எழுதியவர் – தமிழ்ச்செல்வன்

அதிகாலையில் கண்ணனின் ஏதோ ஒரு கனவு கலைந்தது.அவன் அம்மாவின் குரல் கேட்டு கண்விழித்தான்.
” எழுந்துக்கோ கண்ணா, அப்பா உனக்கு புதுச்சொக்கா புது டவுசர் வாங்கித்தரேனு சொன்னாரு ”
” புதுச்சொக்கா ” என்ற வார்த்தை தான் அவனை தூக்கத்தில் இருந்து விடுவித்தது. மிகுந்த சந்தோஷமானான்.
கண்ணன் பத்து வயது சிறுவன். நான்காம் வகுப்பு மாணவன். நேற்று இரவு புதுச்சட்டை கேட்டு அழுது அடம்பிடித்து, தன் அப்பாவிடம் அடிவாங்கி அழுதுகொண்டே தூங்கினான்.
” பல்லு விளக்கிட்டு வாடா, வெளிய போயி ஓட்டல்ல சாப்ட்டுக்கலாம், அப்படியே மணித்தாத்தா கிட்ட புது சொக்கா டவுசர் வாங்கிக்கலாம்” என்றார் அப்பா.
கண்ணன் காலைக்கடனிற்காக வீட்டின் பின்பக்கம் சென்றான்.
கண்ணனின் அப்பா குமார் ஒரு துப்புரவு தொழிலாளி. ஒரு ஒப்பந்தக்காரரிடம் தினக்கூலிக்கு பணிசெய்பவர்.
அவர்களைப் பொறுத்தவரை புதுச்சட்டை என்பது நிஜமான புதிய சட்டை அல்ல. ஏற்கனவே ஒருவர் உடுத்தி கிழிசல் இல்லாமல் அல்லது கிழிசல் தெரியாமல் தைக்கப்பட்டு மணித்தாத்தா என்பவர் நடைபாதையில் குவித்துப்போட்டு விற்கும் துணிகள் தான்.
அந்த குடிசைப்பகுதி எங்கும் வறுமை தான் நிறைந்து இருந்தது. அவர்களின் வாழ்க்கைத்தரம் ஒருவகையில் நிரபராதிகளுக்கு கிடைக்கும் அதிகபட்ச தண்டனைப் போன்றது.
கண்ணனும் குமாரும் வெளியே நடந்து செல்லத் தொடங்கினார்கள். இருவரும் செருப்பு அணியவில்லை. குமார் மிக நீளமான 3 குச்சிகளை வைத்திருந்தார்.
” அப்பா அடிச்சுட்டேன்னு கோபமா இருக்கியாடா”
” இல்லப்பா”
” சொக்கா கிழிஞ்சுடுச்சுனு வேற சொக்கா கேட்டா துட்டு குடுக்காம நல்லா குடிச்சுட்டுவந்து போதைல அடிக்கறவன் தானே நம்ம அப்பன்னு வருத்தமா இருக்காடா”
” இல்லப்பா ”
” நான் எங்க அப்பாக்கிட்ட அடி வாங்கினதே இல்லடா, அவரும் அவங்க அப்பாகிட்ட அடி வாங்கி இருக்க மாட்டாரு . ஏன் தெரியுமா? எங்க அப்பா பொறக்கறதுக்கு ரெண்டு மாசம் முன்னாடியே அவங்க அப்பா செத்துட்டாராம் . நான் பொறந்து ஒரு வயசு ஆகறதுக்கு முன்னாடி எங்க அப்பா செத்துட்டாரு. எனக்கும் இன்னும் எத்தனை நாள்னு எல்லாம் சொல்ல முடியாது கண்ணா. நாங்க பாக்கற தொழில் அப்படி .
நான் ஒன்னும் சந்தோஷத்துக்காக குடிக்கறது இல்லடா . குடிக்கலேனா எந்த மனுஷனும் இந்த தொழில் பண்ண முடியாது .”
ஒரு ஓட்டல் வந்தது.
” குமாரு, வாட்ச்மேன் ஒருத்தர் உன்னைத் தேடினு இருந்தாரு பாத்தியா ”
”அவரு கம்பெனிக்கு தான் போறேன் மாஸ்டர். ”
” நம்ம பையனா?. படிக்கறானா ?”
” நாலாவது படிக்கிறான் மாஸ்டர் , ரொம்ப நல்லா படிப்பான் . இங்கிலிஷ்லாம் நல்லா பேசுவான் . ஒன்னு ரெண்டு மூணு எல்லாம் இங்கிலீஷ்லியே நூறு வரைக்கும் எண்ணுவான். நான் பையன வேற மாதிரி வளக்கிறேன் மாஸ்டர். இன்னிக்கு ஸ்கூல் லீவு . அதான் அப்படியே கூட்டினு போறேன். இட்லி இருக்கா மாஸ்டர். கண்ணா கையக்கழுவினு உள்ள வாடா”
2 மேஜைகள் இருந்தன. மொத்தம் 8 வாடிக்கையாளர்கள் சாப்பிடக்கூடிய கடை. 3 பேர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
” குமாரு, பார்சல் கட்டித்தரேன்பா. வீட்டுக்கு எடுத்துனு போயி சாப்பிடு. உள்ள கஸ்டமர் சாப்பிட்டுனு இருக்காங்கல்ல ”
” சரிதான் மாஸ்டர், அப்பறம் வரேன் ”
இருவரும் வெளியேறினார்கள்.
” பாத்தியா கண்ணா, நான் கடை உள்ள உக்காந்து சாப்பிடக்கூடாதுனு எப்படி தொரத்தறாரு பாரு”
” எதுக்குப்பா தொரத்தறாங்க ”
” நான் பண்ற தொழில் அப்படி. நாலு தெரு தள்ளிப்போனா வேற கடை வரும். அந்த கடைக்காரருக்கு என்னை அடையாளம் தெரியாது. நாம உள்ள உக்காந்தே சாப்ட்டுக்கலாம்”
அவர் சொன்ன கடைக்குச்சென்று உட்கார்ந்தார்கள். குமார் அந்த குச்சிகளை முன்பே வெளியில் வைத்துவிட்டார். கண்ணன் இட்லி சாப்பிட்டான் .
” நீங்க சாப்பிடலியாப்பா”
” வேலை முடிச்சுட்டு குளிச்சுட்டு சாப்பிடணும். இப்போ சாப்ட்டா வேலை செய்யும்போது வாந்தி வந்துடும் ”
கண்ணன் சாப்பிட்டுமுடித்து கைகழுவினான். குமார் தோளில் போட்டிருந்த பழைய சிவப்பு நிறத் துண்டை கை துடைக்கக் கொடுத்தார்.
” கண்ணா, நீ பெருசானதும் என்னவா ஆகணும்னு ஆசை வச்சிருக்கியாடா ”
” டாக்டர் ஆகணும்னு ஆசைப்பா ”
” நல்லதுகண்ணா, நம்பிக்கையோட முயற்சி பண்ணு, டாக்டர் ஆகமுடியலென ட்ரைவர் ஆயுடு. இல்லேன்னா ஏதாவது கடை வை. முடியலையா மூட்டை தூக்கி பொழச்சுக்கோ தப்பே இல்ல.
அந்த வேலையும் முடியலென பிச்சை எடுக்கணும்னு விதி இருந்தா அதைக்கூட பண்ணு.
ஆனா அப்பா பண்ற தொழிலுக்கு மட்டும் வந்துடாதடா .
எங்க தாத்தா பண்ணாரு அப்பா பண்ணாருனு என்னை பண்ண சொன்னாங்க, எனக்கு அப்போ அசிங்கமா தெரியல . சின்ன வயசுலியே வந்துட்டேன், நான் வேற வேலைக்கும் போக முடியல. எல்லாரும் நாலு அடி தள்ளி நின்னு என் கூட பேசறதையே அசிங்கம்னு நினைக்கிறாங்க, யார் வேற வேலை கொடுப்பாங்க சொல்லு ”
கண்ணன் ” சரிப்பா.நான் நிச்சயம் வேற வேலைக்கு போயிடுவேன் பா” என்றான்.
” உலகத்திலேயே கஷ்டமான வேலை ராக்கெட் ஓட்றது பிளேன் ஓட்றது இல்லடா. துப்பாக்கி எடுத்துனு மிலிட்டரில சண்டை போடறது இல்லடா, கஷ்டமான வேலைன்னா உங்க அப்பா செய்யற வேலை தான்.
அவனுங்க கூட செப்டிக் டேங்க் லீக் ஆனா, மூக்கை மூடிட்டு தூரமாப் போயிடுவாங்க . க்ளவுஸ், முகமூடி இல்லாம அந்த பெரிய மனுஷங்கள்ல ஒருத்தனைஇறங்கச் சொல்லேன் பாப்போம் .
முதலமைச்சர் ஆகப்போறேன்னு சொல்றவங்க, கலெக்டர் ஆவேன்னு சொல்றவங்க இவங்க ஒருநாள் வெறும் உடம்போட செப்டிக் டேங்க் உள்ள இறங்கி அடைப்பு எடுத்தெ ஆகனும்னு சட்டம் போட்டாங்கனு வையி, அப்போ தான் என்னை மாதிரி இந்த தொழில் பாக்கறவங்க எல்லாருக்கும் ஒரு விடிவுகாலம் வரும்”
” இதுக்கு மிஷின் எல்லாம் கண்டுபுடிக்கலியாப்பா”
” இருக்குனு தான் சொல்றாங்க, ஆனா நடைமுறைல நாங்க உள்ள உழுந்து உயிரை விட்டுட்டு தானே இருக்கோம் ”
குமார் தான் உணர்ச்சி வசப்படுவதை அறிந்து தன்னை கட்டுப்படுத்திக்கொண்டார்.
” நான் எதுக்கு உன்னை கூட்டிட்டு வந்து இதை எல்லாம் சொல்றேன் தெரியுமா? நான் எவ்வளவு கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்கிறேன், எதுக்காக குடிக்கறேன், மத்த ஜனங்க நம்மள எப்படி நடத்தறாங்க, இதை எல்லாம் நீ புரிஞ்சிக்கணும்னு தான், கண்ணா. நீ சின்ன பையன் உனக்கு புரியுமா தெரியல?”
”எனக்கு புரியுதுப்பா ”
குமார் வேலை செய்யவேண்டிய பிளாஸ்டிக் கம்பெனிக்கு வந்து சேர்ந்தார்கள். செப்டிக் டேங்க் நிறைந்து சாலை எங்கும் அசுத்த நீர் ஓடிக்கொண்டு இருந்தது. துர்நாற்றம் வீசிக்கொண்டு இருந்தது. அதைச்சுற்றி நான்கு பேர் மூக்கைப் பொத்திக்கொண்டு நின்றிருந்தார்கள் .
” வா குமாரு, உனக்கோசரம் தான் எல்லாரும் நிக்கறோம். சட்டுபுட்டுனு வேலைய ஆரம்பி”
குமார் தான் கொண்டுவந்த 3 குச்சிகளை ஒன்றோடு ஒன்று நீளமாக இணைத்து உள்ளே செலுத்தி குத்திவிட்டார் .நுரை எழுந்து வந்தது. அடைப்பு நீங்கவில்லை.
” பத்தைய உட்டு குத்தறது வேலைக்கு ஆகல சார், உள்ள இறங்கித் தான் செய்யணும்”
”சீக்கிரம் நல்ல படியா செஞ்சு கொடு குமாரு, சுத்தி எத்தனை குடும்பம் அவஸ்த்தை படறாங்க பாரு. எவ்ளோ துட்டு வேணுமோ வேலைய முடிச்சுட்டு கேட்டு வாங்கிக்க ”
” நான் என்ன சார் அதிகமாவா கேக்கப் போறேன், ஒரு ஐநூறு கொடு சார், பையனுக்கு சொக்கா டவுசர் வாங்கறதுக்கு ஆகும். முதல்ல ஒரு கோட்டார் பாட்டில் வாங்கிக் கொடு சார், குடிச்சா தான் உள்ளே இறங்கி இந்த நாத்தத்துல வேலை செய்யமுடியும்”
” காலங்காத்தால எப்படி குமாரு பாட்டில் வாங்கமுடியும், இன்னிக்கு கிடைக்காதே, காந்தி ஜெயந்தி வேற, கடைத்தொறக்க மாட்டாங்கப்பா ”
.” இப்போ என்ன பண்றது சார்”
” பாத்து செய்யி குமாரு ”
” சரி சார், வாய் ஃபுல்லா பாக்கு போட்டுனு உள்ளே இறங்கறேன். பெரிய கயிறு இருந்தா கொடு சார் ”
அங்கேயே ஆடை களைந்தார். தன் லுங்கியை பல்லில் கடித்தபடி சிவப்புத் துண்டை கோமணமாக்கிக் கொண்டார்.
குமார் இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு மறுமுனையை ஒரு மரத்தில் கட்டிவிட்டார். கையில் சின்னக் குச்சியை எடுத்துக்கொண்டார்.
”உள்ளே போனதும் நூறு வரைக்கும் எண்ணுங்க. அப்பயும் நான் வெளிய வரலெனா ரெண்டு மூணு பேர் சேர்ந்து கயிறை புடிச்சு தூக்கிடுங்க சார் ”
குமார் உள்ளே இறங்கினார் .
கண்ணன் அதைப் பார்த்துக்கொண்டு மூச்சை அடக்கியப்படி மனதிற்குள் ‘ ஒன் ,ட்டூ , த்ரீ சொல்லிக்கொண்டு இருந்தான் . ஹண்ட்ரட் தாண்டியதும் மீண்டும் ஹண்ட்ரட் வரை சொன்னான். நடுநடுவில் மூச்சடக்க முடியாமல் மூச்சு விட்டுக்கொண்டான்.
குமார் வெளியே வரவில்லை.
” அப்பா வெளிய வாங்கப்பா ” என்று கண்ணன் கத்தினான்.
” என்னாச்சுன்னு பாருப்பா ரொம்ப நேரமா ஆளைக் காணோம், தூக்குப்பா தூக்கு ”
இரண்டு பேர் சேர்ந்து கயிறை இழுக்க கயிறு அறுந்தது. கயிறின் வெறும் நுனிமட்டும் மேலே வந்தது.
” அய்யோ என்னப்பா இது , யாராச்சும் இறங்கிப்பாருங்க”
” வேணாம் வேணாம், .ஃபயர் இன்ஜின் கூப்டு, போலீசுக்கு போன் பண்ணுங்க ”
” தம்பி, நீ சீக்கிரம் ஓடிப்போய் உங்க அம்மா கிட்ட விஷயத்தை சொல்லி உடனே கூப்டுகிட்டு வாடா ”
கண்ணன் வேகமாக வீடு நோக்கி ஓடினான்.
என்ன சொல்வது எப்படி சொல்வது என்று தெரியாமல் தன் வீட்டு வாசலில் நின்று ”அப்பா அப்பா” என்று கத்தி அழத்தொடங்கினான்.
[முற்றும்]

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal