எழுதியவர் – றிஸ்வான்

தாயீ கொல்லாபுரி உசுரு இழை அருந்துடாம பார்த்துத்துக்க.. போயிக்கிட்டு இருக்க உசுர இழுத்து பிடிக்க வேற வழி தெரியல…சாமி..
பூமாக்கிழவிக்கு மடியில இருக்குற சுருக்குப் பைதான் முதலுதவிப் பெட்டி.. சுருக்குப்பையை எடுத்து வசம்பு துண்டை நெருப்புல காட்டி கொளுத்தி மூச்சி பேச்சி இல்லாம கெடக்கும் புள்ளதாச்சி மூக்கு துவாரத்துல புகைய்ச்சல் போட்டுச்சு …கொஞ்ச நேரத்துல புகை மூக்குல ஏறுச்சி..உடம்புக்குள்ளாற காத்து பையில புகை நிரம்பி மூச்சு முட்டி பக்கு பக்குன்னு இருமல் வந்துச்சி உஷாரும் வந்துச்சி..
பூமாக்கிழவிக்கும் மனசுல தெம்பும் வந்துச்சி. உசுரு அடங்கி கிட்டு இருக்குற நேரத்துல மூக்கு துவாரத்துல பொ கைய்ச்சல் போட்டாக்கா மூச்சு முட்டி பட்டுன்னு இருக்குற கொஞ்ச உசுரும் போவும்னு கெழவிக்கு தெரியாது திடும் திப்புன்னு அது மனசுக்கு தோணறதை செஞ்சிது..
புள்ளத்தாச்சி பொண்ணுக்கு இறுகி பல்கட்டிக்கிட்டு பூட்டிகிட்டு கிடந்த தாடைகளை லேசா இளகி விட்டுச்சு. வெளிக்காத்து உள்ளாராப் போக தரையில போட்ட மீனாட்டும் வாயை திறந்து திறந்து ஆ.. ன்னு வெளிமூச்சு காத்தை உள்ளுக்குள் ஆவேசமா இழுத்து வச்சிது..புள்ளத்தாச் சிப் பொண்ணு..பக்கு பக்குன்னு இருமுச்சு.. இருமுன இருமல்ல உள் காத்து வெளியாகி வெளிக்காத்து ஒடம்புக்குள்ளர பரவ ஆரம்பிச்சுது புள்ளத்தாச்சி பொண்ணுக்கு..பூமாக்கிழவிக்கு நம்பிக்கை வந்துடுச்சி…போராடி பாத்துப் புடலாம்..
என்னபெத்த தாயீ கண்ணைத்திற பூமா ஆத்தா இருக்கேன்…பக்கத்துல..
யாரடி அங்கே.. வேப்பெண்ணைய கொண்டாங்கடி .. கிண்ணியில சீக்கிரம்.. புள்ளத்தாச்சி உசுர கையில புடிச்சுகிட்டு நிக்கேன்..சுருக்கா… வாங்கடி.. செத்த மட்டைகளா..
சத்தம் ஒசக்கமா உக்கிரமா வந்துச்சி பூமாக் கிழவிக்கு. உசுரங்களை காப்பாத்தும் போது ராக்காச்சி சாமிக்கு வரும் ருத்திர தாண்டவம்…வந்தாப்போல ஒத்தை நாடி உடம்புல..பதட்டம் உதறல் கண்ணு முழி எல்லாம் பிதுங்கிடுச்சி..கொஞ்ச நேரத்துல….
பூமாக்கிழவிக்கு பதட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைஞ்சி நிதானதுக்கு வந்துச்சி..
வேப்பெண்ணையில கைகளை முக்கிஎடுத்து
வானத்தை பாத்து கைகளை நீட்டி தாயே கொல்லாபுரி ஆத்தா நீதான் தொணைக்கு நிக்கனும் புள்ளத்தாச்சி வவுத்துலவெப்பேண்ணெயை தடவி அழுத்தி நீவி நீவி விட்டு குழந்தையோட நிலைமையை கணக்கு பாத்துச்சி.. புள்ளத்தாச்சி வயித்துல கொழந்தை நெஞ்சுக்குழிக்கு மேல ஏறி கெடந்துச்சு.. புள்ளத்தாச்சி க்கு மூச்சு முட்டுச்சு கெழவி அழுத்தமா புள்ளதாச்சி வவுத்தை கீழே கால்வாட்டம் பக்கமா அழுத்தி அழுத்தி நீவி வீட்டுச்சி… கூனிப்பாளயத்தாரு பொஞ்சாதி உசுரு போறாப்பல கத்துச்சி வலியில…உதடுகளை கடிச்சி ரத்தம் கொட்டுச்சி.
தாயீ கொஞ்சம் பொறுத்துக்க உன் புள்ள முகத்தை பாக்க வேணாமா.. வைராக்கியத்தோட உசுர முடிஞ்சி வை தாயீ.. இடுப்பு வலி எடுக்கனும் …இடுப்பு வலி எடுக்கலைன்னா குழந்தை தாய் வாசல் வழியா வெளியாவறது கஷ்டமாயிடும்… முக்கு தாயீ மூச்சைப் பிடிச்சி நல்லா முக்கு… இடுப்பு எலும்பு பூவாட்டம் விரியினும் தாயீ..
தாயீ…மறுபடியும் கண்ணை மூடிடாதே பத்து மாசமா உசுருல சொமந்த சின்ன உசுரு செதைஞ்சி போயிரும் …தாயீ
பூமாக்கிழவி புள்ளத்தாச்சிகிட்ட பக்குவமா பேச்சி கொடுத்துகிட்டே வயித்த நீவி.. நீவி கொழந்தை யை நிதானமா நெலைக்கு கொண்டாந்துச்சி…உசுரு வலியில புள்ளத்தாச்சி கத்துச்சி.. கிழவி காதுல வாங்காம காரியத்துல கவனமா இருந்துச்சி..வலியையும் அழுவையிலும் கவனம் பெசகி போச்சுன்னா காரியம் செதஞ்சி சேறாயிடும்..
வேப்பெண்ணெய்யை கைகளை முக்கி முக்கி எடுத்து வயித்துல தடவி நீவி கிட்டே இருந்துச்சி.. வயித்துல இருக்க புள்ளைய கால்மாடு பக்கமா நவுட்டிகிட்டே வந்துச்சி..பூமாக் கிழவி..
ஆத்தா.. ன்னு புள்ளத்தாச்சி உசுரு போராப் போல அலறுச்சு உசுரவிட்டு கத்துச்சி..ஒரு உசுர பூமிக்கு கொண்டுவர பொம்பள படுற உயிர் அவஸ்தை..
என்ன விட்டுடு ஆத்தா நான் செத்து போறேன்..
ஓ… ன்னு தொடச்சியா மூச்சு பிடிச்சி உசுரு வலியில அலறுச்சு…தாடைகள் இரண்டும் வலியில இறுக்கி கிடுக்கி போட்டுக்கிடுச்சி ..மறுபடியும்
பூமாக்கிழவி இரண்டு தாடைகளை விலக்கி வாயில குறுக்கால அகப்பை காம்பை செருகி தாடைகள் ஒன்னு சேர்ந்து இருகாம தடுத்துச்சி இல்லன்னா..நாக்கும் உதடுகளும் தாடைகளுக்கு நடுவே சிக்கி வெட்டிக்கிட்டு இரணமாயிடும்…சில நேரம் பல்லுக்கு இடையில சிக்கி நாக்கும் உதடும் துடிக்க துடிக்க துண்டா விழுந்துடும்
இடுப்பு வலி எடுக்கலன்னா கொழந்தை தாய் வாசல் வழியா வெளியாவாது பொறவு ரெண்டு உசுருங்களுக்கும் ஆபத்தா போயிரும்
கிழவி பக்கத்துல தொணைக்கு நின்ன பொம்பளைங்களுக்கு வேத்து கொட்டுச்சி கைகால் எல்லாம் வெட வெட ன்னு ஆடுச்சு..கெழவிக்கு உசுருங்களை காப்பாத்தனும்னு வைராக்கியம் இருந்துச்சி
ஏண்டி புள்ளய பெக்காதவங்களா நீங்க போங்கடி வெளியே.. போக்கத்த சிறுக்கிங்களா பக்கி மட்டைகளா..கவனத்தை கெடுக்காதீங்க போங்கடி வெளியே..உசுரு எப்ப போவும் ஒப்பாரி வைக்கலாம்னு சூழ்ந்து நிக்கீங்களா..நாயிங்களா..
பூமாகிழவி எல்லாத்தையும் வெளியே வெரட்டி அடிச்சுது…எதுக்கும் ஆளாகாம..கவனம் செதையாம உசுருங்களோட போராடிகிட்டு இருந்துச்சி..
ஆத்தா வயித்த நீவுறத கொஞ்ச நேரம் நிப்பாட்டுச்சி..நிறுத்தி நிதானம் பாத்துச்சி புள்ளத்தாச்சி தொடச்சியா ஆ.. அம்மான்னு துடிச்சி கிட்டே இருந்துச்சி..பூமாக்கிழவி மூஞ்சி லேசா மாறிச்சி..வயித்துல கொழந்தை உசுரோட இருக்கான்னு சந்தேகம்.. வந்துச்சி…

அடியே பொட்டச்சிங்களா..புள்ளத்தாச்சி கசாயம் போட்டு கொண்டாங்கடி…சீக்கிறம்
கொல்லாபுரி தாயே நீ பூமிக்கு ஒரு உசுர அனுப்பறதுக்கு இன்னொரு உசுர வதைக்கணுமா…போதும் தாயீ..
கிழவி புள்ளத்தாச்சி கசாயத்தை ஆத்தி ஆத்தி வெது வெதுப்பா.. புள்ள தாச்சி பொண்ணு வாயில மிடறு, மிடறா ஊத்துச்சி
கூனிபாளயத்தான் பொஞ்சாதி உசுரு போக அலறுச்சி .. வலியில..
அடியே…இடுப்பு வலி வந்துடுச்சிலே…புள்ளத்தாச்சி க்கு இடுப்பு வலி வந்துடுச்சி…ஓடியாங்கடி.. ஓடியாங்க… தாய்க் குடம் ஓடைஞ்சி ஓடுது.. வாங்கடி தொணைக்கு..
நல்லா தலையை காலை.. அழுத்தி பிடிங்கடி புள்ளத்தாச்சி துள்ளி விழுந்திடாம…பூமாக் கிழவி இரண்டு பக்கமும் பக்கவாட்டு இடுப்பை லேசாக இதமாக நீவி விட்டுச்சி..
தாயீ நல்லா முக்கு தாயீ.. உன் உசுர சேத்து வச்சி முக்கு…ஒனக்குள்ள இருக்குற பிஞ்சு உசுரு பூமியைப் பாக்கணும்னு வைராக்கியத்தோடு உசுரை இருக்கி பிடிச்சி முக்கு மூச்சை விட்டுடாதே தாயீ ஒசாரு போச்சுன்னா ரெண்டு உசுருக்கும் ஆபத்து தாயீ…
புள்ள பெத்துட்டு பொம்பள சாவுனும்னு சாமி பொம்பளைங்கள பூமியில படைக்கல தாயீ..தகிரியமா உசுர கையில புடிச்சிக்க..
கிழவி…புள்ளத்தாச்சி இடுப்புலரெண்டு பக்கமும் கட்டை விரல்களை அழுத்தி புள்ளய அங்கிட்டு இங்கிட்டு நகர்ந்து போயிடாம இடுக்கி பிடி போட்டு புடிச்சுக்கிட்டு இரண்டு கைகளையும் புள்ளதாச்சி வயித்துல வச்சி அழுத்தி புள்ளைய கீழ் பக்கமா நவுட்டி நவுட்டி நேக்கா தாய் வாசல் கிட்ட கொண்டு வந்துச்சி முக்கு தாயீ பூமியை கையால நவுட்டிவெளியே தள்ளுராப்போல முக்கு..எண்ணைக்கையோடு வயித்துல பச்சக்குன்னு ஒரு அழுத்து அழுத்துச்சி..
கர்பவாசல் வழியா குழந்தை தாய் வயித்துல இருந்து நழுவி வெளியே தலையை காட்டுச்சி.. கிழவி சட்டுன்னு ஒரு கையில சிசு வோட தலையை பிடிச்சி இழுத்திகிட்டே.. அடிவயித்துல அமுக்கி மொச்சை கோட்டை பிதுக்கி எடுக்குறாப்போல தாயையும் குழந்தையையும் லாவகமா பிரிச்சி எடுத்துச்சி…
ஆ.. ன்னு உசுரு போற அலறல் போட்டுட்டு தாய் உசுரு மயக்கம் போட்டுடுச்சி…தாயை பிரிஞ்சி வெளியே வந்த குழந்தை அழல..மூச்சு எடுக்காம இருந்துச்சு கிழவி வேக வேகமா கர்ப கழிவோட இருந்த குழந்தையின் வாயிலும்.. மூக்கிலும் இருந்த கழிவுகளை வாயால ஊதி ஊதி சுத்தம் பண்ணிட்டு பூமிக்காத்த வாய் வழியா மூக்கு வழியா ஊதி ஊதி குழந்தையோட உடம்புக்குள்ளர இருக்குற காத்து பைய நிரப்புச்சி..லேசா அழுத்தி உள்ளே போன காத்தை வெளியாக்குச்சி..
குழந்தை உடம்பை ஒரு சிலுப்பு சிலுப்பிச்சு…
தொப்புள் கொடியை அறுத்துவிட்டு தாய் உசுருல இருந்து சின்ன உசுர நிரந்தரமா பிரிச்சு எடுத்துச்சி..
கிழவி கர்ப கழிவுகளை சுத்தம் பண்ணிட்டு குழந்தையை தாய் பக்கத்துல படுக்க வச்சிட்டு தரையில உக்காந்து மடியில இருந்த சுருட்டை பத்த வச்சி ஆயாசமா தம் அடிச்சுது..

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal