எழுத்தாக்கம் -முனைவர் நா. சுலோசனா
உதவிப் பேராசிரியர், தமிழ்மொழி (ம) மொழியியல் புலம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை – 113.

நம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள், இவ்வுலகில் நாம் நல்ல வண்ணம் வாழ வழிகாட்டியவர்கள், நமக்காகப் பல இன்னல்களை ஏற்றுக்கொண்டவர்கள், நாம் வாழத் தமது வாழ்க்கையை அர்ப்பணிப்பு செய்தவர்கள், பிள்ளைகளுக்குப் பார்த்து பார்த்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியவர்கள், தமக்கென வரும்போது பிறகு பார்த்துக் கொள்வோம் எனும் தியாக உள்ளம் படைத்தவர்கள் இவர்களையும் சமூக வெளிகளில் போராடியவர்களையும் போற்ற ஒரு நாள். அந்நாள்தான் ‘உலக முதியோர் தினம்’ உயிர் கொடுத்து ஊட்டி வளர்த்த உறவுகளைக் கொண்டாடுவோம்.

மூத்தோரை மதிக்கவும் கண்ணியமாக நடத்தவும் அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு நடந்து கொள்வதற்குமான நாள் தான் உலக முதியோர் தி்னம். ஐக்கிய நாட்டு பொதுச்சபையினால் 1991 ஆம் ஆண்டு அறி்விக்கப்பட்டதுதான் அக்டோபர் 1. உலக முதியோர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இந்நாள் தேசிய தினமாகவும், கனடாவில் மூத்தோர்களை மதிக்கும் வகையிலும், ஜப்பானில் மூத்தோரைக் கொண்டாடும் வகையிலும் இத்தினம் கொண்டாடப்படு்கிறது.

மூத்தோர்கள் குடும்பத்திலும் சமுதாயத்திலும் ஆற்றிய பணிகளைப் போற்றுகிற வகையிலும் இந்நாள் அமைகிறது. குடும்பக் கட்டமைப்பு முறையில் மூத்தோர்கள் அனுபவ அறிவு நிரம்பியவர்களாக இருந்தமையால் அக்காலத்தில் கூட்டுக்குடும்ப அமைப்பு முறையிலும் அவர்களின் பங்கு அளப்பரியதாக இருந்தது. அவர்களின் அறிவுரை பல நீ்திமன்றங்களின் சட்ட விதிகளுக்கு நிகராக இருந்தபடியால் அக்காலத்தில் காவல்துறையும் நீதிமன்றமும் குடும்பப் பிரச்சினைகளுக்குத் தேவையில்லாமல் இருந்தது.

குடும்பத்திலும் சமுதாயத்திலும் ஏதேனும் பிரச்சினை என்றால், உடனே குடும்பத்தில் அல்லது ஊரிலுள்ள மூத்தோரிடம்தான் கருத்துரைகள் கேட்பார்கள். அவர்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று எல்லோரும் நம்பிக்கை வைத்திருந்தனர். அதனால் கிராமங்கள் நல்லபடியாக இருந்தன. விழுதுகளைத் தாங்கும் ஆலமரமாகத் திகழ்ந்தனர் மூத்தகுடிகள். மக்களும் நிம்மதியாக வாழ்க்கை நடத்தினர். வீட்டில் தாத்தா, பாட்டி, பெயரன் பெயர்த்திகளுக்கு ஆறுதல் தரவும், தங்களது மனச்சுமைகளை இறக்கி வைக்கச் சுமைதாங்கிகளாகவும் மரங்களைத் தாங்கும் வேர்களாகவும், மனச்சங்கடங்களைப் போக்கும் மனநல மருத்துவர்களாகவும் விளங்கினர். குடும்பத்திலுள்ள மூத்தோர்கள். பேரப்பிள்ளைகள் பெற்றோர்களிடம் பகிர முடியாதவற்றைத் தாத்தா பாட்டிகளிடம் பகிர்ந்து கொள்ளும் உறவாகவும் இருந்தனர்.

தாத்தா பாட்டிகளின் மடிகளில் இரவு நேரம் கதை கேட்டுத் தூங்கிய ஆலாபனைக் காலங்கள் எல்லாம் இப்போது இல்லாமல் போய்விட்டன. பெரியவர்களுக்கு நாம் தனிமைப் படுத்தப்பட்டோமோ, புறக்கணிக்கபட்டோமோ என்னும் மன நிலைகளை மாற்றிய பெருமை அக்காலத்துக் குழந்தைகளுக்கு உண்டு. மூத்தோர்களுக்குத் தான் சொல்வதைக் கேட்கவும், குழந்தைகளுக்குத் தான் பேசுவதைக் கேட்கவும் ஒரு வடிகாலாக இருந்தது தாத்தா – பெயரன் என்ற உறவுப்பாலம் தான். இன்னும் எத்தனை வீட்டில் கேட்கமுடிகிறது தான் பெற்ற பிள்ளைகளைப் பார்த்து இன்னும் நான் இந்த மட்டும் இருப்பது உன்னால் அல்ல என் பேரனுக்காகத்தான் என் பேத்திக்காகத்தான் என்று. காயத்தையும் வலியையும் போக்கும் மருந்தாக அடுத்தத் தலைமுறையினரைப் பார்க்கின்றனர்.

மூத்தோர்களை அன்றைய காலத்தில் கருத்துரைகள் வழங்கும் அறிவு ஜீவுகளாகப் பார்த்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வீட்டில் இருக்கும் அகவை முதிர்ந்தவர்களை ஊதியமில்லாத வேலைக்காரர்களாகப் பார்க்கும் போக்குதான் நிலவுகிறது. நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்கவும், மின்சாரக் கட்டணம் செலுத்தவும், பிள்ளைகளைப் பள்ளிகளிலிருந்து அழைத்து வருவது, நீண்ட வரிசையில் காத்திருந்து செய்து முடிக்க வேண்டிய வேலைகளைச் செய்வதற்கும், வீட்டைக் காவல் காக்கவும் இப்படி பல பணிகள் வயதாகி விட்டதால் கிடைக்கும் சன்மானங்களாக ஏற்றுக்கொள்கின்றனர். தான் பெற்ற பிள்ளைகளிடமும் சாலை ஓரங்களிலும், மக்கள் கூடும் பொது இடங்களிலும் பிறரிடம் யாசகம் கேட்கும் மன நிலைக்குத் தள்ளப்படும் அவலநிலை மாறவேண்டும். இதைப் பிரதிபலிக்கும் சமூகக் கதைகள் ஏராளம். கி. ராஜநாராயணன் எழுதிய “கறிவேப்பிலை” எனும் கதை பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களின் அவலநிலையை எடுத்துக்காட்டுகிறது. இலக்கிய படைப்புகளும், திரைப்படங்களும், சமூகப்பாடங்களைக் கற்பித்த வண்ணம்தான் இருக்கின்றன. ஆனால் நாம் கற்றுக் கொண்டோமா என்பதுதான் வினாவாக இருக்கிறது.

“வீட்டின் பெயரோ
அன்னை இல்லம்
அன்னை இருப்பதோ
அனாதை இல்லம்”

எனும் பம்மாத்தையும் பார்க்கமுடிகிறது.

”நீ பிறக்கும்போது வீட்டின் தோட்டத்தில் ஒரு தென்னங்கன்றை வைத்தோம். நீயோ எங்களின் வியர்வையில் வளர்ந்தாய். தென்னங்கன்றோ நாங்கள் ஊற்றிய தண்ணீரில் வளர்ந்தது. நீ படித்து முடித்து வெளிநாடு சென்றாய். தென்னங்கன்றோ எங்களுக்கு இளநீரும் நிழலும் தந்தது. நீ இமெயிலில் மொய்த்திருக்கும் போது என்றோ ஒருநாள் எங்களை ஈ மொய்த்த செய்தி வந்துசேரும். நீ வராவிட்டாலும் பரவாயில்லை நாங்கள் வளர்த்த தென்னங்கன்று எங்களுக்கு மஞ்சமாக வரும்”. இவ்வரிகள் எவ்வளவு ஆழமான அனுபவ வரிகள் என்பதை எண்ணிப்பார்க்க வைக்கிறது. தனித்து விடப்பட்டவர்களின் வலியையும் தன்னம்பிக்கையையும் உணரமுடிகிறது.

இன்றைய காலத்தில் ஒரு வயதுக்கு மேல் அவர்களால் உழைக்க முடியாது என்ற நிலையில், பல்வேறு தொழில் நிறுவனங்கள் அவர்களைக் காவல் காக்கும் பணிக்கு வைத்திருப்பது ஓரளவுக்கு ஆறுதல் தருகிறது. தொடர்ந்து ஒருவரைப் பார்த்த போது அவரிடம் கேட்டேன், இ்த்தனை நாளா உங்களைப் பார்க்கமுடியலயே என்று. அவர் சொன்னார் 5 வருசமாக வாட்ச்மேன் வேலைக்குப் போனேன். இப்போ எனக்கு வயசாகிவிட்டதால இனிமேல் உங்களை வேலைக்கு வைத்திருக்கமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. என்ன செய்யமா. வீட்டுல வெட்டியா இருக்க ஏதாவது வேலைக்குப் போன்னு சண்டை போடுறாங்க. எனக்கு என்ன அப்படி வயசாயிடுச்சுனு தெரியல வேலை செய்ய உடம்புல தெம்பு இருக்கு, நான் என்ன செய்யட்டும்? என்றார். உங்களுக்கு வயசு என்ன என்று கேட்டபோது சமுதாயத்தின்மீது ஒரு சலிப்புதான் ஏற்படுகிறது. அந்த இ்ளைஞருக்கு வயது 65. 60 வயதுக்கு மேல் மூத்தகுடிகள் என்று அரசு ஒரு சில சலுகைகள் கொடுத்தாலும், இச்சலுகைகள் எல்லா முதியோர்களுக்கும் பொருந்துமா? என்பது கேள்விக்குறிதான்.

சராசரி வயது 80 என்ற காலம் போய், இன்றைய காலச்சூழலிலும் உணவுமுறைகளாலும், சுற்றுச்சூழல் கேட்டினாலும் ஒவ்வொரு நாளும் அன்றைக்குக் கிடைத்த பரிசாக எண்ணித்தான் காலத்தைக் கழிக்க வேண்டியுள்ளது. வீட்டில் இருக்கும் பெரியோர்களை அன்போடும் பாசத்தோடும் அரவணைத்துச் சென்றாலே முதியோர் இல்லங்கள் குறையும்.

தமது மாமனாரை முதியோர் இல்லத்தில் விடச்சென்ற கணவனிடம் மனைவி கேட்கிறாள், அவங்ககிட்ட உங்க அப்பா பிரண்டோட போன் நம்பர் கொடுத்துட்டு வாங்க. இல்லைனா இங்கதான் போனைப் போட்டு தொல்லை பண்ணுவாங்க, உடம்பு சரியில்லை, அது சரியில்லைன்னு. தீபாவளிக்கு வரமாட்டார்தானே. தீபாவளின்னா சுவீட் செய்வோம், உங்க அப்பாவுக்கு வேற சுகர். இங்க வந்து என்ன செய்யப்போகிறார் என்று கேட்கும் மனநிலையைப் பார்க்கும் போது, எல்லோரும் வயதாகப் போகிறவர்கள் என்பதை மறந்துவிடும் போக்கு. பொருள் ரொம்பப் பழசாகி விட்டதே இதுவேற வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கின்றது எனத் தூக்கிப்போடும் பழைய பொருளின் நிலைதான் இன்றைய மூத்தோர்களின் நிலை.

“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே விளையும்”

என்னும் வள்ளுவரின் வாக்கு எல்லாத் தலைமுறையினருக்கும் பொருந்துவதாக அமைகிறது. வயது முதிந்தவர்கள் காலத்தின் வரலாறாய்த் திகழ்பவர்கள். சமூக நலனில் அக்கறை கொண்ட அறிஞர் பெருமக்களையும் குடும்பச்சூழல்களில் அல்லாடும் மூத்தோர்களையும் அவர்களின் பணியையும், உழைப்பையும், அடுத்த தலைமுறையினரின் நலனுக்காக பட்டபாடுகளையும் எண்ணிப் பார்த்து அவர்களைப் போற்ற வேண்டும். என்றென்றும் மூத்தோர் சொல் நெல்லிக்கனிதான் என்பதை நினைவு கூர்ந்து அடுத்தத் தலைமுறையினருக்குக் கடத்தும் கடமை எல்லோருக்குமானது என்பதைப் புரிந்துணரவேண்டும். அன்றைக்கு ஒருநாள் மட்டும் நினைத்துப் பார்க்கும் நாளல்ல. வேரின் வலிமையும் ஆழமும் தான் ஒரு மரத்தை பசுமையாக வைத்திருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

“மூத்தோரைப் போற்றுவோம்; மூதறிவு பெறுவோம்; முடிவில்லா வாழ்வு எய்துவோம்”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal