
இராமர் மனைவி சீதையுடனும், தம்பி லட்சுமணனுடனும் கானகம் சென்ற போது, ஒரு சமயம் பல்குநதி தீரத்தில் தங்கியிருந்தார்.
அப்போது ஒரு நாள் ராமரின் பிதாவான தசரதனின் சிரார்த்த தினம் வந்தது.
தந்தைக்குச் சிரார்த்தம் செய்ய ஸ்ரீராமர் பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று அரிசி முதலானவற்றைச் சேகரித்து வரும்படி லட்சுமணனை அனுப்பி வைத்தார். புறப்பட்டுச் சென்ற லட்சுமணன் வெகு நேரமாகியும் வராததால், இராமர் அவனைத் தேடிக்கொண்டு புறப்பட்டார்.
சிரார்த்த காலம் நெருங்கி விட்டது. இருவரும் திரும்பி வரவில்லை.
சீதை தவியாய்த் தவித்தாள். குறித்த நேரத்தில் சிரார்த்தத்தை முடிக்காவிடில் அன்றைய தினம் வீணாகி விடும் என்று வேதனைப்பட்டாள்.
தர்பசம், இங்குதி ஆகிய பழங்களைக் கொண்டு வந்து வேக வைத்து அவற்றால் கிடைக்கும் மாவினால் பிண்டம் செய்து பிதுர்களுக்குச் சமர்ப்பித்தால் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும் என சாஸ்திரத்தில் ஒரு விதி இருக்கிறது.
சிரார்த்த காலம் முடிந்து விடப்போகிறதே என்று தவித்த சீதை, அந்த விதியை நினைவுக்குக் கொண்டுவந்து, அவ்வாறே இங்குதிப் பழங்களைக் கொண்டு வந்து அக்கினியில் வேகவைத்து மாவு எடுத்துப் பிண்டம் செய்து தயாராக வைத்தாள். அந்த நேரத்தில் ராம லட்சுமணர்கள் திரும்பி வந்தாலும் சமைக்க நேரமாகி விடுமல்லவா?
பிண்டத்தைத் தயார் செய்ததும் சீதை, ‘பிதுர்கள் வர நேரமாகிவிட்டதே, கிராமத்துக்குச் சென்றவர்கள் இன்னும் திரும்பவில்லையே’ என்று வருந்தினாள்.
அப்போது அவள் முன்பு பிதுர்கள் தோன்றினர்.
“சீதா! பிண்டத்தை எங்களுக்குச் சமர்ப்பிக்கலாம். மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறோம்” என்று தசரதர் கேட்டார்.
“சுவாமி! என் கணவர் செய்யவேண்டிய காரியத்தை நான் செய்யலாமா? அவர் இல்லாத நேரத்தில் நான் செய்த காரியத்தை அவர் எவ்விதம் நம்புவார்?” என்று வருத்தத்தோடு கேட்டாள் சீதை.
“சீதா, வருத்தப்பட வேண்டாம். காலம் கடந்து விடாமலிருக்க நீயே உன் கையால் எங்களுக்குப் பிண்டம் சமர்ப்பிக்கலாம். அதற்குத் தகுந்த சாட்சிகளை வைத்துக்கொள் போதும்” என்றார் தசரதர்.
அவ்வாறே பல்குநதி, பசு, அக்கினி, தாழை ஆகிய நால்வரையும் சாட்சிகளாக வைத்துக் கொண்டு சீதை பிதுர்களுக்குப் பிண்டம் சமர்ப்பித்தாள். அவர்களும் அதைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியோடு போய்ச் சேர்ந்தனர்.
சிறிது நேரத்துக்கெல்லாம் கிராமத்துக்குச் சென்றிருந்த ராம லட்சுமணர் இருவரும் சாமான்களோடு திரும்பி வந்தனர்.
“சீதா நேரம் ஆகிவிட்டது. மேலும் தாமதம் செய்யாமல் விரைவில் சமையல் முடிக்க வேண்டும். அதற்குள் நாங்களும் நீராடித் திரும்புகிறோம்” என்றார் ராமர்.
அப்போது சீதை அவரைப் பார்த்து, “நாதா! சிரார்த்தம் குறித்த காலத்தில் முடிந்துவிட்டது. நீங்கள் இப்போது செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று சொல்லி நடந்ததைக் கூறினாள்.
“அதெப்படி முடியும், சீதை? கர்த்தாக்கள் நாங்கள் இல்லாமல் அது நடந்ததாக ஆகாதே!” என்றார் ராமர்.
“பிதுர்கள் அதிக நேரம் காத்திருக்க முடியாதென்றனர். அவர்களின் பரிபூரண சம்மதத்தின் பேரில்தான் பிண்டம் அளித்தேன். சாட்சிகளும் இருக்கின்றன” என்று சொன்ன சீதை பல்குநதி, பசு, அக்கினி, தாழை ஆகிய நான்கையும் சாட்சிகளாகக் கூறினாள்.
ராமருக்கு ஆச்சரியமாயிருந்தது, அப்படியும் நடந்திருக்குமா? என்பதை அறிய சாட்சிகள் நால்வரையும் அழைத்துக் கேட்டார்.
பகவான் செய்ய வேண்டிய ஒரு காரியத்தில் அவர் வருவதற்குள் அவசரப்பட்டுக் கொண்டு சீதை முடித்து விட்டதற்குத் தாங்கள் சாட்சிகளாக இருந்தோம் என்பதை அறிந்தால் அவர் கோபிப்பாரே என்ற பயத்தில் அவை நான்கும் தங்களுக்கு எதுவும் தெரியாதென்று சொல்லி விட்டன.
ராமருக்குக் கோபம் வந்துவிட்டது. அந்த நேரத்தில் மனைவியிடம் கடிந்து பேசக் கூடாதென்று, சமையலை முடிக்குமாறு சொல்லிவிட்டு நீராடித் தமது காரியங்களைத் தொடர்ந்தார். சங்கல்பம் செய்துகொண்டு பிதுர்களைச் சிரார்த்த பிராம்மணர்களில் ஆவாகனம் செய்யும்போது, வானிலே அசரீரி ஒன்று கேட்டது.
“ஹே ராமா, நீ ஏன் இரண்டாம் முறை எங்களைச் சிரார்த்தத்துக்கு அழைக்கிறாய்? நாங்கள் ஒரு முறை சீதையின் கையால் பிண்டம் அளிக்கப்பட்டுத் திருப்தி அடைந்து விட்டோம்” என்று பிதுர்கள் அசரீரிபோல் அறிவித்தனர்.
அதைக் கேட்ட பின்னரே ராமர் நடந்ததை உணர்ந்து சாந்தமானார். அதே நேரத்தில் கணவர் தன்னை நம்பாதிருக்க நேரிட்டதே என்று சீதை வேதனைப்பட்டாள்.
அதற்குக் காரணமாக இருந்த பல்குநதி, பசு, அக்கினி, தாழை ஆகிய நான்கையும் அவைகளின் நடத்தைக்காகச் சாபமிட்டாள்.
உங்களைச் சாட்சிகளாக வைத்துக் கொண்டு நான் சிரார்த்தத்தை முடித்திருக்க, நீங்கள் அதை என் கணவருக்குத் தெரிவிக்காமலிருந்து வீட்டீர்களே! பல்கு நதியே, நீ அந்தர்வாஹிநியாக, அதாவது பிரவாகமே இல்லாது போகக் கடவது! பசுவே, உன் வாய் யோக்கியமாக இல்லாது போய் விட்டதால் உன் முகத்தில் இருக்கும் லக்ஷ்மீகரம் உன் பின் பக்கத்தில் போகக்கடவது. தாழம்பூவே! என்னால் பூஜிக்கப்படும் சிவபெருமானுக்கு நீ உகந்ததாக இல்லாமல் போகக்கடவது. அக்கினி தேவனே, எல்லா தேவர்கட்கும் முகஸ்வரூபியாக விளங்கும் நீ, ஸர்வ பக்ஷகனாகக் போகக்கடவது. சுத்தம் அசுத்தம் என்ற பாகுபாடு இன்றி அசுத்தத்தையும் ஸ்வீகரிக்கக் கூடியவனாக ஆகக்கடவது” என்று சபித்தாள் சீதை.