எழுதியவர் – தூரா.துளசிதாசன்

உப்பங்கழிகளில் மணம்வீசும்
உவர்நீர்மலர் மலர்ந்திருக்கும்
இராப்பொழுது வேளையில்
வெண் சங்குகள்
விளரியாழ் மீட்டிட
அலைமகள் இனிதாய்
செவ்வழிப் பண்ணை பாடிட…
கலங்கரைவிளக்கின் ஒளிக்கை
அசைவின் திசையில்
மிதந்திடும் நாவாயில்
நித்திலம் தேடி
நீர்க்காக்கை யொன்று
பயணமானது ..
தலைவி அவளின்
பெருவருத்தம் நீங்கிட
பெருமகிழ்ச்சி வீடெங்களிலும்
நிறைந்து விட
வஞ்சிரமும் கானாங்
கெளுத்தியும் நிரம்பிட
வருவேனென்று சூளுரைத்து
நளிநீரில் பயணமானான்
துறைவ னொருவன் ..
உரவுக் கடலோரம்
நுளைச்சி யொருத்தி
உழந்த மனதோடு
காத்திருந்தாள்
தலைவனின் வருகையை
யெண்ணி….
எல்லை இல்லா
கடலில்
இரை தேடியது
நீர்ப்பறவை…
மீனுக்காக காத்திருந்து
காய்ந்தது கருவாடாய்
கரையில்…
உப்புக்காற்றில்
உறங்கியவன்
குளிர் நிலவொளியில்
நனைந்து,
மீனுக்காக வலை
வீசியே மீனவனே
இரையாகுகிறான்
அதிகாரவர்க்கத் துப்பாக்கிகளின்
தோட்டாக்களுக்கு….