எழுதியவர் -துளசி வேந்தன்.

வீட்டு முற்றத்தில்
கிடத்தியிருக்கிறது
அம்மாவின் உடல்,
பக்கத்து சுவற்றில்,
மாட்டுச்சாணம்
மொழுகிய
அவளின் தடம்
இன்னும் ஈரம் போகாமல்
அப்படியேதானிருக்கிறது,
அவளின் தாலிச்சரடு
தனக்கென்று
பிடிவாதமாய்
தலைமாட்டில்
பெரிய அக்கா,
அவளின் காதுத்தோடு
தனக்கென்று
பிடிவாதமாய்
காலடியில்
சின்ன அக்கா,
அந்நேரம் பார்த்து,
கொட்டகையிலிருந்து,
“அம்மா அம்மா”
என்று கதறும் பசுக்கள்
அவளைத் தேடுகிறது,
அவிழ்த்து விட்ட,
கன்றுகள் ஓடிவந்து,
பெரியக்காவையும்,
சின்னக்காவையும்,
முட்டித்தள்ளி,
கட்டியிருக்கும்
அம்மாவின் கால்களை
நக்குகின்றன…