எழுதியவர் –கோவை_இராஜபுத்திரன்

வெயில் பட்டால் தொட்டால் சிணுங்கிகளை
மண்ணில் உற்பத்தி செய்வாள்
மழைக் காலத்தில் எரியும் நட்சத்திரத்தை வானில் மறைத்து வைப்பாள்
இரவுக் காதலி பயணங்கள் முழுவதும்
நிலவுப் பழத்தை வைத்துக் கொண்டு
பகலின் சன்னல் திறந்து பசிக்கென்று
காடு மேடென மலையெங்கும் சுற்றுவாள்
இதுவரை கண்டிராத பழவேற்காடு கோட்டையில்
எனக்கெனப் பால் ஊற்றிக் கொண்டிருந்தவள்
கிட்ட நெருங்கும்போது ஓடுகளால் மறைக்கிறாள்
நான் உயிரில் நம்பத்தகுந்த
மஞ்சள் கருவாய் ஆயினும்
ஏதுமில்லாத முட்டை ஓடாகவே
ஊரார் கண்களுக்குத் தெரிகிறேன்
அவள் தான் பழங்களைப் பிழிந்து
கிண்ணங்களில் மறைத்து வைக்கிறாள்
அவளின் சிவந்த நெற்றி
செலவழிக்க இயலாத ஒரு ஞாயிற்றுக்கிழமை
நான் தென்றலாக மாறியிருக்கக் கூடும்
அவள் மேனியொரு மின்னலாக
என் நெஞ்சமெங்கும் ஊடுருவுகையில்
எங்கிருந்தோ கேட்கிறது
குச்குச்சென ஒரு ரயிலின் ஓசை