எழுதியவர் – கருங்கல் கி.கண்ணன்
கன்னியாகுமரி மாவட்டம்

மூளை எங்கே!
தமிழா!
உன் மூளை எங்கே?…
ஆளும் மன்னனும்
புரியவில்லை!
வாழும் மக்களும்
கவலையில்லை!
பாதகக் கொலையில்
வரும் பணத்தை
வருமானம் என்று
சொல்வதோனோ?….
எத்தனை குடும்பம்
நடுத்தெருவில்!
எத்தனை தாலி
அறுக்கப் பட்டு!
எத்தனை பிள்ளைகள்
கல்வியற்று!
பாழும் குடியால்
வந்தவினை!…
வெட்கக் கேடு!
நீ
தமிழன் என்பதில்
தமிழன்னைக்கு வெட்கக்கேடு!…
வீரம்,
விஞ்ஞானம்,
மருத்துவம்,
வீர விளையாட்டு,
தற்காப்புக் கலை,
வேளாண்மை,
ஈகை,
கலை,
காதலில்
சிறந்தவன் தமிழன்
என்பது தான் வரலாறு!…
குறுக்கு வழியில் வெற்றி
தமிழனுக்கு இல்லை!
தேர்தலில் காசு….
நிறைவேறக் காசு….
ஆவணம் நகர காசு….
ஒப்புதல் வாங்க காசு….
கல்வி கற்க காசு….
வேலையில் காசு…
கோவிலில் காசு…
சுடுகாடு எரியூட்டக் காசு….
எங்கும் காசு….
எதிலும் காசு….
ஏன்? தெரியுமா?
எதனால் தெரியுமா?….
மதுக்கு ஆசைபட்டாய்!
மதுக்கடைகளைக்
கேட்டு வாங்கினாய்!
தெருவெல்லாம் மதுக்கடைகள்!
மனமகிழ் மன்றங்கள்!…
குடிப்பவனே!
கூறு!!
மூளை சிந்திக்குமா?
மனைவி, பிள்ளைகள்
பொறுப்பு ….தெரியுமா?
ஊதாரி வாழ்க்கை
உருப்படுமா?
உணர்வான செயல்கள்
செயல்படுமா?…
நிச்சயமாக இல்லை!
நீதி தவறுமடா!
நிலை கெட்ட மானிடா!
பொய் மெய்யாகி,
கள்ளத்தனம் அரங்கேறும்!
கண்கள் மறுத்து…
கண்ணியம் குறையும்!
வீடு சிதைந்து…
தீவினைகள் கூடும்!
தப்பானத் தலைவனுக்கு
வாக்கு விலை போகும்!
இலஞ்சம் கூடி…
இன ஒற்றுமை தொலையும்!
நாடு சீரழியும்!
தமிழன் பெருமை
மதுக்குடி என்பதா?
மதுவுக்கு ஏங்கி
நாட்டை இழந்தான் என்பதா?
வரலாறு காறி உமிழும்!
அதனால்
தமிழன்னை
வேதனைப்படுவாள்!…
வேண்டாம் தமிழா!…
வேண்டாம்!…
மதுவான விடம்
வாழ்வில் வேண்டாம்
மறுத்து விடு தமிழா!
சிறந்த
‘தமிழ் குடி மகன்’
சீரழிந்த
குடிகாரனாக வேண்டாம் தமிழா!…
ஒரு சிலர் மகிழ ….
உன் குடும்பம் சோகத்தில்…ஆளும்!
குடி மகனே!
உனக்கு
சிந்திக்கும் நிலை உள்ளதா?….
சிந்தித்தால்…?