யாழில் 50 வயதை கடந்தும் முச்சக்கரவண்டியை ஓட்டும் வீர பெண்!

எனது விருப்பத்துக்கமைய பெண்களையும் வயோதிபர்களையும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களையும் முச்சக்கரவண்டியில் அதிகளவில் ஏற்றிச் செல்கின்றேன். அவர்களும் பயமின்றி சுதந்திரமாக பயணிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் எனது முச்சக்கரவண்டியில் பயணிக்கின்றார்கள் என பெண் முச்சக்கரவண்டி ஓட்டுநர் கோமளேஸ்வரி தெரிவித்துள்ளார்.

ஐம்பது வயதில் கடந்திருக்கும் இவர், யாழ்.மின்சார நிலைய வீதி தரிப்பிடத்தில் கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து முச்சக்கரவண்டி ஓட்டுநராக தொழில் புரிந்து வருகின்றார்.

பாரம்பரியத் தொழில்களை விட்டு விலகி ஆண்களால் மட்டும் செய்யப்பட்டு வந்த சாரதித் தொழிலை தங்களாலும் முடியும் என சாதித்துக் காட்டிய பெண் முச்சக்கரவண்டிச் சாரதிகள் வரிசையில் கோமளேஸ்வரி செல்வகுமாரும் சுயாந்தினி இந்திரகுமாரும் இணைந்து கொள்கின்றனர். அந்த வகையில், அவரும் அவரது சக தொழில் நண்பியான சுயாந்தினியும் தங்களது தொழில் அனுபவங்களை ஊடகம் ஒன்றின் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கின்றனர்.

கோமளேஸ்வரி செல்வகுமார் ஏற்கெனவே நான் சோம்பிக் கிடக்கவில்லை. வாழ்வாதாரத்துக்காகவும் வருமானத்துக்காகவும் கோழி, ஆடு, மாடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தேன். ஆனாலும் அந்தத் தொழில் எனக்கு வெற்றி அளிக்கவில்லை. அன்றாடத் தேவைக்கான வருமானத்தைக் கூட ஈட்ட முடியவில்லை என்று தனது அனுபவத்தை கோமளேஸ்வரி விவரிக்கின்றார்.

வறுமையான சூழ்நிலையில் எனது வாழ்வாதாரத்துக்காக நான் முச்சக்கரவண்டி ஓட்டுநர் தொழிலில் ஈடுபட உத்தேசித்தேன். எனது தந்தையும்; வாகனச் சாரதியாக கடமையாற்றியதால் எனக்கு சாரதித் தொழிலில் ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம்தான் என்னை பெண் முச்சக்கரவண்டிச் சாரதியாக ஆக்கியுள்ளது. எனக்கு உடலாற்றல் உள்ளவரை இந்தத் தொழிலைச் செய்வதில் உறுதியாக இருக்கின்றேன்.

அதேவேளை நான் இந்த முச்சக்கரவண்டிச் சாரதித் தொழிலில் ஈடுபடுவதற்கு எனது குடும்பத்திலும் பூரண ஆதரவு கிடைத்துள்ளது. முச்சக்கரவண்டி ஓட்டுவதன் மூலம் எதிர்பார்த்தளவு வருமானம் இல்லையென்றபோதிலும் கூட, ஓரளவு வருமானத்தை ஈட்ட முடிவதுடன், அந்த வருமானத்தைக் கொண்டு குடும்பச் செலவு உட்பட எனது பிள்ளைகளின் படிப்புச் செலவுகளையும் பூர்த்தி செய்யக்கூடியதாகவும் உள்ளது.

நான் எனது வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொண்டு நாளொன்றுக்கு சுமார் 5 மணித்தியாலங்கள் வரையில் முச்சக்கரவண்டிச் சாரதித் தொழிலில் ஈடுபட்டு அண்ணளவாக 1,500ரூபா வரையில் சம்பாதிக்கின்றேன். முழுநேரத் தொழிலாக ஈடுபட்டால் இதைவிட கூடுதலான வருமானத்தை ஈட்ட முடியும். ஆனால், குடும்பப் பெண்ணாக இருப்பதால் வீட்டு வேலைகளையும் கவனிக்க வேண்டிய பொறுப்புள்ளது.

தற்போது எனது பிள்ளைகள் கல்வி கற்கின்றார்கள். பிள்ளைகள் தற்போதைய வயதில் கல்வியில் நாட்டம் காட்ட வேண்டும் என்பதுடன், நான் இழந்த கல்வியை அவர்கள் இழக்கக்கூடாது என்பதையுமே விரும்புகின்றேன். இருந்தபோதிலும், எனது பிள்ளைகளின் எதிர்கால நன்மை கருதி அவர்களுக்கு முச்சக்கரவண்டிச் சாரதித் தொழிலை பழக்கிக்கொடுக்கும் உத்தேசம் உள்ளது.

காரணம் தொழிலொன்று இல்லாது போகும் பட்சத்தில் சுயதொழிலில் ஈடுபடுவதற்கு அது கைகொடுக்கும் என்பதால் அவர்களும் முச்சக்கரவண்டி ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் என விரும்புகின்றேன். ஆண், பெண் என்ற பால் வேறுபாடின்றி இருபாலாரையும் சமமாக மதித்து எனது முச்சக்கரவண்டியில் நான் ஏற்றிச் செல்கின்றேன்.

எனது தைரியமான முச்சக்கரவண்டிச் சாரதித் தொழிலை ஆண்கள் பாராட்டுவதுடன், என்னைப் போன்று ஏனைய பெண்களும் முச்சக்கரவண்டிச் சாரதித் தொழிலில் ஈடுபட வேண்டும் எனவும் வாழ்த்துக் கூறுவார்கள். எனக்கு சமுதாயத்தில் வரவேற்புக் கிடைக்கின்றது என்பதே இதன் மூலம் தெட்டத் தெளிவாகின்றது.

வீடு, உறவினர் என்று குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்த எனக்கு, முச்சக்கரவண்டிச் சாரதித் தொழிலில் ஈடுபடத் தொடங்கியதைத் தொடர்ந்து யாழ்.மாவட்டத்திலுள்ள அனைத்து இடங்களையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்புக் கிட்டியுள்ளது.

அது மாத்திரமின்றி, பயணிகள் எனது முச்சக்கரவண்டியை வாடகைக்கு அமர்த்திச் செல்வதால் யாழில் பிரசித்தி பெற்ற இடங்களுக்குச் செல்லும் சந்தர்ப்பமும் எனக்கு கிடைத்துள்ளது இது மகிழ்ச்சியளிப்பதாகும்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த காலத்தில் முச்சக்கரவண்டிச் சாரதித் தொழிலில் கடும் பின்னடைவு ஏற்பட்டது. அத்தோடு, முச்சக்கரவண்டியை வீட்டிலேயே நிறுத்தி வைக்க வேண்டி வந்ததால் முச்சக்கரவண்டியின் பற்றரி (மின்கலம்) உள்ளிட்ட பல உதிரிப் பாகங்கள் பழுதடைந்துள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் பஸ், ரயில் போக்குவரத்துகளில் சீரின்மை காணப்படுகின்றது. பயணிகளின் வருகையும் குறைவாக உள்ளது. இதனால் தற்போது முச்சக்கரவண்டித் தொழில் மூலம் கிடைக்கும் வருமானத்திலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆண் முச்சக்கரவண்டிச் சாரதிகளினால், பெண் முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு கேலி, கிண்டல் வருவதில்லை.

ஆனால், கொரோனா ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் யாழ்.மின்சார நிலைய வீதியில் பெண் முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு ஒதுக்கப்பட்ட தரிப்பிடத்திற்கு எம்மால் போக முடியாது போனது. இந்நிலையில், தற்போது பெண் முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கான தரிப்பிடம் என்று இடப்பட்டிருந்த பெயர்ப்பலகை அகற்றப்பட்டுள்ளது.

எமது தரிப்பிடத்தில் ஆண் முச்சக்கரவண்டிச் சாரதிகள் தரித்துச் செல்கின்றார்கள். இதனால் நாம் புதிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளோம். இந்தப் பிரச்சினை உரிய தரப்பினரால் தீர்த்து வைக்கப்பட வேண்டும். யாழ்.மாநகர சபை இந்த விடயத்தில் அக்கறை காட்ட வேண்டும்.

பெண்களும் முச்சக்கரவண்டி சாரதித் தொழிலில் ஈடுபடுகின்றார்கள் என்பதை அவர்கள் உணர்ந்து எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தங்கி வாழாமல் பிறரிடம் கையேந்தாமல் நான் சுயமாக சம்பாதிக்கின்றேன் என்ற மனத்திருப்தி எனக்கு இருக்கின்றது.

என்னைப் போன்று ஏனைய பெண்களும் முச்சக்கரவண்டிச் சாரதித் தொழிலில் ஈடுபட்டு சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன் கோமளேஸ்வரி என்கின்றார்.

கணவரின் மறைவுக்குப் பின்னர் கடந்த 9 வருடங்களாக முச்சக்கரவண்டி ஓட்டியே தனது குடும்ப வாழ்வாதாரத்தைக் தேடிக்கொள்வதாக யாழ்.மின்சார நிலைய வீதி தரிப்பிடத்தில் முச்சக்கரவண்டிச் சாரதியாக தொழில் புரியும் 42 வயதுடைய சுயாந்தினி இந்திரகுமார் தெரிவிக்கின்றார்.

தற்போது தலைதூக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடி காரணமாக முச்சக்கரவண்டி ஓட்டி சம்பாதிப்பதில் வருமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தனது குடும்ப வாழ்வாதாரத்தைக் கொண்டுசெல்வதில் சிரமப்படுவதுடன், முச்சக்கரவண்டி பழுது மற்றும் குத்தகைப் பணம் செலுத்துதல் உள்ளிட்ட செலவுகளை சமாளிப்பதிலும் மிகவும் கஷ்டப்படுகின்றேன்.

மேலும் அவர் தனது அனுபவத்தை விவரிக்கையில், எனது 9வருட சேவைக் காலத்தில் முச்சக்கரவண்டிச் சாரதித் தொழில் மூலமாக நான் எதுவித பிரச்சினையையும் எதிர்நோக்கியதில்லை எனக்கு உடலாற்றல் இருக்கும்வரை நான் முச்சக்கரவண்டிச் சாரதித் தொழிலை செய்வதற்கு எண்ணியுள்ளேன். அத்துடன், எனது பிள்ளைகளுக்கும் இத்தொழிலை பழக்கிக்கொடுக்க உத்தேசித்துள்ளேன்.

ஒரு கட்டத்தில் எனக்கு இயலாமல் போகும் பட்சத்தில் எனது பிள்ளைகள் இத்தொழிலை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. பாடசாலைகளுக்கு பெண் பிள்ளைகளை ஏற்றிச்செல்வதுடன், பெண்களே அதிகளவில் எனது முச்சக்கரவண்டியில் பயணிக்கின்றனர். அதேவேளை, ஆண்களையும் எனது முச்சக்கரவண்டியில் ஏற்றிச் செல்கின்றேன்.

ஆண் முச்சக்கரவண்டிச் சாரதிகளினாலும் எனக்கு தக்க தருணத்தில் பூரண ஒத்துழைப்புக் கிடைக்கின்றது. எனக்கு சமுதாயத்தில் வரவேற்புக் கிடைப்பதுடன், நான் பாராட்டப்பட்டு உதவிகளும் கிடைத்துள்ளன.

சர்வதேச மகளிர் தினத்தில் நான் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டுள்ளேன் என்று பெருமிதத்துடன் சுயாந்தினி கூறுகின்றார். தங்களைப் போன்று மேலும் பெண்கள் சாரதித் தொழில் செய்ய முன்வர வேண்டும் என்று முன்னோடிகளான கோமளேஸ்வரியும் சுயாந்தினியும் ஆதங்கப்படுகின்றனர்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal