எழுதியவர் – தூரா.துளசிதாசன்

கடிதத்தின்
நிரப்பாத இடங்களையெல்லாம்
இதயக்குப்பிகளில் நிரம்பி
வழிந்தோடும் நேசநதியில்
பூத்துக்குலுங்கும்
வார்த்தைப் பூக்கள்
ஆக்கிரமிக்கின்றன வாசனையோடு…
விரல் தொடும்
அலைபேசிகள் பேசாத
வார்த்தைகளை
பேசி தீர்த்தன
இரும்புப் பெட்டிக்குள்
அடைபட்ட கடிதங்கள்…
ஓர் நொடியில்
வந்தடையும் குறுந்தகவலில்
குதுகலமடையாத மனப்பறவை
ஓராயிரம் தடவை
வாசிக்கின்றது
செல்லரித்த கடிதங்களை…
முகம் பார்த்து
உரையாடும் காணொளி
அழைப்பில் பரிமாறாத
உள்ளத்தின் பிம்பத்தை
பிரதிபலிக்கும் கண்ணாடியாய்
கந்தலான
காகிதத் துண்டுகள்….
உணர்வுகளை கடத்துகின்ற
உறவுகளின் பாலம்…
அன்பை வெளிப்படுத்தும்
கிறுக்கல்களின் குவியல்…
இதயங்களை இளைப்பாற்றும்
காகிதப் பொக்கிஷம்…
இமைகள் சிந்தும்
உதிரிப்பூக்களையும்
இதயங்கள் அவிழ்க்கின்ற
சரக்கொன்றை மலர்களையும்
சுமந்து காற்றில்
மிதந்து செல்லும்
காகிதப் பேழை…
இன்று கேட்பாரன்றி
உறங்குகின்றது
“கோமா”வில் …