
மட்டக்களப்புத் தேசத்தில் ஒரு நீண்டகால வரலாற்றுப் பாரம்பரியத்தைத் தன்னகத்தே கொண்டு சிறப்புடன் மிளிர்வது போரதீவுப்பற்றுப் பிரதேசமாகும். வெல்லாவெளி குடைவரைக் கல்வெட்டை ஆதாரப்படுத்தியஅண்மைய ஆய்வுகளின்படி, இதனது ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றுக் காலம் கிறிஸ்துவுக்கும் முன் முன்னூறு ஆண்டுகளைக் கடந்ததாக அமையும். கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வாக்கில் நெடுந்தீவை இருக்கையாகக் கொண்டு ஆட்சி செய்த விஷ்னுபுத்திரன் வெடியரசன் வரலாற்றில் அவனது தம்பியரில் ஒருவனான விளங்குதேவன் (போர்வீரகண்டன்) போர்முடை நாட்டில் வாழ்ந்ததாக, வாய்மொழித் தகவல்கள் கூறுகின்றன. அத்தோடு மீகாமனுடனான போரில் தனது மற்றைய தம்பியான வீரநாராயணனை இழந்த வெடியரசன், தனது அந்திமக் காலத்தில் இப்பகுதிக்கு இடம்பெயர்ந்ததாகவும் சொல்லப்படுகின்றது. (01) போர்முடை நாடு பின்னர் போர்முனைநாடு என வரலாற்றில் பதிவாகியுள்ளது.
போர்முடைநாடு பெயர்க் காரணம் குறித்து நாம் இங்கு கவனமாக ஆராயவேண்டியுள்ளது. போர் என்பது நெற்குவியலாலான சூட்டினையும் முடை என்பது காட்டுப்பகுதியையும் குறிப்பதாக அமையும். மருதமும் முல்லையும் கலந்த இந்நிலப்பகுதிக்கு இது பொருத்தமான பெயராகவே விளங்கியதெனலாம். கி.பி 11ஆம் நூற்றாண்டான சோழராட்சிக் காலத்தில், இப்பிரதேச திருப்படைக் கோவிலான கோவில் போரதீவு சித்திரவேலாயுதர் ஆலயம் போர்முனைநாடு சித்திரவேலாயுதர் ஆலயம் என அழைக்கப்படுவதை அறியமுடிகின்றது. (02) கி.பி 1215ன் பின்னர் கலிங்க மாகோனின் ஆட்சிக்காலத்தில் அவன் மட்டக்களப்புத் தேசத்தை ஏழு வன்னிமைப் பிரிவுகளாகப் பிரித்தபோது கதிர்காமம் தொடக்கம் நாதனை (வெல்லாவெளி) வரையான பெருநிலப்பரப்பு நாடுகாடுப் பற்றினுள் உள்ளடக்கப்படுகின்றது. (03) 1540வாக்கில் மட்டக்களப்புத் தேசத்தின் சிற்றரசுப் பொறுப்பினை ஏற்ற எதிர்மன்னசிங்கன் வெருகல் தொடக்கம் கதிர்காமம் வரையான நிலப்பரப்பை ஐந்து நிருவாக அலகுகளாகப் பிரித்த போது, இப்பிரதேசம் மீண்டும் போர்முனைநாடு என வரையறை செய்யப்பட்டுள்ளமையும் அறியலாம். (04) எதிர்மன்னசிங்கனின் ஆட்சிக் காலத்தின் பின்னர் (1585) மட்டக்களப்புத் தேசத்தில் பல சுய ஆதிக்கமிக்க வன்னிமைச் சிற்றரசுகள் கண்டி அரசின் பிணைப்புடன் தோற்றம் பெற்றபோது பழுகாமத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட செல்ல பண்டார சிற்றரசனின் கீழ் இப்பிரதேசம் செல்கின்றது. 1622ல் போர்த்துக்கேயர் மட்டக்களப்பைக் கைப்பற்றியதும் அவர்கள் மாகோன் வகுத்த நிருவாகப் பிரிவுகளையே நடைமுறையில் கைக்கொண்டனர். அதனால், மீண்டும் இப்பிரதேசம் நாடுகாடுப் பற்றுள் இணைக்கப்பட்டது. 1736ல் ஒல்லாந்தர் மட்டக்களப்பைக் கைப்பற்றியதும் போர்த்துக்கேயரின் நிருவாகக் கட்டமைப்பினையேப் பின்பற்றலாயினர். பின்னர், அவர்கள் கண்டியுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்பிரகாரம் 1766ல் மட்டக்களப்பின் வடபகுதிக்கு காலிங்காகுடி அருமைக்குட்டிப் போடியையும் தென்பகுதிக்கு பணிக்கனார்குடி கந்தப்போடியையும் தலைமைப் போடிகளாக நியமித்த போது, இப்பிரதேசம் மட்டக்களப்பின் வடபகுதிக்கு உள்ளானது. (05) கி.பி 1802ல் ஆங்கிலேயர் மட்டக்களப்பில் தங்கள் ஆட்சியை நிலைநிறுத்திய பின்னர் நாதனைப் பற்று உருவாக்கம் பெற்றது. இதில் இன்றைய உகனைப் பகுதி, மகோயா பகுதி, போரதீவுப் பற்று, எருவில் பற்று என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன. அதன் பின்னர், 1832ல் கோல்புறுக் – கமரோன் ஆணைக்குழு, இலங்கையின் எல்லைகளை மீள்வரைவு செய்தபோது, வெருகல் தொடக்கம் கட்டகாமம் வரையான மட்டக்களப்புத் தேசம் பதின்மூன்று நிருவாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டு, அதில் இன்றைய போரதீவுப் பற்று மற்றும் மண்முனை தென்மேற்கு பிரதேசம், உகனைப் பிரதேசம் ஆகியவை ஒரே நிருவாக அலகுக்குள் போரதீவுப் பற்று எனும் பெயரில் செயல்படலாயின. ஆங்கிலேயர் ஆட்சியின் பிற்பட்ட காலத்தில் அவர்கள் தனித்தனியாகப் பெரும்பாக இறைவரி அலுவலர்களை (D.R.O) நியமித்த போது மண்முனை தென் எருவில் போரதீவுப் பற்று எனும் நிருவாகப் பிரிவில் இப்பிரதேசம் அடங்கியிருந்தது. அதன் பின்னர் 1971ல் போரதீவுப் பற்று தனி உதவி அரசாங்க அதிபரின்கீழ் செயல்படலாயிற்று. 1982 முதல் இப்பிரதேசம் போரதீவுப் பற்று மற்றும் மண்முனை தென்மேற்கு என இரு நிருவாக அலகுகளாக இயங்குவதைக் காணலாம்.
இன்றைய போரதீவுப் பற்று முன்னர் தனித்தனியாக இயங்கிய பழுகாமம், மண்டூர், நவகிரி நகர் ஆகிய உள்ளுராட்சி மன்றங்களை உள்ளடக்கிய சுமார் 167 சதுரக் கிலோ மீற்றரைக் கொண்ட பகுதியாகும். இது பண்டைய வரலாற்றுச் சிறப்பும், பாரம்பரியமும்மிக்க பழுகாமம், பெரிய போரதீவு, கோவில்போரதீவு, வெல்லாவெளி, மண்டூர் ஆகிய பழந்தமிழ் கிராமங்களை முன்னிலைப்படுத்துவதை இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.