
இந்துக்களின் வேத நூலாகச் சொல்லப்படுவது பகவத் கீதை.
மகாபாரதத்தில் நடந்த குருஷேத்திரப் போர் தொடங்குவதற்கு முன்பாக அங்கிருந்தோரை ஒரு முறை பார்வையிட்ட அர்ஜூனன், அங்கு தன் உறவினர்கள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் இருப்பதைக் கண்டு போரிட மறுத்தார். அதனைக் கண்ட தேரோட்டியாக இருந்த கிருஷ்ணன் தர்மத்திற்கு எதிராக போர் புரியும் பொழுது உறவினர்கள், நண்பர்கள் என எதையும் பார்க்கக் கூடாது என்று சொல்லி, அதிலிருக்கும் தர்மத்தை உணர்த்திப் பாடியதே பகவத் கீதை. கீதையில் இடம் பெற்றிருக்கும் அனைத்துக் கருத்துகளும் நல்வாழ்க்கைக்கு வழி காட்டுவதுடன் முக்தி நிலைக்குக் கொண்டு செல்லும்.
பகவத் கீதையில் 18 அத்தியாயங்களும், 700 சுலோகங்களும் உள்ளன. அதில் கிருஷ்ணர் சொல்வதாக 620 சுலோகங்கள், அர்ஜுனன் சொல்வதாக 57 சுலோகங்கள், சஞ்சயன் சொல்வதாக 67 சுலோகங்கள், திருதராஷ்டிரன் சொல்வதாக 1 ஸ்லோகம் என்று இருக்கின்றன.
பகவத் கீதை நூலை உரத்த பிரஸ்தான த்ரயம் என்று சொல்வதுண்டு. இது பிரம்ம சூத்திரம், உபநிஷத்துக்கள் ஆகியவையோடு பகவத் கீதை இணைந்து மூன்று தூண்கள் என்று அழைக்கப்படுகிறது.
கண்ணன் அர்ஜுனனுக்கு வேதாந்த பார்வை, சுயதர்மம் பார்வை, கர்மயோக பார்வை, பக்தி யோக பார்வை, ஞான பார்வை என்று 5 வாதங்களை எடுத்துரைத்தார்.
வேதாந்த வாதம்
வேதாந்த பார்வையில் ஆத்மா ஒன்று தான் அழிவு இல்லாதது. இவ்வுலகில் வாழும் அனைத்தும் நம் வாழும் மூன்று காலங்களில் மற்றவர்கள் உடையதாக மாறிவிடும் என்றார். எனவே உறவை மறந்து எதிரிகளை எதிர்த்துப் போராடும் என்றார். அவர்கள் உடல் இறந்தாலும், அவர்களின் ஆன்மாவை யாரும் அழிக்க முடியாது என்கிறார் கிருஷ்ணர்.
சுய தரும வாதம்
போர் புரிவதற்காக அர்ஜுனன் பல ஆண்டுகளாகத் தவம் புரிந்திருக்கிறார். அதனால் அவரின் சுய தர்மம் காக்க வேண்டும் என்பதற்காக, இந்தப் போரை அவர் புரிய வேண்டும் என்று கிருஷ்ணன் உரைக்கிறார்.
கர்ம யோகம்
இந்தப் போரை புரிவது அர்ஜுனனின் கடமை. எனவே, ஒருவரின் கடமை அவர் விருப்பத்திற்கு அல்லது வெறுப்பு நிலையில் இருந்தாலும், அவரின் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும். அதனால் அவருக்கு கிடைக்கும் கர்மத்தை மட்டும் கவனிக்க வேண்டும். ஆசை, நிராசை, கோபம், அழுத்தம் என எதுவும் இல்லாமல் அவரவர், தங்களின் கடமையைச் செய்ய வேண்டும் என்றார் கிருஷ்ணர்.
பக்திப் பார்வை
எல்லா வல்லமையும் கொண்ட இறைவனை எவராக இருந்தாலும் நம்பித்தான் ஆக வேண்டும். அவர்கள் எல்லாம் என்னால் ஏற்கனவேக் கொல்லப்பட்டவர்கள். எனவே, நீ செய்வது எதுவும் பாவமில்லை என்று கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உணர்த்தினார்.
தத்துவப் பார்வை
அகங்காரத்தினால் நான் சொல்வதைக் கேளாமல், நீ எதையாவது செய்தால் அழிந்து போவாய் என்றார். அதன் காரணத்தினால் நீ போர் செய்ய மறுப்பது வெறும் தீர்மானமே, அது நடக்காது. உன் பிறகிறுதி உன்னை அப்படிச் செய்ய விடாது என்றார்.
“எது நடந்ததோ,
அது நன்றாகவே நடந்தது .
எது நடக்கிறதோ,
அது நன்றாகவே நடக்கிறது .
எது நடக்க இருக்கிறதோ ,
அதுவும் நன்றாகவே நடக்கும் .
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய்?
அதை நீ இழப்பதற்கு
எதை நீ படைத்திருந்தாய்?
அது வீணாவதற்கு,
எதை நீ எடுத்துக்கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது .
எதை கொடுத்தாயோ
அது இங்கேயே கொடுக்கப்பட்டது .
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை அடுத்தவருடையது,
மறு நாள் அது வேறொருவருடயதாகின்றது.
இந்த மாற்றம் உலக நியதியாகும்”
இந்த வாழ்வில் நாம் நினைத்து வருத்தப்படும் எல்லா விஷயத்தைப் பற்றியும் அழகாக எடுத்துரைக்கிறார் கிருஷ்ணர். எனவே, உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் எது நியாயம், எது தர்மம் என்று உணர்ந்து அதன் பின்னால் செல்வதே உத்தமம்.