-அகன்-

சாலையின் ஓரத்தில் மழை பாதி வெளிக்கொண்டு வந்திருந்த ஒரு சகதி பூசிய ஒருரூபாயைக் கடந்து போகின்றேன்..
எடுப்பானா இல்லையாவென ஏங்கிப் போய் என்னைப் பார்த்தபடியிருந்த அதற்காகத்தான் எத்தனை போராட்டங்கள் பள்ளிக்காலத்தில்.
வெள்ளைச் சட்டையும் காக்கி டவுசரும் போட்டு பவுடர் பூசி பொட்டுவைத்து பையைத் தூக்கி தோளில் போட்டபின்.. அம்மா முன்போய் நான் ராகமாய் கத்திசொல்லும் அந்த “போய்ட்டு வாரேம்மா” என்னும் சத்தத்திற்குப் பின் என் கைகளில் பத்திரமாகத் திணிக்கப்படும் அந்த வாங்கித்தின்னும் காசு. பத்து இருபதென பைசாக்களில் கொடுக்கப்பட்டு வகுப்பு கூடக்கூட படிப்படியாக உயர்த்தப்பட்டு ஐந்தாம் வகுப்பில் முதன்முதலில் நான் வாங்கிய அந்த முழு ஒருரூபாயின் நினைவு என் நடையின் வேகத்தைத் தளர்தியது..
வேலைதேடித் திரிந்த காலங்களில் சில இறுக்கிபிடித்த நாட்களில் பத்து ரூபாய்க்கு சில்லறையை தேடித் தடவிய பின்னும் ஒன்பதுரூபாய்க்கு மேல் சேர்ந்திடாத சில்லறையால்..
உணவு தவிர்க்கப்பட்ட வேளைகளின் அந்த பசியின் நினைவு என் நடையின் வேகத்தை இன்னும் கொஞ்சம் தளர்த்தியது..
குறைவான ஆட்களுடன் பூக்கள் தூவப்பட்டபடி என்னை விரைவாகக் கடக்கும் அந்த சொர்க்கரத வாகனத்தில் அமைதியாய் படுத்திருப்பவரின் நெற்றியை ஆர்வமாய் என் கண்கள் தேடிப் பார்க்கிறது..
அதில் பதிக்கப்பட்டிருக்கும் காசு எத்தனை ரூபெயென.ஆனால் அந்த வெற்றிடமாயிருந்த நெற்றி ஏனோ என் நடையின் வேகத்தை இன்னும் கொஞ்சம் தளர்த்தியது..
நான் தாண்டிவந்த அந்த ஒருரூபாய் இன்னும் கூட என்னைப் பார்ப்பதுபோல் உணர்வே..வெடுக்கென நான் வந்ததிசையே திரும்பி அதை நோக்கி நடக்க துவங்கினேன். இதோ என் கால்களுக்குக் கீழ் கவலையாகக் கிடக்கும் அதை வேகமாக எடுத்து துடைக்காமலே என் பையில் போட்டுக் கொண்டு முகமேறிய மகிழ்ச்சியுடன் தளர்ந்த என் நடையை வேகப்படுத்தி போய்சேர்ந்தேன் கடைக்கு..
வாங்கவேண்டிய எல்லாம் வாங்கி கொடுக்கல் வாங்கல் முடிந்தபிறகு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மிட்டாய் டப்பாக்களை நோட்டம் விட்டபடியே அவரிடம் சுத்துமிட்டாய் இருக்கிறதா என்று கேட்க..அவரோ என்னை சுத்திப்பார்த்து சிரித்தபடியே இருக்கென டப்பாவைத் திறந்து ஒன்றை எடுத்து நீட்டினார்.
நான் எவ்வளவு எனக்கேட்கும் முன்பே அவர்சொன்ன அந்த ஒருரூபாயை என் பையிலிருந்து எடுத்து நீட்டியபோது அதை வாங்கியவர் மேலிருந்த சகதியைச் சுரண்டிப்பார்த்து உறுதிசெய்து
அவரின் பணப்பெட்டியில் தூக்கிப்போட்டபின்..
நான் அதற்கொரு கூடுதலான மதிப்பை பெற்றுத்தந்த மகிழ்ச்சியுடன் அந்த சொர்க்கரதம் வீசிச்சென்ற
பூக்களின்மேல் மெதுவாக கால்களை ஊன்றியபடி வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன்.