முன்னுரை

உலகை ஆளும் ஒரு சொல் அன்பு. பலவிதமான அன்பு மனிதர்களால் பரிமாறப்படுகிறது. இத்தகைய அன்பே மனிதர்களை நல்அறங்களோடு வளர்த்தெடுக்கிறது. மனிதர்களுக்கிடையேயான அன்பு உறவு நிலைகளில் தொடங்கி உலகளாவியதாக உயருகிறது. அதேபோன்று மனிதர்களும் வேறுவகை உயிரினங்களையும் அன்பு செய்கின்றனர். எல்லாவகையான உயிர்களும் அன்பைக் காட்டினால் தூண்டல்களையும் துளங்கல்களையும் காட்டும் என்கின்றனர் அறிவியலாளர்கள். இவை இவ்வாறிருக்க, சமூகக் கட்டமைப்பிற்கு அடிப்படையான இவ்வன்பு நெருங்கிய நிலையில் மனிதர்களைப் பிரதிபலிக்கும் புதினங்களில் எவ்வாறு காட்டப்படுகின்றன என்பது ஆராயத்தக்கது. அந்தவகையில் ‘அன்பு’ என்கிற உய்ப்புநிலை எவ்வாறு கள்ளிக்காட்டு இதிகாசத்தில் காட்டப்பட்டுள்ளது எனக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

அன்பு

அன்பு மனிதரிடையேயும் பல்வேறு உயிரினங்களிடையேயும் எவ்விதமான தாங்கங்களை ஏற்படுத்தியதாகக் கள்ளிக்காட்டு இதிகாசம் புதினம் பதிவு செய்துள்ளது என்பதனை அறிய;

  1. மனிதர்கள் மீதான அன்பு
  2. தாவரங்கள் மீதான அன்பு
  3. பறவைகள் மீதான அன்பு
  4. விலங்குகள் மீதான அன்பு

என்பனவாகப் பகுத்துக் கொண்டு ஆராயலாம்.

மனிதர்கள் மீதான அன்பு

மனிதன் ஒரு சமூக விலங்கு என்பர் சமூகவியலாளர்கள். மனிதர்களை மனிதர்களாகக் காட்டுவது இந்த சார்பு நிலையும், அதனால் அவன் மனதில் எழும் அன்பு நிலையுமே ஆகும். இதனை மனிதநேயம் என்றும், மனிதம் என்றும் குறிப்பிடுவர். மனிதம் போற்றும் சில நிகழ்வுகள் பதிவு செய்யப் பெற்றுள்ளன.

கிராமங்களில் விசப்பூச்சிகளின் தீண்டல்கள் அடிக்கடி நிகழும். அதற்கான உடனடித் தீர்வாகக் கடிப்பட்ட இடத்தில் சுண்ணாம்பினைப் பூசுவர். அதே நேரத்தில் மாலை ஆறுமணிக்கு மேல் சில பொருட்களைக் கிராமங்களில் வீட்டிற்கு வெளியே கொடுக்க மாட்டார்கள். இந்நிலையில் மனிதம் உயிர் பெறுவதனை வைரமுத்து, “செல்லத்தாயி! செல்லத்தாயி! கிழவிக்குப் பூரான் கடிச்சிருச்சு வெடுக்வெடுக்கின்னு வெசம் ஏறுது. கடிவாயில வைக்கணுமாம், சுண்ணாம்புக்குடு… சுண்ணாம்பு” திடுக்கிட்டாள் செல்லத்தாயி கொடுக்கக்கூடாது சாஸ்திரப்படி. ஆனால் சாஸ்திரம் தள்ளிவைத்து தர்மம் காத்தாள். ஓடிச்சென்று சுண்ணாம்புச் சட்டியில் சுட்டுவிரல் விட்டழுத்தி கொள்ளைச் சுண்ணாம்பு கொடுத்தனுப்பினாள்” (1) என்று பதிவு செய்கிறார்.

தன் காதலி மற்றொருவனை மணந்து அவனும் இறந்து போக அவளுடைய அப்பாவும் சில நாளில் இறக்க, அதனை நினைந்து நினைந்து அவளது அம்மாவும் இறந்துபோக, எந்தவித ஆதரவும் இல்லாமல் அனாதையாக நின்றவளைக் கண்டு மனிதம் விழித்தெழ பேயத்தேவர் என்கிற கதாப்பாத்திரம் தன் வீட்டிற்கே அழைத்து வருவதனை “கேட்டுக்கடி அழகம்மா. இன்னிக்கிருந்து இவளும் நம்ம குடும்பத்தில ஒருத்தி. நீ குடிக்கிற கஞ்சியில கொஞ்சம் இவளுக்கும். நான் மொதல்ல செத்தா நீங்க கூடி என்ன தூக்கிப் போடுங்க. நீங்க மொதல்ல செத்தா நான் தூக்கிப் போடுறேன்” (2) என்று குறிப்பிடுவதே காதலை விடவும் மனிதமே உயர்ந்து நிற்பதை உணர முடிகிறது.

இவற்றிற்கும் மேலாக தன் கணவனின் காதலி என்று அறிந்தும் அனாதையாக்கப்பட்ட நிலையில் தம்மை போன்ற பெண் என்று மட்டுமே கருதி அவளைத் தன்வீட்டில் அனுமதிக்கும் நிலையினை “எந்திரியாத்தா…எந்திரி. நீ எதச் சொல்ல நெனக்கிறியோ அத முப்பது வருசத்துக்கு முன்னாலேயே எங்கிட்டச் சொல்லிருச்சு எஞ்சாமி” கீழே விழுந்து கிடந்தவளைச் சேர்த்து அள்ளினாள் அழகம்மாள்” (3) என்று பெண்ணின் உயர் மனதைக் காட்டி விடுகிறார் வைரமுத்து.

தன்அம்மா மறுமணம் செய்து தன்னை விட்டுச் சென்றதைத் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயலும் நிலையில் அவனைக் காப்பாற்றுவது மனிதத்தின் பொருட்டே ஆகும். இதனை “மொக்கராசை மூக்கில் குத்தி மூர்ச்சையாக்கித் தோளில் ஏற்றிக் கரைசேர்த்தான் காவல்காரன். முகத்தில் டார்ச் அடித்தான் ஒருவன் “ஏய்! நம்ம பேயத்தேவர் பேரன் மொக்கராசு. இப்பதானப்பா இவுக ஆத்தாளுக்குக் கூடக் கல்யாணமாச்சு” இடுப்பில் கட்டியிருந்த கயிற்றைச் சாட்சிவைத்து அவன் தற்கொலைக்கு வந்தவன் என்பதனை அனுமானித்து தலைகீழாய்க் கவிழ்த்துத் தண்ணீர் கக்கவைத்து பேயத்தேவர் வீட்டில் கொண்டு சேர்த்தபோது ஊரே கூடிவிட்டது” (4) என்று காட்டுகிறார். இத்தகைய மனிதர்களின் மனிதத்தின் காரணமான உதவிகளால் தாம் கிராமங்கள் மனிதத்தின் பிறப்பிடமாய் இருக்கின்றன.

தாவரங்கள் மீதான அன்பு

தாவரங்கள் (பயிர்கள்) என்றாலே விவசாயிகளின் வாழ்வு என்று அர்தத்தம். பயிர்களில்லா விவசாய வாழ்வு இல்லை. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரை விடவும் வாடிப்போவது நம் விவசாயிகள் தாம். இதனைப் பாதுகாத்து அதற்குத் தேவையானவற்றைச் செய்யும் விவசாயி குறித்து “மட்டைக்குள்ள இருந்த வண்டு புழு பூச்சிகளையெல்லாம் எடுத்துவிட்டாரு. பெறகு மேல் மட்டையப் புடிச்சிக்கிட்டு கீழ்மட்டையில கால் வச்சு பலங் கொண்டமட்டும் மிதிச்சுக் குதிச்சாரு. இருகிக் கெடக்கிற மட்டைக விரியணுமாம் கலகலன்னு காத்தாடணுமாம். குறுமணலையும் வேம்பம் பிண்ணாக்கையும் கலந்து மயக்கம் போட்டுக் கிடக்கிறவன் மூஞ்சியில தண்ணி தெளிக்கிற மாதிரி மட்டைக்குள்ள அடிச்சாரு” (5) என்கையில் விவசாயி எங்ஙனம் மரங்களைப் பாதுகாத்தனர் என்பது புலனாகிறது.

சில மரங்கள் சந்ததிகள் தாண்டி நிலை பெற்றிருக்கும். அதன் பயன் கருதி மட்டுமல்ல அதன் இருப்பு தவிர்க்க முடியாததாகி அதுவே தெய்வமாகும் நிலையையும் எட்டிவிடுகிறது. அந்நிலை குறித்து “பொழுது மசங்க அங்கே அடைய வரும் கிளிகள் பறந்து பறந்து பாடும் போதும் பலிஞ்சடுகுடு ஆடும் போதும் புளியமரமே குரலெடுத்து பேசுவதாய்த் தோன்றும். சாலையை ஒட்டித் தோட்டத்தோடு சேர்ந்திருப்பதால் பேயத்தேவர் அந்த மரத்தைக் குல தெய்வமாகக் கும்பிட்டு வந்தார்” (6) என்று பதிவு செய்கிறார்.

அணைத் தண்ணீர் வந்து விளைந்த பயிர்களெல்லாம் மூழ்கப் போகும் நிலையில் ஒரு விவசாயியின் மனம் தாங்கிக் கொள்ளுமா? தாங்க முடியா விவசாயியின் நிலையினை;

“தெக்குத்தோட்டம்
வெளைஞ்சு நிக்குது கம்பங்காடு.
கடைசி அறுவடை
பேயத்தேவரு கண்ணுல கண்ணீரு.
நடுங்குது ஈரக்கொல: ஒடுங்குது உசுரு” (7)

எப்பொழுது வேண்டுமானாலும் அணையின் நீர்மட்டம் ஊரையே முழுகிவிடும் என்று அறிந்தும் கதிரறுவாள் கொண்டு அறுவடைக்குச் செல்லும் விவசாயியின் ஒப்புப் பாடலினை வைரமுத்து;

“சடை சடையாய்த் தானியங்க
சரஞ்சரமாத் தட்டாங்க
நச்சுன்னு புடிச்சகாடு
நாளைக்கு என்னதில்ல
கடைசி அறுவடைக்குக்
கையோட தெம்புமில்ல
கருதறுக்கும் பண்ணருவா
கழுத்தறுத்தாத் துன்பமில்ல” (8)

என்று குறிப்பிடுகையில் பயிர்களின் நினைவும் அணையின் நீரில் கரைசேராமல் போகப் போகும் கடைசி அறுவடையும் விவசாயியின் மனதில் வேதனை விதைப்பதை உணர முடிகிறது.

பறவைகள் மீதான அன்பு

பறவைகள் என்றாலே ருசி பார்க்கத்தான் என்று ஒரு சிலர் நினைக்கையிலே அவைகளும் உயிர்கள் தாம் என அவற்றைச் சிலர் பாதுகாக்கவும் முற்படுகின்றனர். காடையினைச் சாப்பிட பிடித்துச் செல்லும் காதலனிடம் கனிவாகவும் அதே நேரத்தில் கொல்லக்கூடாது என்பதனைக் காட்டும் விதமாகவும், சமைக்கக் கொடுத்த காடையினை திரும்ப அவரிடமே ஒப்படைக்கும் சூழலினை, “கொழ கொழன்னு கொழந்த மாதிரி இருக்கு காடை. கொல்லமனசில்ல… குடுத்திரு” காடைய ஒப்படைச்சிட்டா கத்தாழ நாரோட” (9) என்று பதிவு செய்கிறார்.

கிணற்றுக்கு நீரிறைக்கச் சென்ற செல்லத்தாயி கூட்டிலிருந்து கீழே விழுந்து தத்தளித்த காகத்தினை கூடு சேர்த்த நிகழ்வினை “கிணற்றுக்குள் கதறிப் பறந்தது காகமொன்று. கிணற்றின் உள்வட்டப் பொந்தில் அதுகட்டிய கூட்டிலிருந்து தவறி விழுந்த குஞ்சு தண்ணீரில் கிடந்தது. பதறிப் போனாள் செல்லத்தாயி “யாத்தே” என்ற நெஞ்சில் ஒருகணம் கைவைத்து நின்றாள். மிதக்கும் குஞ்சருகே வாளியை வீசினாள். என்னதான் முயன்றும் சின்னக் குஞ்சு வாளியில் சேரவில்லை. அவள் கொஞ்சங்கூட அஞ்சவில்லையே உருளையில் கயிற்றை உருவாஞ் சுருக்கிட்டுச் சரசரவென்று கிணற்றிலிறங்கினாள். குஞ்சைக் கூடுசேர்த்து காகத்திடம் ‘கொத்தும் பெத்து’ சொட்டச் சொட்டக் கரையேறினாள்” (10) என்று காட்டுகிறார்.

கோழி போன்ற வீட்டில் வளர்க்கும் பறவைகளைச் சொத்து எனவே மக்கள் மதித்ததனை “அய்யோ! ஏன் ஆஸ்தி போச்சே!” என்று அலறினாள். “என்கோழிய எந்தநாய் தூக்குச்சோ? இல்ல எந்தத் தூமச்சீல வந்து தூக்கிட்டுப் போனானோ?” (11) என்று திருடு போன தன் கோழி தன் சொத்தெனவும் அதனைத் திருடியவர்களை திட்டித்தீர்க்கும் பெண்ணை படைத்துக் காட்டியிருக்கிறார் வைரமுத்து. அதேபோன்று வீட்டில் வளர்க்கப் படாதகாட்டுப் பறவைகளுக்கும் இரங்கும் விவசாயியின் மனதை “வெவசாயம் பண்றது காக்கா குருவிக்கும் சேத்துத்தான்! நம்மளும் வெரட்டிட்டா அதுக எங்கிட்டுப் போகும்?” (12) என்று நினைப்பதாகப் பதிவு செய்கிறார்.

விலங்குகள் மீதான அன்பு

மனிதனின் முதல் முயற்சிகள் பலவும் விலங்குகளின் மூலமாகவே பரிசோதிக்கப்பட்டது. விலங்குகளை பழக்கப்படுத்தி அவன் தொடர்ந்து முன்னேறிக் கொண்டேயிருக்கிறான். ஏதேனும் ஒரு விலங்கினை தனது வீட்டில் வளர்க்கவும் பழகிக் கொண்டான். சக்கரக் கண்டுபிடிப்பின் உச்சமாக எருதுகளைப் பூட்டியதும் தான் போக்குவரத்து உண்டானது. இத்தகைய எருதுகள் இன்றும் விவசாயத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. காளைகள் உழவுக்கும் மனிதருக்கும் நண்பன் ஏதாவதொரு விதத்தில் அதன்மீது கோபத்தைக் காட்டிவிட்ட உழவனின் மனநிலையை “ரெண்டு மூணுநாளாய்ப் பேயத்தேவருக்கு அன்னந்தண்ணி செல்லவில்லை காடுகரை போகவில்லை ‘ஏம்பத்தி கெட்டுப் போச்சே! ஏம்புத்தி கெட்டுப் போச்சே!’ என்று புலம்பிக் கொண்டே இரவும் பகலும் கொட்டத்திலேயே விழித்துக் கொண்டு மாட்டின் காயத்தின் மீது கண்ணீர் விட்டுக் கழுத்தைக் கட்டிக் கொண்டே கிடந்தார்” (13) என்று கூறுகையில் மாடுகளின் மீதான அன்பு புலப்படுகிறது.

பல வருடங்களாக வளர்த்த மனிதர்களை மாடுகளும் மறக்காமல் அவர்களின் வாசனை தேடிவருவதும் நிகழ்வதுண்டு. மாடுகளை வேறு ஒருவர் ஒட்டிக் கொண்டு போன பிறகும் அவை வீடுவந்து சேர்ந்த நிகழ்வினை, “பாதி அறுந்த கயிற்றோடு மயிலக்காளையும் பிய்த்துக் கொண்டோடி வந்த முளைக் குச்சியோடு செவலைக் காளையும் ‘வந்துட்டம்யா’ என்று கண்ணில் நீர் பெருக்கி நின்றன. “வந்துட்டீங்களா… என் செல்லங்களா!” மாடுகளின் மீது விழுந்து-புரண்டு -தடவி -வருடி -அழுது -புலம்பி -அணைத்து -அரற்றி அவற்றின் வாயோடு முத்தமிட்டுப் பைத்திய நிலையில் பரவசமானார் பேயத்தேவர்” (14) என்று கூறும்போது விலங்குகளின் மீதான அன்பின் உச்சநிலையை காணமுடிகிறது.

விலங்குகளில் விவசாயியின் நண்பனான மாடுகள் கன்றுகளாக இருப்பது முதல் அவை வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை ஒன்றின் ஒன்றாக தொடரும் நினைவுகளின் வழி பேயத்தேவரின் கதாப்பாத்திரம் மூலமாக வைரமுத்து “ரெண்டாளு மட்டம் தண்ணிபோகுது ‘கன்டு’ மருகுது என்ன பண்ண…? இந்த ரெண்டு தோள்ல தூக்குனேன் கன்னுக் குட்டிய “தண்ணியோட நான் போனாலும் பரவாயில்ல கன்டக் கரசேத்துரு சாமி”ன்னு பாரத்த சாமிமேல போட்டுக் கன்ட என்தோள்ல போட்டுக் கரைசேத்தன்டா…! அன்னைக்கி அது என் ஒடம்புல ஒட்டுனவாசன இன்னைக்கி வரைக்கும் மணக்குதடா” (15)

மாடுகள் மனிதர்கள் மீது தனது அன்பினை வெளிப்படுத்துகிறதா என்றால் அவையும் தனது அன்பினை காட்டவே செய்கின்றன என்பதனையும் “அரைகுறையாய் அரைத்த மருந்தை எடுத்துக் கொண்டோடி மாட்டின் வாயை அகலத் திறந்து புகட்டக் கொஞ்சம் கொஞ்சமாய் விசம் இறங்கியது. விசம் நீங்கிய மாடு அன்றைக்கு அவரை ஒரு பார்வை பார்த்ததே! இப்படி ஒரு நன்றியுள்ள பார்வை எந்தமனுசக் கண்ணிலாவது உண்டா?” (16) என்று மாடுகளின் அன்பினையும் பதிவு செய்கிறார்.

முடிவுரை

இப்படியாக மனிதர்கள், தாவரங்கள், விலங்குகள், பறவைகள் ஒன்றின் ஒன்றாக பிணைந்துள்ள இந்த அன்புணர்வே இன்னும் மனித இனம் நிலை பெற்றிருப்பதற்கான அடிப்படை. மனிதமில்லாத மனிதன் இருந்த மனிதன் இருப்பதலால் இந்த பிரபஞ்சத்திற்குக் கூட எந்த நன்மையும் விளையப் போவதில்லை. ஆகவேதான் சமூகம் கருதும் எழுத்தாளர்கள் மனிதத்தையும் அன்புணர்வையும் முன் வைத்து படைப்புகளைப் படைக்கின்றனர். அந்த வகையில் அமைந்தது தான் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் எனும் புதினம் என்பது மேற் சொன்ன காரணங்களால் புலனாகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal