
ஆளும் மற்றும் எதிர் தரப்புக்களை ஒன்றிணைத்துக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரபல சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தின் திட்டங்களினால் மன உலைச்சலை எதிர்நோக்கியுள்ள ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி கடமைகளை சரியாக நிறைவேற்ற தவறியமையின் ஊடாக மன உலைச்சலை எதிர்நோக்கியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்பான தகவல்கள் வெளியான பின்னணியிலேயே, சஜித் பிரேமதாஸவை (sajith premadasa) எதிர்க்கட்சித் தலைவராக தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்ற யோசனையொன்றை எதிர்க்கட்சி நிறைவேற்றியதாகவும் கூறப்படுகின்றது.
எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுகின்ற சஜித் பிரேமதாஸவை அந்த பதவியிலிருந்து வெளியேற்றி, அந்த இடத்திற்கு தேசிய பட்டியலின் ஊடாக பாராளுமன்ற பிரவேசத்தை பெறவுள்ள ரணில் விக்கிரமசிங்கவை (Ranil Wickremesinghe) நியமிக்க திட்டம் வகுக்கப்பட்டு வருவதாக அந்த பத்திரிகை செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படும் மிக முக்கிய அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புக்களும் இதற்காக வழங்கப்பட்டு வருவதாக அறிய கிடைக்கின்றது.