எழுதியவர் – காவியப்பெண்.

நாம் ஒவ்வொரு நாளும் தெரிந்தும், தெரியாமலும் தவறுகளை செய்து கொண்டிருக்கிறோம். நம்மில் நிறைய பேர் பாவ புண்ணியங்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை.
நம் வாழ்வின் முடிவில் ,பாவ புண்ணியங்கள் கணக்கிடப்படும்.
சித்ரா பெளர்ணமி அன்று சித்திர குப்தனை வணங்கி ,நம் பாவத்தை போக்கி நல்ல ஆத்மாவாக வாழ்வோம் .
ஒவ்வொரு மாதங்களில் வரும் பெளர்ணமி விசேஷமானது .
அதுவும் சொல்லவா வேண்டும்?
சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியைப் பற்றி….
மிகவும் சிறப்புமிக்க நாள் இந்த நாள்.
சித்திரை மாதம் ,சித்திரை நட்சத்திரத்துடன் பெளர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் “சித்ரா பெளர்ணமி “கொண்டாடப்படுகிறது .இந்த நன்னாளில் தான் அன்னை பார்வதி தேவி தன் கைத்திறமையால் ஒரு அழகான குழந்தை ஓவியத்தை வரைந்தாள் .அந்த ஓவியம் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான் ,பார்வதியிடம் “நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் அழகாக இருக்கும் “என்று கூறிக் கொண்டே தன் கைகளால் எடுத்து,தன்னுடைய மூச்சுக் காற்றை ஓவியத்தின் மேல் படும்படி செய்தார்.இந்த அற்புதத்தை கண்ட பார்வதி தேவி,மகிழ்ச்சி அடைந்து அந்த குழந்தைக்கு ‘சித்திர குப்தன்’ என்று பெயர் வைத்தாள் .
சித்ர குப்தனை திருப்தி செய்வதற்காக விரதம் இருந்து சித்ர குப்தரை வழிபடுகின்றனர்.
சித்திர குப்தனுக்கு பதவி
ஒரு நாள் யமதர்ம ராஜவுக்கு மனக்கவலை அதிகமாகிக் கொண்டே போனது .தன் மனக்கவலையை சிவனிடம் சொன்னார்.இறக்கும் ஜீவராசிகளை அழைத்து வரும்போது அவர்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ப நல்ல பலன்களையும்,தண்டனைகளையும் தர வேண்டும் என்று நீங்களும்,விஷ்ணு பகவானும் எனக்கு கட்டளையிட்டு இருக்கீர்கள்?.ஆனால் யார் எவ்வளவு பாவ ,புண்ணியங்கள் செய்தார்கள் என்று தன் மனக்கவலையை தெரிவித்தார் யமதர்மராஜா .
உன் கேள்விகளை, “அனைத்து உயிர்களை படைக்கும் பிரம்மாவிடம் போய் கேள் ,இதற்கு தீர்வு சொல்வார் “என்று சிவபெருமான் கூறினார் .பிரம்மாவிடம் சென்று தன் கவலைகளை சொன்னார் யமதர்ம ராஜா .
பிரம்மா யமதர்மரிடம்,சக்தியால் உருவாக்கப்பட்ட சித்திர குழந்தையான சித்ர குப்தனை உன் யம லோகத்தில் முக்கிய பதவியில் அமர்த்துகிறேன்.அவன் உனக்கு உறுதுணையாக இருந்து ,யார் எந்த அளவுக்கு பாவ -புண்ணியம் செய்கிறார்கள் என்பதை சித்திர குப்தன் கவனித்து கணக்கு எழுதுவான் .அதனால் உன் மனக்கவலை ஒழிந்து உன் தர்மபடி பணி செய் என்று ஆலோசனை வழங்கினார் பிரம்மதேவர்.
பிரம்மனின் உத்தரவை ஏற்ற சித்திர குப்தன் தன்னுடைய ஒரு கையில் எழுதுகோலும் ,மறு கையில் எழுதுகோலும் தேவையான மை நிறைந்த கிண்ணமும் ஏந்தி காட்சி தந்தார்.
அன்றியிலிருந்து இன்று வரை பூலோகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகள் செய்த ஒவ்வொரு பாவ புண்ணிய கணக்கை சித்ர குப்தன் எழுதி வருகிறார்.ஆதலால் நாம் பாவங்கள் செய்வதை விடுத்து, புண்ணியத்தை மட்டுமே செய்ய வேண்டும்.சித்திர குப்தன் நம்மை இந்த ஆத்மா” புண்ணிய ஆத்மா ” என்று அவனது ஏட்டில் எழுதி விட்டால் அடுத்த பிறவி இல்லை அல்லது எந்த பிறவி எடுத்தாலும் துன்பம் நிலை இல்லாமல் இறைவன் துணை இருப்பார்.
இந்நாளில் சிவலிங்கத்திற்கு வில்வ இலை அர்ச்சனை செய்தால் நம்முடைய புண்ணிய கணக்கு இரட்டிப்பாகும் .
அன்று காலை பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அருகில் ஏடும் எழுத்தாணியுமான நோட்டு ,பேனாவை வைத்து ஒரு தாளில் “சித்திர குப்தன் படியளப்பு “என்று எழுதி ,சித்திர் குப்தனை நினைத்து வணங்க வேண்டும் .
சித்திர குப்தனை நினைத்து இந்த சிறு வரிகளை சொல்வது நன்று.
சுவாமி! “அடியேன் செய்த பிழைகள் மலையளவாக இருந்தாலும் கடுகளவாக மாற்றிவிடு.நான் செய்த புண்ணியம் கடுகளவாக இருந்தாலும் மலையளவாக மாற்றி விடு, பாவங்களை நீக்கி, புண்ணியத்தை மட்டுமே கணக்கில் எடுத்து கொள் “என்று மனதார வேண்ட வேண்டும்.
நம்மால் முடிந்த பூஜைகளை செய்து , சிறு ஸ்லோகத்தை சொல்லி ,சித்திர குப்தரை வழிபடுவோம்.
சித்ராபவுர்ணமியன்று வீட்டை சுத்தம் செய்து பூஜைஅறையில் விநாயகர் படத்தை வைத்து அரிசி மாவால் சித்ரகுப்தன் படம் வரைந்து கையில் ஏடும், எழுத்தாணியும் வரைய வேண்டும். சித்ரகுப்தா என்று சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும். அன்று உப்பில்லாத உணவுகளையே (கனிகள்) உண்ண வேண்டும்.
மாலையில் பவுர்ணமி தினம் உதயமானதும் சித்ரகுப்தனுக்கு பூஜை செய்ய வேண்டும். தலைவாழை இலையில் சர்க்கரை பொங்கல் அல்லது வெண்பொங்கலை படைக்க வேண்டும். பயிற்றம் பருப்பு, எருமைப்பாலும் சேர்த்து பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.
படையலுடன் எல்லாக்காய்கறிகளும் போட்ட கூட்டு நிவேதிக்க வேண்டும். தொடர்ந்து தீபாராதனை காட்டி ஏழைகளுக்கு முடிந்த அளவு தானம் கொடுக்க வேண்டும். ஏழை மாணவர்களுக்கு பேனா, பென்சில், நோட்டு கொடுக்கலாம். அன்னதானம் செய்வது மிகவும் சிறந்தது.
சித்ராபவுர்ணமி விரதம் இருந்து சிவபெருமானை வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். ஆயுளை அதிகரிக்க செய்யும் ஆற்றல் இந்த விரதத்திற்கு உண்டு.
மேலும் மனஅமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், வறுமை அகலும். புண்ணியங்கள் சேரும்.
திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சித்ராபவுர்ணமி அன்று
” கிரிவலம்” செல்லுதல் மற்றும் அன்னதானம் செய்தால் கல்வி, வேலை, பதவி, அரசியல், ஆரோக்கியம், திருமணம், வழக்கு குடும்பப்பிரச்சினைகள் நீங்கி மேன்மை உண்டாகும்.
சித்திரகுப்தருக்கு கோவில்…..
காஞ்சி மாநகரில், மொத்த சக்தி பீடங்களில் தலையாய பீடமாகத் திகழும் காஞ்சி காமாட்சி குடிகொண்டிருக்கும் இந்த ஊரில், சிவ காஞ்சி, விஷ்ணு காஞ்சி என்று போற்றும் அழகிய ஊரில், சித்ரகுப்தருக்கு ஆலயம் உள்ளது.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வடக்கில், நெல்லுக்காரத் தெருவின் மையத்தில் உள்ளது ஆலயம்.
மேலும் தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் இவருக்கு சித்திர புத்திர நாயனார் என்ற பெயருடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.