கவி உலகின் ஒரு ஆளுமை, தனித்துவமான ஆற்றல்களின் சொந்தக்காரன், சிறந்த பண்பாளன். மலையகத்து மைந்தன் செல்வாகவி என்ற செல்வகுமார் அவர்களினுடைய உள்ளத்தில் ஒலிகளை எழுத்துக்களாக்கி தாங்கி வருகிறது இந்த நேர்காணல்……….


உங்களை பற்றிய அறிமுகம்?
செல்வகுமார் என்ற இயற்பெயர் கொண்ட நான் எழுத்துலகில் செல் வா கவி என்ற பெயரில் அடையாளம் கொண்டுள்ளேன். மேல் மாகாணம் களுத்துறை மாவட்டத்தில் கடலோரக் காற்று கவிபாடும் தர்கா நகரத்திற்கும், மனதிற்கிதம் தரும் ஜில்லென்ற தென்றல் வீசும் மத்துகமை நகரத்திற்கும் மத்தியில் அழகாய் அமைந்துள்ள பள்ளேகொடை எனும் கிராமத்தவன் நான்.
முதல்தர தனியார் வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றும் நான்; அப்பா துளசிமணி, அம்மா ராஜமணி என்ற அன்பான பெற்றோருக்கு மகனாகவும், கந்தசாமி ஷாமலா என்ற காதல் மனைவிக்கு அன்பான கணவராகவும் ஷகிவ், மிதேஷ் என்ற இரு ஆண் பிள்ளைகளுக்கு தாயுமானவராகவும் மகிழ்வாய் இன்புற்று வாழ்கின்றேன்.
கற்றது ஐந்து வரை பள்ளேகொடை தமிழ் வித்தியாலயமும், சாதாரண தரம் வரை தர்கா நகர் ஸாஹிறாக் கல்லூரியும், உயர்தரம் மத்துகமை சாந்தமரியால் கல்லூரியும் எனதறிவின் வளர்ச்சிக்காக என்னை தத்தெடுத்த தாய்மார் எனலாம்.
?????????
முதன் முதலாக கவிதை எழுதிய தருணம் நினைவிருக்கிறதா?
இல்லை. மொழியை வசப்படுத்த கிறுக்கிக்கொண்டிருந்த காலம் நினைவில் உள்ளது. ஆனால் கவித்திறன் பெருக்கிக்கொண்டு முதல் கவி எழுதிய தருணத்தை உள்ளத்தில் உட்கார வைக்க மறந்துவிட்டேன்.
?????????
உங்களின் முதல் கவிதை…
மொழி ஆளுமையற்ற சிறு வயதில் எதையெதையோ கீறி வைத்து அழகு பார்த்துள்ளேன். கொஞ்சம் திறமை தேறி விட்டது என்றெண்ணி பத்திரிகைக்கு ஒரு கவிதையை அனுப்பி வைத்தேன். என்ன ஆச்சரியம்! அந்த முதல் கவிக்குழந்தை 2003-02-16 ஆம் திகதி பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. எனது முதலாவது கவிக்குழந்தை ஞாயிறு வீரகேசரியில் பிரசவமானது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி எனக்கு. அதையே எனது முதல் கவிதை என்று முத்திரை குத்தி பத்திரப்படுத்தியுள்ளேன்.

நேசிக்கப்பழகு..!

முள் தீண்டுகிறது
என்பதற்காக
ரோஜா மலரை வெறுக்கலாமா?
வெள்ளம் வருகிறது
என்பதற்காக
மழையை வெறுக்கலாமா?
சோகத்தின் பக்கத்தில்
சொர்க்கம் இருப்பதையும்
சுகத்தின் பக்கத்தில்
துக்கம் இருப்பதையும்
நீ அறிந்து கொள்!
சில சோகங்களை
நேசிக்கப்பழகு!
சில சோகங்களை
வாசிக்கப்பழகு!
சோகங்கள் உன்னை
செதுக்கும் உளி-
நீ சிதையாதே!
இக் கவிதை பிரசுரத்துக்கு பிறகு எனது நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகள் வீரகேசரி, மித்திரன் வாரமலர், தினகரன், தினக்குரல், தினமுரசு, , சுடர் ஒளி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன.
?????????
உங்கள் பார்வையில் கவிதை என்பது?
எல்லாவற்றிலும் நிறைந்துள்ள இவ்வுலகில் காண்பதற்கு இல்லாவற்றையும் தரிசிக்கும் ஞான விழியிரண்டின் முத்திப்பேறு நிலையாகத்தான் நான் கவிதையை பார்க்கின்றேன்.
இறைவன் இருக்கின்றாரா இல்லையா என்ற விடை தெரியா கேள்விக்குள் வியந்து கிடக்கும் போது இறைவனாகவே மாறி விடும் மிக ஆச்சரியமான உணர்வை தருவதே கவிதை என்று அறியத்தருகின்றேன்.
?????????
தலைப்புக்கு கவிதை எழுதுவது, கவிதை எழுதிவிட்டு தலைப்பிடுவது இதில் நீங்கள் எந்த ரகம்?
எவரேனும் தலைப்பைக் கொடுத்து எழுதிக் கேட்டால், தவறின்றி தலைப்புக்குள் தஞ்சமடைந்து களைப்பின்றி எழுதி விடுவேன்.
ஆனால், கருவொன்றை எடுத்துக்கொண்ட பின் அக்கருவுக்கு தேவையான சரியான வார்த்தைகளைத் தேடி ஆராய்ந்து, தரமான முழுமைப்பெற்ற கவி உருவொன்றுக்கு உயிர் கொடுத்த பின்புதான் பொருத்தமான தலைப்பிடுவேன்.
இதில் இரண்டாவது ரகமாகவே மொழியும் ஒலியும் போல் எதையும் எழுதி இன்புற்று பயன்பெற்றுக் கொள்கிறேன்.
?????????
ஒரு கவிதையை எழுத எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வீர்கள்?
ஆணின் அணுவும், பெண்ணின் கருவும் சேர்ந்தே குழந்தை உருவாக்கப்படுகிறது.
உணர்வின் உரசலும், வார்த்தைகளின் தேடலும் சேர்வதால்தான் கவிதை கருவாக்கப்படுகிறது என்கிறேன்.
முழுமையான ஆரோக்கியமான சிசுவொன்றை பிரசவம் செய்வதற்கு பத்து மாதங்கள் காத்திருப்பது போல் செழுமையான கவியொன்றை பிரசுரிக்கவும் பல நாழிகைகள் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.
எனக்கு பெயர் வாங்கித் தந்த பல கவிதைகளை இருபது நாள் தொடக்கம் ஐம்பது நாள் வரை தேடி ஆராய்ந்துதான் எழுதினேன் என்பது கூடுதல் தகவல்.
இங்கு என்ன கூற விரும்புகிறேன் என்றால். இணையத்தில் எழுதுகின்ற வளரும் எழுத்தாளர்கள் எழுதுவதை அப்படியே பதிந்து விடுகிறார்கள். அது காத்திரமானதொரு படைப்பாக இருக்காது என்பது எனது நம்பிக்கை. எனவே, நீங்கள் எழுதிய எழுத்துக்கு நீங்களே முதல் வாசகனாக இருந்து மீண்டும் மீண்டும் வாசித்து திருத்தம் செய்து, வேதனைகளை தாங்கி ஒரு குழந்தை பெறும் தாய் போல் நீங்கள் எடுத்த கருவுக்கு நீங்களும் தாயாகுங்கள். கவிதைக் கருவின் சுகப்பிரசவம் ஒன்றுக்காக பொறுமையாக காத்திருந்து நிதானமாக தயாராகுங்கள். எக்குறையுமின்றி அந்த ஆக்கம் காத்திரமானதாக மாறி கைத்தட்டல்கள் வாங்கும்.
?????????
நீங்கள் இறுதியாக எழுதிய கவிதை…?
“போர்வைக்குள் போர் வை” என்ற தலைப்பில் மார்கழிப் பனியிரவை எழுதியிருந்தேன். அந்த கவிதையின் பனிக்குளிரில் உறைந்து போன கவிஞர் ஆனந்தத்தில் ஓர் அனல் அவர்கள் தனது தேனினிய குரல் பதிவினூடாக யுடியூப் வளைத்தளத்தில் பதிவிட்டு நல்லதொரு வரவேற்பை பெற்றுத்தந்தார். திரு Jeewan என்ற இயற்பெயர் கொண்ட ஆசிரியராகிய அவர் ஊடகவியலாளராகவும், ஓவியராகவும், கவிஞராகவும், இசையமைப்பாளராகவும் மற்றும் பாடலாசிரியராகவும், அறிவிப்பாளராகவும் பன்முகம் கொண்டு கலைப்பணி புரிவதோடு வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து ஊக்குவிக்கும் நல்ல மனிதர் என்பதையும் இவ்விடம் பெருமையாக பகிர்ந்து கொள்கிறேன். அந்த கவிதை வருமாறு.

போர்வைக்குள் போர் வை..!

இனி வரும் மார்கழிப்
பனி விழும் விடியல்களில்
போர்வைக்குள் போர்வைப்பாய் நீ.
குளிர் வேகுமென் தேகத்தை
எரிய விட்டு தவிக்கவிடாது;
எதையேனும் தெரிய விட்டு
தேவை பூர்த்தி செய்வாய்.
வெளிச்சம் வைகறை இருளை
உறவுக்கு அழைக்கும் நேரத்தில்;
பயிருக்கு நீரூற்றும் உழவனாய்
நீ உயிருக்குள் தேனூற்றுவாய்.
மிதமாய் சூடிருக்க
ஈரப்பதம் சேர்க்கும் விதமாய்
நெஞ்சுத் தனம் உரசுவாய் இதமாய்.
பின் எனை அணைத்து,
ஆசை அனைத்தும் அழித்து,
வேட்கைத் தீயை அணைத்து
குளிர் இரவுகளை விடையனுப்பிவைப்பாய்.
மார்கழி போகும் வரை
உன் மார்வழி சாகும் பாக்கியம்தான்
பேர்வலி தந்த 2020ஆம் ஆண்டை
மறக்கச் செய்கிறது பெண்ணே..!

செல்வாகவி

?????????
உங்கள் மனதில் நீங்காது நிற்கும் கவிதை வரிகள்… காரணம்?
கிணற்றில் குழந்தை தவறி விழுந்த சேதி கேட்டு ஓடி வந்தார்கள்
காடு கழனிகளுக்கு சென்றவர்கள்..!
பதற்றத்துடன் பரபரப்புடன்
எல்லோரும் தேடினார்கள்
அவரவர் குழந்தைகளை..!
யாரோ ஒருவர் எழுதிய இந்த கவிதை 2002 ஆம் ஆண்டு வெளியான ஆனந்த விகடனில் எனக்கு வாசிக்க கிடைத்தது. 19 வருடங்கள் கடந்து போன பின்பும் இன்னும் நினைவில் இருக்கின்றது. சுயநலம் கவிதையில் புரையோடிக் கிடந்தாலும் தாய்மையின் பாசத்தையும் மகத்துவத்தையும் மிகத் தெளிவாக இலதுவான நடையில் சொல்லியிருப்பதால் இக்கவிதை மனதில் நீங்காது இடம்பிடித்துள்ளது.
?????????
கவிதை நூல்களை வெளியிட்டுள்ளீர்களா?
என் உணர்வு மரக்கிளைகளின் மனக்கிளையில் பல வர்ண கவிப்பூக்கள் பூத்துக்கிடக்கின்றன. அது ஒரு கிளையில் சேர்ந்து கொத்தாக மஞ்சரியாகும் நாளுக்கான வாய்ப்பு இன்னும் கைகூடவில்லை எனக்கு.
என் கவிப் பூக்கள் எல்லாம் நூலென்ற ஓர் கிளையில் கோர்த்து வைத்து மஞ்சரி போல் கொத்துக் கொத்தாய் குலுங்கவிடும் நாள் வெகு சீக்கிரம் வரும். அது வசதி வாய்ப்புகளைப் பொறுத்து காலதாமதமாகிறது.
?????????
கவிதை எழுதுவது தவிர்ந்த வேறேதேனும் துறையில் ஆர்வம் உண்டா?
கவிதையை எனக்கான முதல் அடையாளமாகவும் ஆர்வமாகவும் நேசித்து வருகின்றேன். அது தவிர புகைப்பட வடிவமைப்பு செய்வதில் மிக ஈடுபாடு எடுத்துக்கொள்வேன். தத்தகாரத்திற்கு பாடல்கள் எழுதும் ஆற்றலும் பெற்றுள்ளேன். பாடல்களும் எழுதி உள்ளேன். அதைக் கற்றுக்கொடுத்தவர் இலங்கையின் பன்முக கலைஞரான அமரர் ஸ்ரீதர் பிச்சையப்பா என்பதை எவ்வேளையும் மறவேன். மேலும் சில மேடைகளில் பாடல் பாடி பாராட்டும் பெற்ற வண்ணம் திறமைகளை வளர்த்துக்கொள்கின்றேன். நிகழ்ச்சி தொகுப்பு மற்றும் ஆங்கிலம் கலக்காமல் நேரடி கிரிக்கெட் வர்ணனை செய்வதையும் விருப்பமாக செய்து வருகின்றேன். கிரிக்கெட் நேரடி வர்ணனை செய்வதற்கான விருப்பத்தை வரவழைத்த அனுபவம் வாய்ந்த அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான திரு. மொசின் அவர்களுக்கும் இவ்வேளை அன்பு பகிர்ந்து கொள்கின்றேன்.
?????????
பரிசுகள்… பாராட்டுகள்… அங்கீகாரங்கள்..?
? தேசிய விருது ‘கலைச்சுடர்’.
2019 செப்டம்பர்.
இலங்கையின் மிக உயரிய தேசிய விருதான ‘கலைச்சுடர்’ என்ற விருதை எனது இருபது வருட கலைத்துறை சேவையை பாராட்டி இலங்கை அரசாங்கம் கெளரவத்துடன் வழங்கியது.
? சக்தி டீவி இசை இளவரசர்.
2008.
இலங்கையின் பிரபல தொலைக்காட்சியான சக்தி தொலைக்காட்சி 2008 ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவில் பிரமாண்டமாக நடத்திய இசை இளவரசர்கள் போட்டியில் பதினாறு பாடலாசிரியர்களில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டு தென் இந்திய தமிழ் சினிமா பிரபல பாடலாசிரியர்களை சந்திக்கும் அரிய வாய்ப்பை பெற்றுக்கொண்டேன். அந்த அற்புத பயணத்தின் போது அமரர் நா.முத்துகுமார், வித்தக கவிஞர் பா.விஜய், விவேகா, சினேகன், கவிஞர் கிருதயா, இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம் போன்றவர்களிடம் கலந்துரையாடி கவிதை பாடி பாராட்டையும் பெற்றுக்கொண்டேன். இந்த பெரும் வெற்றி எனக்கு பலபேரிடம் இருந்து பாராட்டையும் பரிசில்களையும் பெற்றுத்தந்தது.
? கவியூற்று விருது.
2019 டிசம்பர்.
களுத்துறை மாவட்டத்தில் உயரிய பல சமூக பணி செய்து வரும் ‘சிறகு’ அமைப்பு களுத்துறையின் கவியூற்று என்ற விருதை வழங்கி என்னை கெளரவித்தது.
? கவிப்புயல் விருது.
2020 செப்டம்பர்
அகலவத்தை டார்டன்பீல்ட் கணபதி அறநெறி பாடசாலை கவிப்புயல் என்ற விருதை வழங்கி என்னை கெளரவித்தது.
? பிரைநிலா விருது.
2019 பெப்ரவரி.
பிரைநிலா ஊடக அமைப்பினால் 2019 ஆம் ஆண்டின் சிறந்த முகநூல் கவிஞர் என்ற அங்கீகாரத்தை தந்து கெளரவப்படுத்தியது.
? பெருந்தலைவர் கிருஷ்ணன் விருது.
2019 ஒக்டோபர்.
களுத்துறை இங்கிரியவின் மிகச் சிறந்த சமூக ஆர்வலரான அமரர் திரு. கிருஷ்ணன் அவர்களின் நினைவாக கிருஷ்ணர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டேன்.
? சிறந்த படைப்பாளர் விருது.
2019 டிசம்பர்.
இந்தியாவில் பிரபலமாக இயங்கி வரும் ‘படைப்பு’ அமைப்பால் சான்றிதழாக பெறப்பட்டேன்.
? கம்போடிய நாட்டின் விருது.
2019.
கம்போடிய நாட்டின் “அங்கோர் தமிழ்ச் சங்கம்” நடத்திய உலகத் தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் எனக்கும் ஒரு விருது பரிந்துரை செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது. கம்போடிய நாட்டுக்கு சென்றால் மாத்திரமே விருது கையளிக்கப்படும் என்ற விதிமுறையால், செல்ல முடியாத காரணத்தால் அந்த விருதை பெற்றுக்கொள்ளும் மிகப்பெரிய வாய்ப்பை கை நழுவவிட்டேன்.
? ஆயிரம் கவிஞர்கள் நூல்.
2017 ஒக்டோபர்.
உலகின் சிறந்த 1000 கவிஞர்களின் கவிதைகளை ஒன்றுதிரட்டி ஒரு பெரும் வரலாற்று நூலாக அச்சு பதித்தார்கள். அந்த நூலில் எனது அறிமுகத்தோடு கவிதை இடம்பெற்றுள்ளது.
? கல்குடா நேசன் நேர்காணல்.
2016 டிசம்பர்.
இணையதள செய்தி நிறுவனமான கல்குடா நேசன் ஊடக அமைப்பின் இளையகிறுக்கல்கள் என்ற பகுதியில் 51 வது படைப்பாளியாக கவிதாயினி த.எலிசபெத் (ராஜ் சுகா) அவர்களால் நேர்காணல் செய்யப்பட்டேன்.
? தினகரன் வண்ணவானவில் வாய்ப்பு.
2019 மார்ச்.
தினகரன் பத்திரிகையின் வண்ணவானவில் சஞ்சிகையில் ‘வலைக்கம்பன்’ முகநூல் நட்சத்திர அறிமுகத்தோடு முழுப்பக்கத்தில் எனது கவிதைகள் பிரசுரமாகின. ஊடகவியலாளர் மணிஸ்ரீ அவர்களின் அன்பின் வெளிப்பாடாய் வெளிவந்தது.
? தினக்குரல் கலந்துரையாடல்.
2019 டிசம்பர்.
தினக்குரல் பத்திரிகையின் அழகி மாத இதழில் “இனிது இனிது” பகுதியில் எனது கலந்துரையாடல் முழுப்பக்கத்தில் பிரசுரமானது. நேர்கண்டவர் ஊடகவியலாளர் மேகலா அவர்கள்.
? கவிதை ஆங்கில மொழிபெயர்ப்பு.
2017 ஜனவரி.
இந்தியாவில் இயங்கும் ‘படைப்பு’ அமைப்பினரால் உலகலாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்திய கவிதை போட்டியில் எனது கவிதையும் தெரிவு செய்யப்பட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு செய்து நூல் வடிவத்தில் பிரசுரமானது. அந்தபோட்டியில் நடுவராக கவிஞர் மற்றும் பாடலாசிரியர் சினேகன் அவர்கள் கடமை புரிந்தது கூடுதல் மகிழ்ச்சி.
? சிறுகதை ஆக்கம்
கல்வி பயின்ற காலத்தில் நடைபெற்ற சிறுகதை போட்டிகளிலும் பங்குபற்றி பரிசில்கள் சான்றிதழ்கள் பெற்றுள்ளேன்.
?????????
உங்களை கவர்ந்த கவிஞர்?
கவிப்பேரரசு வைரமுத்து.
எனது கவியாற்றல் மேன்மை பெற இவரது கவி வசீகரம்தான் காரணம்.
அவரை விரும்பும் அளவிற்கு அமரர்களான கவிஞர் வாலி அவர்களையும் நா. முத்துக்குமார் அவர்களையும் ரசித்து வாசிப்பேன். ஈழத்தின் தமிழ் சினிமா பாடலாசிரியர் கவிஞர் Asmin அவர்களையும் வெகுவாக பிடிக்கும்.
?????????
சுட்டு போட்டாலும் கவிதை வராது என்பவர்களுக்கு கவிதை வர ஏதேனும் ரகசிய வழிகள் உண்டா?
இயற்கையை காதல் செய்யத் தூண்டும் இனிதான ரகசியங்களும் நுணுக்கங்களும் நிறைந்த கற்கைநெறி ஒன்று என் கைவசமுள்ளது. அதை நிறைவு செய்தபின் சுட்டுப்போட்ட பின்பும் அவர்களால் கவிதை சொல்லமுடியும்.
முதலில் அவர்களுக்கு பூங்காற்று கொண்டு வரும் பனி ஈரக் கவிதைகளை வாசிக்கப் பழக்க வேண்டும்.
பின் குயில், காக, மயிலோசைகளும் வண்டுகளின் ரீங்காரமும் இசைதானென்பதை இறுக்கமாக இயம்பி” உணர வைக்க வேண்டும்.
மூங்கில் காட்டில் வீடுகட்டித் தாருங்கள் என்று கேட்கும் வரை மூச்சு முட்ட; செவியூடாக இசையூட்ட வேண்டும்.
கடிகார முள் “சத்தம் போடவில்லை சங்கீதம்தான் போடுகிறதென்று” அவர்கள் வாயால் சொல்ல வைக்கும் வரை இதயத்தை இனிமையாக்க வேண்டும்.
தேநீர் அருந்தும் போது நிலாவை தொட்டுச் சுவைக்கும் தந்திரத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.
பின் அவர்களாகவே
“பெண்ணின் கன்னக்குழியில் விழுந்து
பின் கூந்தலைப் பிடித்து
வெளியே வந்துவிட்டேன்” என்று கவிதை பாட ஆரம்பித்து விடுவார்கள்.
அதே பெண்களாக இருந்தால்..,
“மீசை கண்ட பிறகு
ஆசை கொண்டு
என் தாய்மொழி
பாஷை மறந்து விட்டேன்”
என புலம்ப கிளம்பி விடுவார்கள்.
?????????
நம்மவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க என்ன செய்யலாம்?
என்ன செய்தாலும் வாசிப்பை ஊக்குவிக்க முடியாது என்ற இக்கட்டான நிலைக்கு நவீன மோகத்தின் வேகம் மக்கள் மனதை மாற்றம் செய்துவிட்டது. விசேடமாக இளையவர்கள்.
அதற்கு எடுத்துக்காட்டாக எமது ஊரின் “ஆனந்தா விளையாட்டு கழக” உறுப்பினர்களின் கடுமையான உழைப்பால் ஒரு நூலகத்தை திறந்து வைத்தோம். வெளிநாட்டில் இருந்தும் பல அரிய நூல்களை நான் பெற்றுக்கொடுத்தேன். ஆனால் இன்று வாசிகசாலை நூல்கள் தூசிகள் நிறைந்த புத்தக சோலையாக விரல்கள் தழுவாமல் தனிமையில் தவம் கிடக்கின்றன.
?????????
எழுத்து துறை மீதான ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது?
எனக்கு ஒன்பது வயதிருக்கும் போது ரோஜா பட பாடல்கள் 1992 இல் வெளியானது. ஏஆர். ரஹ்மானின் வித்தியாச சப்தங்களும் வைரமுத்து அவர்களின் புதுவித ரசனை வரிகளான “வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை.
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை. பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூப்பூப்பதில்லை.
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது” போன்ற கவித்துவம் மிகுந்த வரிகளின் பால் ஈர்க்கப்பட்டு எழுத்துத்துறைக்கு ஆசைப்பட்டு கிறுக்க ஆரம்பித்தேன்.
?????????
நீங்கள் இறுதியாக வாசித்து முடித்த புத்தகம்…?
வாசித்து முடித்தேன் மகாபாரதம். எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய “கடல் புறா” வாசித்துக்கொண்டிருக்கின்றேன்.
?????????
உங்கள் நண்பர்கள் சகோதர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்கள் என நீங்கள் பரிந்துரைப்பது…?
கவித்துவமான ரசனையுடன் பயணம் செய்ய வேண்டுமென்றால் “தண்ணீர் தேசம்” வாசியுங்கள். மனதுக்கு எழுச்சி மாற்றம் அல்லது விவேகம் உண்டாக வேண்டுமென்றால் அப்துல் கலாம் அவர்களின் நூல் வாசியுங்கள். “இளைஞர்களுக்கு அப்துல் கலாமின் சிந்தனைகள்” மற்றும் அக்கினிச் சிறகு போன்றவை.
?????????
எழுத்துத்துறையில் ஆர்வமுள்ள வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கும் விடயம்…?
நான் முதல் சொன்னது போல் அவ்வப்போது எதையேனும் எழுதி சமூக வலைதள பதிவாகவோ அல்லது நூலாகவோ வெளியிடும் ஒரு போக்குதான் தற்போதைய கலையுலகில் காணக்கிடைக்கின்றது. தரமான நல்ல கருவை எடுத்து அது சம்பந்தமான அறியா விடயங்களை தேடி படித்து ஆராய்ந்து எழுதினால் அந்த எழுத்து பழுத்து சுவை தரும் கனியாகும் என்பதை எழுத்துத்துறை ஆர்வமுள்ளவர்களுக்கு சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
எனது பல வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கும் இனி இருப்பவர்களுக்கும் எனது அன்புகளை பகிர்ந்து கொள்கிறேன்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal