
சூரியக் குளியல் ஒன்றும்
சாதாரணமானதல்ல…..
ஆழத்தில் தெரியும்
அலையோர அழகைப்போல
தலைநரையின் பின் புரியும்
வாழ்வியல் நாதம் போல
செங்குளியலும்
ஒருவகை பேரமைதிதான்….
ஒருவகை தேன்தூவல்தான்….
வில்லோடு நாணாக
விடிகின்ற காலைகள்….
நிறையாத என் வாழ்வை
நிறைக்கின்ற போராட்டம்….
வாழாத வாழ்விற்காய்
வீழாது போகிறேன்….
அது…..
செந்தீயின் தகதகப்பு….
உயிர்முள் என்னுள்
எம்பிஎம்பி குதிக்கும்…..
ஆசைதான்,
அடைபட்டுவிட….
கூண்டிற்குள் அல்ல
கூட்டிற்குள்….
வழுவழுப்பான
இளமையைக்காட்டிலும்
சுருக்கம் விழுந்த
முதுமைகளில்
எத்தனை நிறைவு…..
கற்பனைகளுக்கு உயிரூட்டுவது
ஆபத்தானது,
அபத்தமானதும்.
அதிக இனிப்பும் கூட
அதிகாரமாகிவிடுகிறது…….
கற்பாறைகள் இல்லாமல்
நதிகளுக்கு ஏது சங்கீதம்?
கோபிகை.