட்டி…