
இதற்கென்று
ஏதும் சொல்ல எனக்கு
அருகதையில்லை…
எண்ணங்களை
விதைத்ததெல்லாம் யார்யாரோ,
ஏதேதோ நிகழ்வுகள்…
வளர்கையில்
நீரூற்றி ரசித்தது மட்டுமே
எனது வேலையாயிருந்தது…
கிளை பரப்பிப்
பெரிதாய் வளர்ந்திருக்கும்
எழுத்துக்களின் சாரங்களை
கவிதையென்று
கொண்டாடுகின்றனர்
எல்லோருக்கும்
மரமும் கிளைகளும்
மலர்களும் கனிகளும் மட்டுமே
தெரிகிறது…
மண்ணில் புதைந்த
விதைகளும்
இப்போது மண்ணுள்
இறுகப் பிடித்திருக்கும் வேர்களும்
எனக்கு மட்டுமே தெரிகிறது…
ஆனந்தப் பேராழியில்
அனைவரும் திளைக்கையில்
எனக்கு மட்டும்தான்
வற்றாக் கண்ணீர் வடிகிறது
மனதில்…
அதுசரி…
குழந்தையைத் தூக்கிக்
கொஞ்சுவோர்க்கு
அப்போதைய தாயின் வலி
ஒரு செய்தியாகத்தானே
போய்ச் சேர்கிறது…
நீங்கள்
சூட்டும் கவிஞனென்ற மகுடம்
என்னை ஏளனமாகத்தான்
பார்க்கிறது.
தகுதியற்று மேடையேறிய
அற்பப் பாடகனைப்போல்…
இருந்தாலும்
ரசித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
என்னுள்ளும் என்னைச் சுற்றி
நிரம்பியிருக்கும் கவிதைகளை…
ஆம்…
எனக்கு ரசிக்க மட்டுமே
தெரியும்…
அடக்கமுடியாமல் வெளிவரும்
தும்மலாய் சில எழுத்துக்கள்
வார்த்தைக் கோர்வையோடு
வந்து விழும்…
தும்முவோரெல்லாம்
கவிஞரல்லவே…
Rahmathullah K