1. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷக் காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு உலகத்தைக் காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்தத் திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் சனி மகாப்பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது.
  2. பிரதோஷக் காலத்தில் சிவாலயம் சென்று வலம் வந்து ஈசனைத் தரிசிக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் இறைவனுக்கும் நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது.
  3. பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சனி மகாப்பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப் பலனைத் தரும் என்பது நம்பிக்கை.
  4. பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.
  5. பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர் விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியைக் குறிக்கிறது. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமாக, இட வலமாக மேற்கொள்ளப்ப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது.
  6. நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகைப் பிரதோஷங்கள் உள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. சனிக்கிழமை பிரதோஷக் காலங்களில் ஈசனைத் தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகிப் புண்ணியம் சேரும்; அனைத்து நலன்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும்; அன்று செய்யப்படும் எந்தத் தானமும் அளவற்றப் பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.
  7. சனிப்பிரதோஷ நேரத்தில் எல்லாத் தேவர்களும் ஈசனின் நாட்டியத்தைக் காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சந்நிதிகள் திரையிடப்பட்டு இருக்கும். பிரதோஷ நேரத்தில் மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஒரு நம்பிக்கை.
  8. நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும்.
  9. சிவபெருமான் ஆலகால விஷம் உண்ட மயக்கத்தில் சக்தியின் மடியில் சயனிக்கும் கோலத்தில் இருக்கும் சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீஸ்வர் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு செய்வது பொருத்தமானது. பஞ்செட்டி அருகே அமைந்துள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு செய்வது இன்னமும் சிறப்பானது என்கிறார்கள். இங்கு உறையும் சிவன் ஆலகாலத்தை ஏற்றுக் கருமையாக இருக்கிறார், அவருக்குப் பால் அபிஷேகம் செய்யும்போது பால் கருநீலமாக வழிவதை இங்கு காணலாம்.
  10. பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது.
  11. மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபதபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும் போது பல மடங்கு பலன்களைத் தரும்.
  12. பிரதோஷ நேரத்துக்குள் சிவனுக்கான அபிஷேக ஆராதனைகள், தரிசனம், புறப்பாடு என எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷக் காலம் முடிவதால் அதன் பின்னர் செய்யும் வழிபாடுகள் அந்தி பூஜைதான் என்பதால் அது பிரதோஷ வழிபாடு ஆகாது.
  13. பிரதோஷக் காலத்தில் சக்தியோடும், முருகப் பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தைக் காணலாம்.
  14. சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.
  15. அன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்த பிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம். சாதாரணப் பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்கின்றனர்.
  16. ஏகாதசியன்று ஆலகாலம் உண்ட ஈசன் துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா வேளையில் எழுந்து, சூலத்தை சுழற்றி டமருகத்தை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நாட்டியம் ஆடினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகை தொழிலையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஈசனால் ஆடப்பட்டது என்கிறார்கள்.
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal