Description
ஏற்காடு இளங்கோ
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
உருவாக்கம்: ஏற்காடு இளங்கோ
மின்னஞ்சல்: yercaudelango@gmail.com
மேலட்டை உருவாக்கம்: ஜெகதீஸ்வரன் நடராஜன்
மின்னஞ்சல்: sagotharan.jagadeeswaran@gmail.com
மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்
மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com
ஒருங்குறி மாற்றம் – மு.சிவலிங்கம் – musivalingam@gmail.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
என்னுரை
உலக அளவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மோசமான நாடுகள் பற்றிய ஆய்வினை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தாம்சன் ராய்ட்டார்ஸ் பவுண்டேஷன் என்ற குழு 2010ஆம் ஆண்டில் செய்தது. அது தனது ஆய்வின் முடிவுகளை ட்ரஸ்ட்லா என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு துறைகளில் பெண்களின் முன்னேற்றம் மிக மோசமாக உள்ள 5நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளது. பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. இந்தியாவுக்கு 4வது இடம் ஆகும். பட்டியலில் காங்கோ, பாகிஸ்தான்,சோமாலியா ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இந்தியா மிக வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நாடாக இருந்த போதிலும் இந்தியாவில் பெண் சமத்துவம் அற்ற நிலை தொடர்ந்து நீடிக்கிறது. பெண் சிசுக் கொலை நடக்கிறது. ஒரு பெண் தனது கருத்தை, விருப்பத்தை சுதந்திரமாகச் சொல்ல முடியாத நிலை சமூகத்தில் நிலவுகிறது. ஆனால் வளர்ந்த நாடுகளிலும், மேலை நாடுகளிலும் பெண் சமத்துவம் மதிக்கப்படுகிறது.சோவியத் ரஷியா 50 ஆண்டுகளுக்கு முன்பே பெண் சமத்துவத்தை மிகவும் உயர்த்திப் பிடித்தது. விண்வெளிக்கு முதல் மனிதனை அனுப்பிய உடனே இரண்டு ஆண்டுகளில் ஒரு பெண்ணை விண்வெளிக்கு அனுப்பி உலகின் பார்வையை தன் பக்கம் ஈர்த்தது. இது பெண்களின் விடுதலைக்காகப் போராடும் முற்போக்குச் சக்திகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. விண்வெளிப் பயணம் ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது என்பதை சோவியத் ரஷியா வாலண்டினா மூலம் நிரூபித்தது. வாலண்டினாவின் வாழ்க்கை வரலாறு தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியையும் படிப்பவர் மனதில் ஏற்படுத்தும்.
இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு உறுதுணையாக இருந்த எனது மனைவி திருமிகு. இ. தில்லைக்கரசி அவர்களுக்கும், புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த நண்பர் திருமிகு. சரவணமணியன் அவர்களுக்கும் நன்றி. புத்தகத்தைச் தட்டச்சுச் செய்து கொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் நன்றி. மேலும் இந்தப் புத்தகத்தை வெளியிட்ட அறிவியல் வெளியீடுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்தப் புத்தகத்தை மின்னூலாக வெளியிட்டுள்ள FreetamilEbooks.com குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்த்துக்களுடன்
ஏற்காடு இளங்கோ
விண்வெளிக்குச் சென்ற பெண்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் என்னுமிடத்தில் மிகவும் புகழ் பெற்ற மகாலட்சுமி கோயில் உள்ளது. இக்கோயில் சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்டது. சாஹீ மகராஜ் கோலாப்பூவை ஆண்ட போது மகாலட்சுமி கோயில் கருவறைக்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கோயிலின் கருவறைக்குள் செல்ல ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. பெண் தெய்வத்தின் கோயில் கருவறைக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. கருவறைக்குள் சென்று பூஜை செய்ய பெண்களுக்கும் அனுமதி தர வேண்டும் என ஏப்ரல் 2011இல் பெண்கள் கோயிலின் முன்பு போராடினார்கள். இப்படி கோயிலின் உள்ளே நுழைவதற்கான போராட்டங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
கோயிலின் உள்ளே ஒருவர் சென்று வருவது மிகவும் கடினமானது அல்ல. அது வீட்டின் உள்ளே சென்று வருவது போன்ற ஒரு சாதாரண செயல்தான். ஆனால் விண்வெளிக்குச் சென்று வருவது சாதாரண காரியம் அல்ல. அது மிகவும் சிக்கலானது, ஆபத்தானது. ஆனால் விண்வெளிக்கு பெண்கள் சென்று வருவதற்குத் தடை ஏதும் இல்லை. அறிவியல் ஆணையும்,பெண்ணையும் சமமாகவே கருதுகிறது. அறிவியலுக்கு சாதி, மதம், ஆண், பெண் என்கிற பாகுபாடு கிடையாது. இதைத்தான் முதன்முதலில் சோவியத் ரஷியா நிரூபித்துக் காட்டியது.
விண்வெளிக்குச் செல்வது பற்றி கனவு காண்பது என்பது எளிதானது. ஆனால் சென்று வருவது என்பது எளிதானது அல்ல. அது ஒரு சாதனை; சிரமமானது. ஈர்ப்பு விசைச் சிறைக்குள் இருந்து விடுபட்டு, எல்லையற்ற விண்வெளியில் நுழைவது சிரமமானது. விண்வெளிக்குச் செல்வதற்கு என்று கடினமான பயிற்சி தேவை. அதன் பின்னரே அவர் ஒரு விண்வெளி வீரர் என்கிறத் தகுதியைப் பெறுவார்.
விண்வெளிப் பயணம் தொடங்கிய காலத்தில் ஆண்கள் மட்டுமே செல்ல முடியும் எனக் கருதினர். ஏனெனில் ஆண் வலிமையானவர். அவரால்தான் விண்வெளியில் இருக்கும் ஆபத்தைச் சமாளிக்க முடியும் எனக் கருதினர். விண்வெளிப் பயணத்தில் முதல் வெற்றி பெற்ற சோவியத் ரஷியா அப்படி கருதவில்லை. ஆண், பெண் சமத்துவத்தை அது போற்றியது. பெண்களும் விண்வெளிக்குச் செல்ல முடியும் என ரஷிய விஞ்ஞானிகளும், அரசும் கருதின. ஒரு சோசலிச குடியரசு அப்படி நினைப்பது என்பது ஆச்சரியம் அல்ல. அது பழமைவாதிகளுக்கு வேண்டுமானால் விரோதமாக இருக்கலாம்.
சோவியத் ரஷியாவின் பெண் சமத்துவம் ஒரு பெண்ணையும் விண்வெளிக்கும் அனுப்பியது. உலகில் முதன் முதலில் பெண்ணை விண்வெளிக்கு அனுப்பிய நாடும் சோவியத் ரஷியாதான். முதன் முதலில் விண்வெளிக்குச் சென்று வந்த பெண் வாலண்டினா தெரஸ்கோவா ஆவார்.
Reviews
There are no reviews yet.