
நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் இலங்கையில் கல்வித்துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது எனக்குறிப்பிட்டு பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.
எமது அரசாங்கம் கல்வித்துறையில் எண்ணமுடியாத அளவிற்கு வெற்றியை பெற்றுக்கொண்டது. கொவிட் தொற்று முழு உலகையும் ஆட்கொண்ட சந்தர்ப்பத்தில் எம்மைவிட செல்வந்த நாடுகளின் பாடசாலைகள் கூட மூடியே காணப்பட்டன.
எனினும், முறையான முகாமைத்துவம் மற்றும் தயார்ப்படுத்தல் காரணமாக பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல எமக்கு முடியுமானதாயிற்று.
ஒரு வாரத்திற்கு முன்னதாக சாதாரணத் தரப் பரீட்சையை நிறைவுசெய்தோம். ஆறு இலட்சத்து 22 ஆயிரம் மாணவர்கள் 5413 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்கு தோற்றினர்.
பரீட்சை ஆரம்பிக்கும் போது கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 38 மாணவர்கள் காணப்பட்டனர். 322 மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்தனர். 40 விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. பரீட்சை நிறைவுபெறும் போது 62 கொவிட் தொற்றாளர்கள் மாத்திரமே காணப்பட்டனர்.
ஜுன் மாதத்தில் சாதாரணத் தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின்றன. ஜுலை மாதத்தில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. உயர் தரப் பரீட்சைகளை நடத்த வேண்டாம் எனப் பலர் கூறினர்.
எனினும் 3 இலட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றினர். ஏப்ரல் மாதத்தில் பெறுபேறுகள் வெளியாகும். 2021 செப்டம்பர் மாதத்தில் அப்பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியும் எனத் தெரிவித்தார்.