குருகுலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது.

“யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்றார் குரு.

ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே அனைத்தும் அறிந்த இறைவன் நம்மைச் சோதிப்பது ஏன்? சோதனைகளைச் சந்திக்காமல், கஷ்டங்களைச் சந்திக்காமல் அவனின் அருளை பெறவே முடியாதா?” என்று கேட்டான்.

“நல்ல கேள்வி. நாளை இதற்கு உனக்குப் பதில் அளிக்கிறேன்” என்று கூறினார் குரு.

மறுநாள்…

ஆசிரியர் சொல்லப் போகும் விடையை அறிய மாணவர்கள் ஆவலுடன் வகுப்புக்கு வருகிறார்கள் அவர்களுக்கு முன்னாள் மண்ணால் செய்யப்பட்ட இரண்டு ஜாடிகள் இருக்கின்றன. பார்ப்பதற்கு அவை ஒரே மாதிரி இருந்தன.

“இங்கே இருப்பது என்ன? இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?” என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார் குரு.

மாணவர்கள் ஒரு கணம் கழித்து, “இரண்டு ஜாடிகளும் ஒரே இடத்தில் தயார் செய்யப்பட்டவைதான். ஒரே கொள்ளளவு கொண்டவைதான்” என்றனர்.

“இவற்றில் ஏதாவது வேறுபாடு தெரிகிறதா?” என்று குரு கேட்டார்.

மாணவர்கள், “தெரியவில்லை!” என்று பதிலளித்தனர்.

“ஆனால் இரண்டிற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது” என்ற குரு, முதல் ஜாடியைக் கீழே தள்ளிக் கவிழ்த்தார். அதிலிருந்து தேன் வெளியே வந்தது.

அதன் பிறகு மற்றொரு ஜாடியைக் கவிழ்த்தார். அதிலிருந்து சாக்கடை நீர் வெளியே வந்தது.

“ஜாடியை நான் கீழே தள்ளியவுடன், அதனுள் என்ன இருக்கிறதோ அது வெளியே வந்தது. அதை நான் கீழே தள்ளும் வரை அதற்குள் என்ன இருந்தது என்று உங்களுக்குத் தெரியாது. இரண்டும் ஒன்றே என்று நினைத்துக் கொண்டீர்கள். வித்தியாசம், உள்ளே இருந்த பொருளில்தான் இருந்தது. அது வெளியேத் தெரியாமல் இருந்தது. ஆனால் அதைக் கீழே தள்ளியவுடன் உள்ளே இருப்பதைக் காட்டிவிட்டது. இறைவன் நமக்குத் தரும் சோதனைகளும் இப்படித்தான். நாம் சோதனைகளைச் சந்திக்கும் வரை சகஜமாக நல்லவர்களாக இருக்கிறோம். ஆனால், சோதனையைச் சந்திக்கும் போதுதான் நமக்கு உள்ளே இருக்கும் நமது உண்மையான குணம் வெளியே வருகிறது. நமது உண்மையான எண்ணங்களும், நமது மனப்பான்மையும் வெளிப்படுகிறது. நமது உண்மையான குணத்தை பரீட்சிக்கவே இறைவன் சோதனைகளைத் தருகிறான்” என்றார் குரு.

மேலும் மாணவர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்;

“மேற்படி இரண்டு ஜாடிகளில் ஒரு ஜாடியை நீங்கள் எடுத்துக் கொள்ள நான் அனுமதியளித்தால் நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?” என்றார்.

மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், “தேன் அடைக்கப்பட்டுள்ள ஜாடியைத்தான்!” என்றனர்.

“இரண்டும் பார்க்க ஒரே மாதிரி இருக்கின்றன. ஒரே இடத்தில் செய்யப்பட்டவையே. இருப்பினும் தேன் ஜாடியை மட்டும் நீங்கள் வேண்டும் என்று ஏன் கூறுகிறீர்கள்? சற்று யோசித்துப் பாருங்கள்! கெட்டவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை இறைவன் நன்கு அறிவான். ஆகையால்தான், சில சமயம் நமது வேண்டுகோள்களை அவன் செவி சாய்ப்பதில்லை. இறைவன் நம்மை சோதிப்பதும் சீண்டுவதும் நமது உண்மையானக் குணத்தை நாம் அறியவே! அவனறிய அல்ல. அவனுக்குத்தான் உள்ளே இருப்பது சந்தனமா? சாக்கடையா என்று தெரியுமே. அவன் அப்படிச் செய்வது நம்மை நாமே தெரிந்து கொள்ளத்தான். நம்மை நாம் அறிந்து கொண்டால்தான் நம்மைத் திருத்திக் கொள்ள முடியும். இல்லையெனில் நமது தவறுகளைத் திருத்திக் கொள்ள நமக்கு வாய்ப்பேக் கிடைக்காமல் போய்விடும்!”

குரு விளக்கமாய்ச் சொல்லி முடிக்க, மாணவர்களுக்குத் தெளிவு பிறந்தது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal