சுமார் 200 ஆண்டுகட்கு முன் வேலூர்க் கோட்டையின் சிப்பாய்கள் நம் நாட்டை அடிமைப்படுத்திட வந்த வெள்ளையர்களுடன் கடும் போரில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் மரணத் தருவாயில் வெளிப்படுத்திய ஒலம் வானைக் கிழித்தது. சுமாராக 14 வெள்ளையதிகாரிகளும், 100 இந்தியச் சிப்பாய்களும் இறந்தனர். கர்னல் ராபர்ட் ராலோ கில்லெஸ்பி என்பவர் தலைமையில் ஆற்காட்டிலிருந்து வந்த வெண்படையினரால் சுமார் 350 இந்தியச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.

இதுதான் காலனியாதிக்கத்திற்கு எதிராக ஏற்பட்ட முதல் போர் என்றும் கூறப்படுகின்றது. இதில் இறந்த இந்தியச் சிப்பாய்களின் எண்ணிக்கை பலர் குறிப்புகளில், பல வகைகளில் மாறுபடுகின்றது. இதனால் சென்னை கவர்னர் வில்லியம் பென்டிங் வேலையிழந்தார். இதுதான் பிரிட்டனுக்கு எதிராக ஒருங்கிணைந்த முறையில் நடத்தப்பட்ட முதல் போர் எனலாம். ஆனால் இதனை முதல் இந்தியச் சுதந்திரப் போர் என்று கூறலாமா? என்பதில் ஐயம் நிலவுகின்றது. ஏனென்றால் வெள்ளைச் சிப்பாய்களுக்கும், இந்தியச் சிப்பாய்களுக்கும் இடையே இருந்த ஏற்றத்தாழ்வே இப்போருக்கு அடிப்படை எனலாம்.

ஆனால், இந்தப் போருக்கு வேறு சில காரணங்களும் கூறப்படுகின்றன. புதுவகையான தலைப்பாகை, ஜாதிமுறை, மதமுறை அடையாளங்களை அணிந்து கொள்ளத் தடை முதலான பலவிதமான கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. இவை எல்லாவற்றையும் விட முக்கியக் காரணம். திப்பு சுல்தானின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்ததும் ஒரு முக்கியக் காரணமாக ஆனது. கிழக்கிந்தியக் கம்பெனியும் பல உள்நாட்டுச் சிப்பாய்களைத் தமது சேனையில் சேர்த்து வைத்துக் கொண்டிருந்தது. இவையெல்லாம் சேர்ந்து ஒரு மர்மமான சூழலை வேலூரில் தோற்றுவித்துக் கொண்டிருந்தன.

கிளர்ச்சிக்குப் பல காரணங்கள் இருந்தாலும் காலப்போக்கில் தாம் மதமாற்றம் செய்யப்படுவோம் என்று இந்தியச் சிப்பாய்கள் எண்ணியதே மிகப்பெரும் உடனடிக் காரணம் என்று கூற முடியும்.

1806 ஆம் ஆண்டு தொடங்கியது. மக்கள் மற்றும் சிப்பாய்களின் உள்மனப் போராட்டங்கள் வெடிக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. மே 6 ஆம் தேதி சிப்பாய்கள் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தனர். கைக்குட்டைகளை இஸ்லாமிய முறைப்படித் தலையில் போட்டுக் கொண்டனர். இதே நேரம் வேலூர், வாலாஜாபாத்தில் தலைப்பாகையை எதிர்த்து ஒரு பூசல் நடைபெற்றது.

கிளர்ச்சி தொடங்கியது. திப்புவின் மகன் படே ஐதர் தலைமையில் கிளர்ச்சி தீவிரமடைந்தது. கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர். ஜூலை 10 ஆம் நாள் திப்புவின் கொடி கோட்டையில் ஏற்றப்பட்டது. இக்காலத்து அரசியல்வாதிகளைப் போல கிளர்ச்சி முடிந்தவுடன் சம்பளம் இருமடங்காக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது. வெள்ளையர்கள் பலர் கொல்லப்பட்டாலும் சிலர் ஓடி ஒளிந்து உயிர் தப்பினர். ஆற்காட்டிற்குச் செய்தி பறந்தது.

ஆனால் அதற்குள் ஒரு சோக நாடகம் இந்திய மண்ணில் நடக்கத் தொடங்கி விட்டது. அது வேலூரின் தலைஎழுத்தையே மாற்றியமைத்தது. சிறந்த முறையில் கிளர்ச்சியைத் தொடங்கிய சிப்பாய்கள் தங்கள் நோக்கத்தை மறந்து திருடுவதிலும், கொள்ளையடிப்பதிலும் ஈடுபடலாயினர். தங்க நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் சில பொதுமக்களும் நாடோடிக் கூட்டத்தினரும் இணைந்து கொண்டனர். கோட்டைக் கதவுகள் கவனிப்பாரற்றும் காவல் காப்பார் அற்றும் திறந்து கிடந்தன. கர்னல் கில்லெஸ்பி என்பவனது படைகள் பூர்ண கும்ப மரியாதையுடன் உள் நுழைந்தன.

8 மணி நேரம்தான் அனைத்தும் முடிவடைந்து விட்டிருந்தது. திப்புவின் குடும்பத்தவர் தப்பியோடினர். பின்பு அவர்கள் கல்கத்தாவில் குடியேறினர். என்றாலும் திப்பு குடும்பத்தவர்க்குச் சொந்தமான பரம்பரைக் கல்லறைத் தோட்டம் இன்னமும் வேலூரில் உள்ளது. தோற்றவர்களைப் பழிவாங்கும் நோக்கத்திலும், மற்றவர்களைப் பயமுறுத்தும் நோக்கத்திலும் கொடூரமான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. பலர் பீரங்கி வாயில் நுழைக்கப்பட்டு வெடிக்கப்பட்டனர். பலரது உடல்கள் வெடித்துச் சிதறும் முன்னரே பருந்துகளும், கழுகுகளும் அத்துண்டுகளைப் பிடித்துச் சென்றன. இதனால் கோட்டை வாயிலெங்கும் இரத்தமும், சதையும், நிணமும், நாற்றமும் கொட்டிக் கிடந்தன. மக்கள் பீதியில் உறைந்தனர்.

இந்தச் செய்திகள் வாய்மொழி மூலமும், ஓலைகள் மூலமும் தமிழகம் ஏன்? தென்னகத்தின் பல பகுதிகளுக்கும் பரவியது. மக்களும், குறுநில அரசர்களும் வெள்ளையர்களை நினைத்தாலேப் பயப்படும் நிலைமைக்கு ஆளாகினர். இதனாலேயே 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற கிளாச்சியில் தென்னக மக்கள் பங்கேற்கவில்லையோ என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது.

தப்பிச் சென்ற சிப்பாய்கள் பட்டபாடு கொஞ்சம்நஞ்சமல்ல. கொடிய தண்டனைகளுக்குப் பிறகு அவர்களின் நிலை என்னவானது என்பதே தெரியவில்லை. அவர்களைப் பற்றி ஒரு சிறு அடையாளத்தையும் விடாமல் அழிப்பதில் வெள்ளையர்கள் சிறந்த பங்களிப்பினை செய்து முடித்தனர்.

ஒரு தேசிய கிளர்ச்சியாகத் தொடங்கிய வேலூர்ப் புரட்சி சரியான தலைமையின்மையால் ஓர் உள்நாட்டுக் கொள்ளையைப் போல முடிவடைந்தது. மறக்கவும் பட்டது. இந்திய வரலாற்றின் சுதந்திரப் போரில் உரிய அங்கீகாரமின்றி மறைக்கப்பட்டது. எதிரி நாட்டிலிருந்து வந்து போரிட்ட வெள்ளையர்களின் கல்லறைகளெல்லாம் வேலூர் சி. எஸ். ஐ. தேவாலயத்தில் இருக்கும் போது, நாட்டுக்காக, விடுதலைக்காகப் போரிட்ட இந்தியச் சிப்பாய்களின் அடையாளமே தெரியாமல் போய் விட்டதுதான் வேதனை. மேலும் இக்கிளாச்சிக்குரிய அங்கீகாரம் கிடைக்காதது மேலும் வேதனையளிக்கின்றது. உண்மையில் இது ஒரு படைக்கிளர்ச்சிதான். ஆனால் இது ஒரு உள்நாட்டுக் கொள்ளை என்று சிலர் எழுதி வைத்துள்ளனர். சிலர் பேசியும் வருகின்றனர்.

இப்படைக் கிளர்ச்சி தோன்றி இடங்களான திப்பு மகாலும், ஐதர் மகாலும் நீண்ட காலம் பராமரிப்பின்றி இருந்து வந்தன. சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன் இக்கிளர்ச்சியின் 200 ஆவது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது. காவலர் பயிற்சிக் கல்லூரியாக இருந்த இவ்விடம் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விடப்பட்டது.

தென்னகத்தின் மிகச்சிறந்த இராணுவ அமைப்பு கொண்டது மீசுரகண்டக் கொத்தளம் என்று தமிழிலும், தெலுங்கு – கன்னடத்திற்கு மையமான ஒரு மொழியிலும் எழுதப்பட்டுள்ள வேலூர் கோட்டையின் ஒரு பகுதி அகழி தூர்ந்து பராமரிப்பின்றிக் காணப்படுகின்றது. சுற்றுக் கொத்தளத்தின் பெரும்பகுதி புல்லும் மரமும் வளர்ந்து இடியும் தருவாயில் உள்ளது. மிகச்சிறந்த உள்வளைவுகள் விபசாரத்திற்கும், சில தீய சக்திகளின் சமுதாய விரோதச் செயல்களுக்கும் பயன்பட்டு வருகின்றது. இவ்விடத்தில் இத்துணை பெரிய புரட்சி நடந்தது என்பதே வேலூர் மாநகராட்சி மக்களில் பலருக்கும் தெரியுமா? என்பதே கேள்விக்குறிதான்.

திப்பு மகாலும், ஐதர் மகாலும் சிறைச்சாலைகளாகவும், சிறைக்காவலர்களின் இருப்பிடமாகவும் மாறி மோனத்தில் ஆழ்ந்து கிடக்கின்றன. கோட்டையோ பலதுறை அரசு அலுவலகங்களின் நெரிசலில் சிக்கிக் கிடக்கின்றது. கோட்டையுள்ளிருக்கும் ஜலகண்டேசுவரர் கோவிலும், கிறித்தவ தேவாலயமும், அரும் பொருட்காட்சியகமும், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் அலுவலகமும் மக்களை தற்போது ஈர்த்து வருகின்றன. திப்பு மகாலும், ஐதர் மகாலும், கோட்டையும் எத்தனையோ நினைவுகள் உடைய எங்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா என்ற ஏளனத்துடன் பொதுமக்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு மௌனத்தில் ஆழ்ந்திருக்கின்றன.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal