துருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்குச் சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான்.

அவர்களுக்குத் தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக் கொண்டு தங்க வசதி செய்து கொடுத்தார்கள்.

அரசன் காலையில் எழுந்து கொண்டபோது, நெசவாளி நூல் நூற்கத் தொடங்கியிருந்தான்.

அவனது இடது கையில் ஒரு கயிறு கட்டப்பட்டிருந்தது.

அரசன் அந்த நெசவாளியைப் பார்த்து, ‘‘இது என்ன உனது இடது கையில் கயிறு?’’ என்று கேட்டான்.

“தொட்டிலில் உள்ள குழந்தையை ஆட்டுவதற்கானது. குழந்தை அழுதால் இதை இழுப்பேன்…’’ என்றான் நெசவாளி நூல் நூற்றுக்கொண்டே.

அவன் அருகில் ஒரு நீண்ட குச்சியிருந்தது. ‘‘இந்தக் குச்சி எதற்கு?’’ எனக் கேட்டான் அரசன்.

‘‘வெளியே என் மனைவி தானியங்களை வெயிலில் காயப்போட்டிருக்கிறாள். இந்தக் குச்சியின் மறுமுனையில் கருப்பு கொடியைக் கட்டியிருக்கிறேன். இதை அசைத்தால் பறவைகள் அருகில் வராது’’ என்றான்.

அந்த நெசவாளி தனது இடுப்பில் மணிகளைக் கட்டியிருந்தான்.

‘‘இந்த மணியை எதற்குக் கட்டியிருக்கிறாய்?’’ எனக் கேட்டான் அரசன்.

‘‘வீட்டில் ஒரு எலி இருக்கிறது. அதன் தொல்லையைச் சமாளிக்க இந்த மணியை ஒலித்தால்போதும், ஒடிவிடும்!’’ என்று பதில் சொன்னான்.

அவனது வீட்டின் ஜன்னலுக்கு வெளியே நாலைந்து சிறார்களின் முகம் தெரிந்தது.

நெசவாளியைப் பார்த்து, ‘‘அவர்கள் என்ன செய்கிறார்கள்?’’ என்று கேட்டான் அரசன்.

‘‘நூற்பு வேலை செய்து கொண்டிருக்கும் போது, வாய் சும்மாதானே இருக்கிறது. அதனால், அவர்களுக்கு எனக்குத் தெரிந்த பாடங்களை நடத்துகிறேன். அவர்கள் வெளியே இருந்து கேட்டுக் கொள்வார்கள்!’’ என்றான்.

‘‘அவர்கள் ஏன் வெளியே இருக்கிறார்கள்? உள்ளே வரலாம்தானே…” எனக் கேட்டான் அரசன்.

அதற்கு நெசவாளி சொன்னான்:

‘‘அவர்கள் காதுதான் நான் நடத்தும் பாடங்களைக் கேட்கப் போகிறது. ஆகவே, அவர்களை என் வீட்டுக்கு முன்னால் உள்ள மண்ணைக் குழைத்துத் தரும்படி செய்திருக்கிறேன். என்னிடம் பாடம் கேட்கும்போது அவர்கள் காலால் சேற்றைக் குழைத்துக் கொண்டிருப்பார்கள்’’ என்றான்.

ஒரே நேரத்தில் இவ்வளவு விஷயங்களை ஒருவன் செய்யமுடியுமா என அரசனுக்கு வியப்பு தாங்கமுடியவில்லை.

நெசவாளி சொன்னான்:

‘‘இது மட்டுமில்லை. என் மனைவி கிரேக்கத்துப் பெண். ஒவ்வொரு நாளும் பத்து கிரேக்கச் சொற்களைச் சிலேட்டில் எழுதி வைத்துப் போகிறாள். வேலை செய்துகொண்டே அதையும் கற்று வருகிறேன்’’

ஒருவன் விரும்பினால், ஒரே நேரத்தில் கற்றுக் கொள்ளவும், கற்றுத் தரவும், வேலை செய்யவும், வீட்டைக் கவனிக்கவும் முடியும் என்பதற்கு இந்த நெசவாளி தான் சாட்சி.

நமது சோம்பேறித்தனத்துக்குக் காரணம் கற்பித்துக் கொண்டிராமல், தொடர்ச்சியான உழைப்பினைத் தந்து தோல்விகளைத் துரத்துவோம்.

வெற்றி தோல்வியை நாம் தான் நிர்ணயிக்கின்றோம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal