எழுதியவர் – தமிழ்செல்வன்.

இளங்கோ தன் ஆதார் கார்டை தேடிக்கொண்டிருந்தார்.
” இப்போ எதுக்கு உங்களுக்கு ஆதார் கார்ட். ஊரே முடங்கி போயிகிடக்கு”
”40 நாள் ஆச்சு, தண்ணி அடிச்சு.இவ்வளோ பெரிய இடைவெளி விட்டதே இல்லை. நாளைக்குதான் கடை தொறக்க போறாங்க. ரெண்டு சொட்டாவது குடிச்சா தான் என் உடம்பு கொஞ்சம் சுறுசுறுப்பாகும். ஆதார் கார்ட் காமிச்சாதான் சரக்கு குடுப்பாங்கனு நியூஸ் வேற போட்டிருக்காங்க ”
”நீங்க தெளிவா இருக்கிறதே இங்த 40 நாள் தான். இப்போ இருக்கற மாதிரியே இருந்துடுங்களேங்க. உங்களுக்கு புண்ணியமாப் போகும் ”
”கார்ட் கிடைக்கட்டும் ஜானகி . நாளைக்கு மட்டும் தான். அப்புறம் வாரத்துக்கு ஒன்னு ,அப்புறம் மாசத்துக்கு ஒரு நாள் ,அப்புறம் வருசத்துக்கு ஒரு நாள் ,இப்படியே படிப்படியா நிறுத்திடறேன் ”
” இப்போ சொல்லுவீங்க , திரும்ப ஆரம்பிச்சா எல்லாத்தையும் மறந்துடுவீங்க. சும்மாவா சொன்னாங்க குடிகாரன் பேச்சி விடிஞ்சா ..”
” போதும் நிறுத்து .ஜானகி .நான் நிம்மதியா இருந்தா உனக்கு புடிக்காதே ஊர்ல எல்லாரும் பண்றதுதானே இது .”
தன் மனைவியுடன் வாக்குவாதம் செய்வதை நிறுத்தி தன் தேடலைத் தொடர்ந்தார்.
அவர்களின் மகள் கலைவாணி அதை பார்த்துக்கொண்டு இருந்தாள். ஜானகி சமையலறை சென்றதும் அப்பாவிற்கு அருகில் சென்று ரகசியமாக பேசினாள் .
”அப்பா ,என்னோட ஆதார் கார்ட் தரேன் யூஸ் பண்ணிக்கறீங்களா ?”
”வேண்டாம் கலை , சொந்த கார்ட் தான் கொண்டு போனும் ,அடுத்தவங்க கார்ட் எடுத்துட்டு போனா தரமாட்டங்க ”
”நானே நாளைக்கு கடைக்கு போயி வாங்கிட்டு வரவா ”
” ஒன்னும் வேண்டாம் ,அது எல்லாம் பாதுகாப்பு இல்ல . நீ ஒன்னும் போகவேண்டாம் என்னோட கார்டு கிடைச்சதும் நானே வாங்கிக்கறேன்”
”சரிப்பா ”
”உனக்கு தான் நான் தண்ணி அடிச்சா புடிக்காதே . இப்போ எதுக்கு அக்கறையா கேக்கற ”
” நீங்க அம்மாக்கூட பேசினதை கேட்டேன் ,, கொஞ்சம் கொஞ்சமா இந்த பழக்கத்தை விடறேன்னு சொன்னீங்கள்ல . அப்படியே கம்மி பண்ணி நிறுத்திடுங்க ”
”சரி கலை , நிறுத்திடறேன் மா ”
அவரின் ஆதார் கார்ட் இரவு வெகுநேரம் தேடியும் கிடைக்கவில்லை. ஏமாற்றதுடன் தூங்கினார் .
மறுநாள் மாலை அவர் மேஜை மேல் அவருடைய ஆதார் கார்டும் சில மது பாட்டில்களும் இருந்தன .
மொட்டைமாடிக்கு சென்றார். அவர் மகள் கலைவாணி புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள்.
தன் செல்போனில் இருந்த படத்தைக்காட்டி ” இந்த பொண்ணு நீதானா ?” என்றார்,
” ஆமாம்பா நான்தான் ”
”எதுக்கு இப்படி பண்ண. உன்னை போகவேண்டாம்னு சொன்னேன்ல . பேஸ்புக் ,வாட்ஸாப்ன்னு எல்லா இடத்துலயும் இதுதான் பேசிட்டு இருக்காங்க ”
”உங்களுக்காகத்தான் போனேன்பா ”
”இது எவ்வளவு பெரிய ரிஸ்க் தெரியுமா? அது நீதான்னு வெளியே தெரிஞ்சா எனக்கும் அவமானம் ஆயிடும் , உன்னோட வாழ்க்கையும் பாதிக்கும் ”
”என்ன பத்தி தானே தப்பா பேசப்போறாங்க , உங்களுக்கு இதுல என்ன அவமானம் ”
”சொந்த மகளை ஒருத்தர் தப்பா பேசினா அது அப்பாவுக்கும் அவமானம் தானே ”
”இருக்கட்டுமே அப்பா , சொந்த அப்பா குடிக்கறதால நான் சின்ன வயசுல இருந்து ஏற்கனவே எவ்வளவு அவமானப்பட்டிருக்கேன்னு தெரியுமா ? ”
இளங்கோ மௌனமாக இருந்தார்.
”இனிமேல் எப்போ வேணும்னாலும் நானே உங்களுக்கு வாங்கிட்டு வந்து கொடுக்கறேன் ”
” அதுக்கு அவசியம் வராது கலை. எனக்கு அவமானத்தோட வலி நல்லா புரியுது ”
[ முற்றும் ]