இன்னும் சில வருடங்களில் ஒட்டுமொத்த உலகமும் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய பிரச்னை பருவநிலை மாற்றமாகத்தான் இருக்கும். இது ஏற்படுத்தும் தீவிரமான விளைவுகளைக் கண்கூடாகவே பார்க்க முடிகிறது. துருவங்களில் உள்ள பனிப்படலங்கள் உருகுவது, கடல் நீர் மட்ட உயர்வு, ஓசோன் பாதிப்பு போன்று பல சுற்றுச்சூழல் பிரச்னைகளை இந்த வரிசையில் அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படிப் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளின் பட்டியலில் கூடிய விரைவில் மேகங்களும் இணையக்கூடும். பருவ நிலை மாற்றத்தால் மேகங்கள் மீதான விளைவு எப்படி இருக்கும் என்பது பற்றிய ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

பருவ நிலை மாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படும் விஷயங்களில் ஒன்று புவி வெப்பமயமாதல். கடந்த நூற்றாண்டில் உலகம் முழுவதுக்குமான சராசரி வெப்பநிலை என்பது ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டேதான் வந்திருக்கிறது. புதைபடிம எரிபொருள்களின் பயன்பாடு, தொழிற்சாலைகள் என மனிதர்களால் ஒவ்வொரு நாளும் வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவும் தொடர்ந்து அதிகரிப்பதுதான் புவி வெப்பமயமாதலுக்கு முக்கியமான காரணமாக இருக்கிறது. பசுமைக்குடில் வாயுக்களில் முக்கியமான ஒன்றான இந்தக் கார்பன் டை ஆக்சைடின் அளவுதான் தற்பொழுது ஒரு வகை மேகங்களுக்கு ஆபத்தாக மாறப்போகிறது. வானில் தோன்றும் மேகங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானவை கிடையாது. அவற்றைப் பார்த்தாலே ஓரளவுக்கு அதைத் தெரிந்துகொள்ள முடியும். எடுத்துக்காட்டாக மழைக்காலங்களில் குறைவான உயரத்தில் தென்படும் மேகங்களை வைத்து அவற்றை அடையாளம் காணலாம். அதே வேளையில் சாதாரண நேரங்களில் அதிக உயரத்தில் மெதுவாக நகரும் மேகங்களையும் வெறும் கண்களால் பார்த்தே அறிந்துகொள்ளலாம்.

இப்படி வானில் தோன்றும் பல வகை மேகங்களில் ஒன்றுதான் ஸ்ட்ராட்டாகியூமுலஸ் (Stratocumulus) மேகங்கள். வளிமண்டலத்தில் 2,000 அடிக்குக் கீழாக இவை உருவாகின்றன. இவற்றை வானில் பெரும்பாலான சமயங்களில் காண முடியும். நிலப்பரப்புக்கு மேலாக இவை பரவியிருக்கின்றன. குறிப்பாக, வெப்ப மண்டலப் பகுதிகளிலும் கடல் பரப்புக்கு மேலாகவும். இவை பூமியை ஒரு வெப்பக் கவசம் போலப் பாதுகாக்கின்றன. இவை விண்வெளியிலிருந்து உள்ளே நுழையும் வெப்ப கதிர்களை 30 முதல் 60 சதவிகிதம் வரைக்கும் திருப்பி அனுப்பி விடுகின்றன. ஆனால், உலக அளவில் அதிகரித்துக்கொண்டே வரும் கார்பன் டை ஆக்சைடின் அளவால் இந்த ஸ்ட்ராட்டாகியூமுலஸ் வகை மேகங்கள் இன்னும் 100 முதல் 150 வருடங்களுக்குள்ளாக முற்றிலும் காணாமல்போகும் வாய்ப்புகள் இருக்கின்றன. நேச்சர் என்கிற அறிவியல் இதழில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரை ஒன்றில் இது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பூமிக்கு வெப்பம் சூரியனிலிருந்துதான் வருகிறது. ஆனால், அதிலிருந்து வெளியாகும் வெப்பம் என்பது முழுவதுமாக பூமியை அடைவதில்லை. அவை இயற்கையின் பல அமைப்புகளால் மட்டுப்படுத்தப்படுகிறது. அப்படி வெளியிலிருந்து வரும் வெப்பத்தைக் குறைப்பதில் வளிமண்டலத்தின் பங்கு அதிகம். பசுமைக் குடில் வாயுக்கள் ஏற்கெனவே பூமியிலிருந்து வெளியேறும் வெப்பத்தை மீண்டும் பூமியை நோக்கித் திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கின்றன. ஆனால், ஒரு தொகுப்பாக இருக்கும் ஸ்ட்ராட்டாகியூமுலஸ் மேகங்களை கார்பன் டை ஆக்சைடு வாயு சிதறடித்துவிடும். இதனால் வெப்பக் கதிர்களைத் திருப்பி அனுப்பும் தன்மையை மேகங்கள் இழந்துவிடும். அதன் காரணமாகப் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் பூமியின் வெப்பநிலை ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே இருக்க இதனால் வெப்பநிலை உயர்வு என்பது இரண்டு மடங்காக அதிகரிக்கும். அப்படி ஒருவேளை இது மட்டும் நடந்துவிட்டால் பூமியின் வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரும் வாய்ப்புகள் அதிகம் என்கிறது இந்த ஆய்வறிக்கை.

தற்போது வளிமண்டலத்தில் காணப்படும் கார்பன் டை ஆக்சைடு வாயு 410 ppm (parts per million) என்ற அளவில் இருக்கிறது. இந்த அளவானது 1,200 என்ற நிலையை எட்டும்போதுதான் மேகங்களுக்குப் பாதிப்பு ஏற்படும். “இப்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றங்களால் கார்பன் வெளியீட்டளவைக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால் கார்பன் அளவு என்பது உச்ச அளவை அடைவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என்றே கருதுகிறேன்’’ என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான Tapio Schneider என்பவர். ஆனால், இது நடக்கவே நடக்காது என்றும் உறுதியாகக் கூற முடியாது. ஏனென்றால், இப்போது காற்றில் அதிகரிக்கும் கார்பன் டைஆக்சைடின் விகிதம் அப்படித்தான் இருந்து வருகிறது. அதைக் குறைக்காவிட்டால் தற்போது கணக்கிடப்பட்டுள்ள வருடங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஒரு வேளை மேகங்கள் நிஜமாகவே காணாமல்போய், வெப்பநிலை அதிகரித்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு இருக்கலாம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal