எழுத்து – தூரா.துளசிதாசன்

காற்றின் மொழிதனை
மொழிபெயர்ப்பு செய்யும்
செந்தூரப் பூக்களே…!
காற்றில் கரைந்திட
நினைப்பதென்ன நியாயம்…?
பூக்களெல்லாம்
தற்கொலை கொண்டால்
மகரந்தச்சேர்க்கை ஏது..?
மானுட வாழ்க்கை ஏது.?
இரவின் அழகை
அள்ளி பருகுகின்றாய் ..
பகலின் ஒளிச்சாரலில்
களிப்போடு நனைகின்றாய்…
இன்பத்தின் நிழலில்
நடனமாடும் நீ
துன்பத்தின் வெயிலை
புறக்கணிப்பது ஏனோ..?
இரவும் பகலும்
இன்பமும் துன்பமும்
கால இடைவெளியில்
தொடர்வது தானே
வாழ்வின் ரகசியம்…
பூக்களே..! கொஞ்சம்
அழுவதை நிறுத்துங்கள்..
உங்கள் ஒப்பாரி
சத்தத்தில் மொட்டுக்களும்
ஊமையாகிவிடும்..
வண்டுகள் தீண்டாத
மலர் காய்ப்பதில்லை
குயவனின் கைகளால்
சூடுபடாத களிமண்
மண்கல னாவதில்லை..
கல் தடுக்கியதும்
விழுந்தவனை யாரும்
தேடுவதில்லை..
எவரெஸ்டில் ஏறி
விழுந்தவனை அல்லவா
பறைசாற்றுகிறோம்…
தும்பிகள் அரித்த
மூங்கில்களே புல்லாங்குழலாகின்றன ..
கண்ணீரில் மலரும்
புன்னகை பூக்களே
அதீத மணம் வீசுகின்றன…
வாழ்க்கை நதியில்
துன்பமெனும் துடுப்புகளை
கையாளத் தெரியாத
படகோட்டி இன்பக்கரையை
ஒருபோதும் அடைவதில்லை…
காயப்படுத்துவது அல்ல
உள்ளத்தை செதுக்குவதே
சுடுசொல்…
வலிகளில் வீழ்ந்துவிடாமல்
வழிகளை தேடுங்கள்
சிற்றொடையாய்…
முற்றுப்புள்ளி முன்
மண்டியிடுவதா வாழ்க்கை..?
காமாக்களை போல
கம்பீரமாய் கடந்துவிடுங்கள்
வாழ்வின் ரகசியம் தேடி…
எண்ணங்கள் எதிர்மறையானால்
எறும்பும் உன் எதிரியே..
எண்ணங்கள் நேர்மறையானால்
இமயமும் உன் கைக்குள்…
இதயத்தில் படிந்துள்ள
கனதிகளை அப்புறப்படுத்தி
கனவுகளை நோக்கி
பயணித்து விடு
வண்ணத்துப்பூச்சியாய் மகிழ்ச்சி
உன் இதயத்தில்
சிறகை விரிக்கும் ….
தூரா.துளசிதாசன்