
கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நேரம் தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பிரபல்யமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கடந்த 3-ந் தேதி தொடங்கிய வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 24 ஆம் திகதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய திருநாளான 14 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) வைகுண்ட ஏகாதசியன்று மூலஸ்தானத்தில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக முறைப்படியான சம்பிரதாயங்களை கடந்து திருமாமணி ஆஸ்தான மண்டபம் என்று சொல்லப்படுகிற ஆயிரங்கால் மண்டபத்துக்கு காலை 7 மணிக்கு வருகை தந்து முறைப்படியான பூஜைகள் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் விதமாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி , திருவிழாவுக்கு பக்தர்கள் 14 ஆம் தேதி அன்று கீழ்காணும் விவரப்படி அனுமதிக்கப்படுகிறார்கள்.
மூலவர் தரிசனம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை, உற்சவர் தரிசனம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை, பரமபதவாசல் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை. பிரதான வாயில் ரெங்கா ரெங்கா கோபுரம் நுழைவு அனுமதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பாதுகாப்பாக வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இல்லாத பக்தர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என திருச்சி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.