
இருபது வருடங்களின் பின்னான தாய்நாடு நோக்கிய பயணம். பல துன்பங்களின் மத்தியில் வீட்டாரின் வேண்டுகோளைத் தட்டமுடியாமல் லண்டன் புறப்பட்டவன் , இப்போதுதான் திரும்புகிறேன்.
என்னைக் கண்டதும் ஆர்ப்பரித்த உறவுகளின் குசலவிசாரிப்பைத் தாண்டி என் விழிகள் எதிர்வீட்டை நோக்கியது. இளமைப்பருவத்தை வசந்தகாலமாக்கிய தேவதையின் குடியிருப்பு அது. அன்று போலவேபயந்து பயந்து இன்றும் பார்க்கிறேன். வீடு பூட்டிக்கிடந்தது. அவசரமாய் உள்ளே நுழைந்து என்னுடைய அறையின் யன்னல் வழியாகப் பார்த்தேன். எனக்காகவே யன்னலில் நின்று தரிசனம் கொடுக்கும் அவளைக் காணவில்லை. அப்போதெல்லாம் அந்த யன்னல் பார்வைதான் எங்கள் காதலை வளர்த்தது.
என்னை நானே கிள்ளிக்கொண்டேன்,
இதென்ன என் எண்ணங்கள், அன்று நான் இருபதிலும் அவள் பதினெட்டிலும் இருந்தோம், இன்று நான் நாற்பது வயதிலும் திருமணம் முடிக்காதவனாகவும் அவள் இளம் விதவையாகவும் வாழ்கின்றவர்கள். காலம் கடந்து காதலைத் தேடுவது சரியானதோ?
ஒருமணித்தியாலம் கடந்திருக்கும், அந்த வீட்டின் கேற் திறபடும் சத்தம், சாப்பிட்டுக்கொண்டிருந்த நான் அவசரமாய் எழுந்துகொண்டேன்.
“என்னப்பா—-அரைகுறையா எழும்புறாய்?” அம்மாவின் வார்த்தைகளுக்கு பதில் சொல்லக்கூட இல்லை. “அம்மா போதும்” விரைகிறேன் என் அறைக்கு.
மகளை கையில் பிடித்தபடி ஆராதனா. இரட்டை ஜடையில் துறுதுறுத்த என் தேவதை, சல்லிக்காசு போல கலகலத்த என் தேவதை, மான்குட்டி போல மருண்டு மருண்டு பார்க்கும் என் தேவதை, வெற்று நெற்றியும் விழிக்குள் துயரமுமாய் சென்று கொண்டிருந்தாள்.
எங்கள் இருவருக்கும் நண்பனான திவாகரையும் துணையாக அழைத்துக்கொண்டு அவள் வீடு நோக்கி விரைகிறேன். என்னைக் கண்டதும் அவள் விழிகளுக்குள் நிறைந்த கண்ணீரை நான் கண்டுகொண்டேன். என் கண்கள் நிறைவதை அவள் கண்டுவிடக்கூடாதே என எண்ணியபடி அவசரமாய் கண்ணாடியை மாட்டிக்கொண்டேன்.
“கி —ரு —-பா —-“ஆச்சரியமும் அதிசயமுமாய் அவள் உச்சரித்த விதத்தில் இரும்புக்குண்டொன்று என் இதய அறைகளுக்குள் மாறிமாறி உருண்டதை யாரிடம் சொல்வேன்? பனிமூட்டம் என்னை நனைத்தது போல சில்லிட்ட அந்த உணர்வை எப்படி வர்ணிப்பது?
திவாகர்தான் ஆரம்பித்தான்.
“ஆராதனா, கிருபா உன்னோட பேசவேணுமாம், உனக்காக இல்லாட்டிலும் மீராவுக்காகவேனும், அவனை கல்யாணம் செய்யிறதைப்பற்றி யோசி,”
சட்டென்று நிமிர்ந்தவளின் விழிக்குள் சிக்கியது என்’ பார்வை, அது யாசித்தது என்னவென்று அவளுக்குப் புரியும், அந்தப் பார்வையின் ஆழம், அவளுக்கு மட்டுமே புரியும்.
வெளியே ஓடிவந்த குழந்தை என்னைக் கண்டதும் மிரண்டது, எழுந்து சென்று தூக்கிக்கொண்டேன். “அவ யாரிடமும் ஒட்டமாட்டா,” அவள் சொல்லிக்கொண்டிருந்தாள், குழந்தை என் தோள்மீது இதமாய் சாய்ந்துகொண்டாள்.
ஏதேதோ வாக்குவாதங்கள், பல மறுதலிப்புகள்,
இறுதியாய் ஒன்றை மட்டும் சொன்னேன், “ஆராதனா, இருக்கிற என் மீதிக்காலத்தையாவது சந்தோசமானதா மாத்து, இல்லையென்றாலும் பரவாயில்ல, நான் கடைசிவரை இப்பிடியே தான் வாழப்போறன், நாம் சேர்ந்து வாழ்ந்தாலும் வாழலைன்னாலும் எனக்கு ஒரே மகள் தான், அது மீரா மட்டும் தான்” என்றேன்.
அந்த வார்த்தை அவளிடம் என்ன மாயம் செய்ததோ, அழுதாள், விக்கி விக்கி, தேம்பி தேம்பி அழுதாள். அவள் கரங்களைப் பற்றி அவள் கண்ணீரைத் துடைக்க துடித்த என் கைகளை வலுக்கட்டாயமாக நிறுத்திக் கொண்டேன்.
அவள் சம்மதித்த தருணம் நான் உலகத்திற்கே ராஜாவானது போல உணர்ந்தேன். அத்தனை சந்தோசம். வீட்டினரிடம் சம்மதம் பெற அவ்வளவு சிரமப்படவில்லை, இருபது வயதில்ஏதேதோ சொல்லி அவளை மறக்கவைத்துவிட்டதாக அவர்கள் நினைத்தது பொய்த்துப்போனதில் ஆச்சரியத்தின் எல்லையில் இருந்தனர்.
காசைக்கொட்டி ஒரே மாதத்தில் அத்தனை ஏற்பாடுகளையும் முடித்து இதோ இன்று என் மனைவி மகளுடன் பயணம். திவாகர்தான் இத்தனைக்கும் காரணம். இறுக்கி அணைத்து அவனிடம் விடைபெற்ற தருணம் என் நன்றி அத்தனையையும் அவன் உணர்ந்திருப்பான். எல்லோரிடமும் விடைபெற்று பயணிக்கிறோம். பாதி வழியில் என் மடியில் சாய்ந்து உறங்கிய மீரா, என் தோளில் சாய்ந்து உறங்கிய ஆராதனா இருவரையும் அன்போடு அணைத்துக் கொண்டேன்.
என் விடியலின் தேவதை, மீண்டும் என்னோடு, அவளை நான் ஆராதித்தேன், ஆராதிக்கிறேன், என் உயிர்வாழும் நொடிவரை ஆராதித்துக்கொண்டே இருப்பேன்.
கோபிகை