
ஆடு மாடு மேய்ச்சாலும்
அன்ப மேய்ச்சோம் மனசுகுள்ள
ஒத்த பனமரமா
ஒசந்து நின்னவ
நீயொரு காட்டுக் கவிதை
மொட்டக் காட்ட மொத்தமா
புடுச்சு வெச்ச
மத்தியான வெயிலா
என்ன முழுசா
புடுச்சு வெச்சது நீதான்
ஊனாங்கொடி புடிங்கி
உனக்கொரு ஊஞ்சல்
கட்டித் தந்தேன்
காட்டுப் பூவெல்லாம்
உன் கன்னத்தை கடன் கேட்கும்
பத்தூரு சுத்தி இருக்கும்
பாங்காட்டில் சந்திக்கும்
நம் ஆட்டுக்கும் காதலிருக்கும்
வறுத்த கடலை பங்குபோட்டு
பன்னாங் கல் ஆடி
நொங்கு சீவி தாகம் அடக்கினா
வெயில்நேர குயில் கானம்
நெஞ்சில் வந்து தங்கும்
ஊரில் சாதிகள் சேருமா சேராதா
தெரியவில்லை
காட்டூர் அப்பச்சி
‘அந்த காட்டுக் கதை என்னாச்சுனு
கேட்டாரு’
என் காட்டு ரோசவை
நகர மொட்டை மாடி
நாலு பவுனுக்கு வாங்கிப் போனதை சொன்னேன்
அவரு குரல்வளையில மாய கல்லொன்னு
வந்து அடைச்சு நின்னுச்சு.
குமரன்விஜி