எழுதியவர் – கா.ரஹ்மத்துல்லாஹ்…

எத்தனையோ முறை
உருமாற்றம் நிகழ்ந்த போதும்
எத்தனையோ நபர்கள்
வந்தமர்ந்து எழுந்த போதும்
அப்பாவின்
நினைவை மட்டும்
மாற்றிவிட இயலவில்லை…
எப்போதாவது
என்றோ இறந்துபோன அவரின்
வாசனையைக் கட்டில் முழுக்கத்
தேடிப் பார்க்கும் போது
காலம் உருவாக்கிய வெறுமைக்குள்
எந்தவித வாசனையுமின்றிப் புகுந்துகொள்கிறார்…
பேரப்பிள்ளைகளின்
எல்லைமீறியக் குறும்புகளைக் கண்டிக்கையில்
சாதாரணமாக வார்த்தைகளின் சாயலாகவோ
செயல்களின் ஆதிக்கமாகவோ
வந்து அமர்ந்து கொள்கிறார்…
அதுவும் நமது
எண்ணங்களின் பிரதிபலிப்பென்று
உணரும் போது மீண்டும்
வெறுமைக்குள்தான் அவரைத்
தேடவேண்டி இருக்கிறது…
ஆம்…
பிள்ளைகளைக் கண்டித்து
தண்டித்த அப்பாவின் கரங்கள்
பேரப்பிள்ளைகளிடம்
குறுகிப் போய்விடுகிறது…
அவர்களுடனான அவரின்
சமாதானப் பேச்சுவார்த்தைகள்
அவரில்லாத இந்த நாட்களிலும்
ஆச்சரியமாகத்தான் நீள்கிறது…
பாருங்களேன்…
அப்பாவைப் போலவே
பேரன் பேத்திகளுக்கெல்லாம்
பாட்டியை மட்டும்
அத்தனை பிடித்துப் போகிறது…
இந்த நூற்றாண்டிலும்
அம்மாக்களின்
ரகசியப் புன்னகைகளுக்கு
பதிலறிய அப்பாவின்
சாயலில் குழந்தைகள்
தேவைப்படவே செய்கின்றனர்…