
ஒருவரின் புறக்கணிப்பையும், விலகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்
சகித்து வாழ பழகிக் கொள்ளுங்கள்.
புறக்கணிப்பும், விலகுதலும் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துளி உயிரிலும் வியாபித்து கிடக்கிறது.
எனக்கு வேண்டாம் என்று மனிதன் அதை ஒருபோதும்
புறந்தள்ள முடியாது.
மலரில் தேன் உண்ணும் பூச்சிகள் எத்தனை என்று
பலருக்கும் தெரியாது
அது
மலருக்கும் தெரியாது
பூச்சிகளுக்கும் தெரியாது.
ஒரு செடியில் மலர்ந்த
முதல் தளிர் உதிரும்போது
அந்த செடியின் மனநிலை என்னவாக இருக்கும் என்று எனக்கு தெரியாது
ஆனால்
உதிரும் இலைகளுக்கெல்லாம்
மரங்கள்
அழுவது கிடையாது.
குஞ்சுகளை தாய்ப்பறவை
கொத்தி விரட்டும்
அல்லது
சிறகு முளைத்த பின் தானாகவே
பிரிந்து, பறந்து செல்லும்.
மனிதர்கள் ஒருவரை ஒருவர் புறக்கணித்து கொள்வார்கள்
அல்லது ஒருவரால்
புறக்கணிக்கப் படுவார்கள்.
சுவாரஸ்யத்திற்கு ஒரு எல்லை உண்டு
அவை எல்லா நாளும் சுவாரசியமாக இருப்பதில்லை
சுவாரஸ்யத்தின் முடிவில் புறக்கணிப்பிற்கும்
ஒரு வாய்ப்பு எப்போதும் உள்ளது.
புறக்கணிக்கப்படுவதற்கு பெரிதாக எந்த காரணங்களும் தேவையில்லை
ஏதோ ஒரு செயலோ,
வார்த்தையோ
ஏதோ ஒரு பார்வையோ
அல்லது
ஏதோ ஒரு மௌனமோ போதுமானது.
நேசம் நேசிக்க படலாம்
ஆனால்
பெரும்பாலான நேசம்
புறக்கணிப்பை நோக்கியே
வந்து நிற்கும்.
நேசிக்கப்படுதலை போல
ஒவ்வொரு
புறக்கணிப்பையும்
கொண்டாடுங்கள்.
குழந்தை குமரியாகி பிறந்த வீட்டிலிருந்து
புகுந்த வீட்டுக்கு போகும்போது
அவள் தூக்கி கொஞ்சி விளையாடிய பொம்மைகள் அழுதால்
யாருக்கு கேட்கப் போகிறது??
~விசித்திரன்