
வெட்டப்படாத சிறகுகளின்
வீச்சில் மட்டும் தான்
வெள்ளி மலைகள்
பிரசவிக்கிறது….
காலப்பூக்கள்தான்
எத்தனை வேகமானவை?
கயமையற்ற மனிதங்கள்
கனவில்தான் பிறக்கிறது…..
நகர்ந்து ஒலித்தாலும்
ஓடிக்கொண்டிருந்தாலும்
வெளிவரமுடியாத
கடிகார முட்களைப் போல…..
ஒத்த முனைகளும்
ஒவ்வாத முனைகளும்
கற்பித்தலில்
ஒன்றாவது போல…..
பெரிய பூட்டை
சிறிய சாவி
திறப்பதைப் போல
விதியின் விளையாட்டில்
விளையும்
பொம்மலாட்டம் போல….
யதார்த்த வாழ்வியலில்
யதார்த்தங்கள்தான் எத்தனை?
சிப்பிகளின் காத்திருப்பில்
மகிழ்கிறது
மழைத்துளிகள்….
உருகும் இதயத்து
உப்பின் சாயலே
விழிவழி வடிகிறது
கண்ணீர் என்பதாய்……
முகாந்தரமற்ற
முன்கோபங்கள்
முத்துக்கள் ஆவதில்லை…..
மகவுக்கு ஊட்டாத
தாயின் பாலைப்போல
கனத்துக் கிடக்கிறது
நேந்திரங்கள்…..
எங்கோ……
ஒரு மூலையில்
கரிச்சான் குருவிகள்
சங்கீதம் இசைக்கிறது…..
கோபிகை