பெரியார் விஜயன்

முழுதும் குளிரூட்டப்பட்ட உணவகம் அது. பெரியது; பிரபலமானதும் கூட. பணக்காரர்களும் நாகரிகமானோரும் விலையுயர்ந்த வாகனங்களில் வந்து செல்லும் உணவகம். வார இறுதிநாளில் இரவுச் சிற்றுண்டி அருந்துவதற்காகக் குடும்பத்துடன் சென்றார் காவல் துறை அதிகாரியான தாமோதரன்.

உணவகம் முழுதும் வாடிக்கையாளர்களால் நிறைந்திருந்தது. உணவக மேற்பார்வையாளர் இடம் தேடி அமரவைத்தார்.

“சார் என்ன சாப்பிடறீங்க” என்று வினவினார் சர்வர்.

“இன்னைக்கு என்ன ஸ்பெஷல் மெனு” திருப்பி வினவினார் தாமோதரன்.

வழக்கமான ஒரு பட்டியலை ஒப்பித்தான் சர்வர். சற்றேரக்குறைய இருபத்தி நான்கு வயதுடைய, சராசரி உயரமுடைய யுவன். சற்றுத் தடுமாற்றத்துடன் தமிழை உச்சரித்தாலும் சமாளிக்கக் கற்றுக் கொண்டிருந்தான். அவனது முகவட்டும் நிறமும் உடலமைப்பும் உடல்மொழியும் அவனை வடநாட்டைச் சார்ந்தவன் என்பதைப் பறை சாற்றியது.

அத்தனையும் கேட்டுவிட்டு வெங்காய ஊத்தாப்பம் ஆர்டர் செய்தார் தாமோதரன். குடும்பத்தினரையும் பணித்தார். அவரது மனைவி சோளா பூரியும், மகன் ‘நானு’ம் பன்னீர் டிக்காவும், மகள் வெஜிடபிள் பிரியாணியும், பேபி கான் ஃபிரையும் ஆர்டர் செய்தனர். அத்தனையும் குறித்துக் கொண்டு சென்றான் சர்வர். அவரவர் விருப்பத்திற்கேற்ப ஆர்டர் செய்தாலும் அனைவரும் பகிர்ந்துண்பது அக்குடும்பத்தின் வழக்கம்.

”அப்பா, நெக்ஸ்டு வீக் வனிதா ரெஸ்டரண்டுக்குப் போகலாம்பா…” எனத் தன் விருப்பத்தை மொழிந்தாள் மகள்.

மகளின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிப்பதாகத் தலையாட்டிக் கொண்டு திறன்பேசியைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தார் தாமோதரன். அம்மாவும் அண்ணனும் கூடத் தங்களது விருப்பத்தையும் அபிப்பிராயத்தையும் விளம்பிக் கொண்டிருந்தனர்.

சர்வர் மீண்டும் வந்தான். நான்கு அழகிய ஸ்டீல் டம்ளர்களை மேசை மீது வைத்துத் தண்ணீர் ஊற்றத் தொடங்கினான். இரண்டு டம்ளர்கள் நிறைந்த நிலையில் டம்ளரைத் தொட்டுப் பார்த்த தாமோதரன், “தம்பி, ஹாட் வாட்டர் குடுப்பா’ என்றார்.

“எல்லாருக்குமா… ஸார்”

“ஆமாமாம்…” என்று அவசரமாகப் பதிலிறுத்துவிட்டு மறுபடியும் திறன்பேசியில் நோட்டமிட்டார்.

உடனே தாமோதரனின் மனைவி, “எனக்கு இந்த வாட்டர் ஓகே “ என்று சொல்லி டம்ளரைக் கையில் எடுத்து, “இது ஆர்.ஓ தானப்பா” என்று வினவிக் கொண்டே சர்வரது பதிலை எதிர்பார்க்காமலே ஒரு மிடறு குடித்தாள்.

“ஆமாங்க மேடம்” சொல்லிக்கொண்டே வெந்நீர் எடுத்துவர விரைந்து சென்றான் சர்வர்.

வெந்நீருடன் வந்தவன் தண்ணீர் ஊற்றப்பட்ட ஒரு டம்ளரிலிருந்து பாதித்தண்ணீரை ஜக்கில் ஊற்றிவிட்டு டம்ளரில் மீதியிருந்த தண்ணீருடன் வெந்நீரைக் ஊற்றிக் கலந்தான்.

“தம்பி, என்னப்பா பண்ற…” தாமோதரன் வினவ, “ஹாட் வாட்டர் ஸார்” சர்வர் பதிலுரைத்தான்.

“நான் கேட்டது ஹாட் வாட்டர். புரியுதா”

“இது ஹாட் வாட்டர் தான் ஸார்”

“அப்போ ஏற்கனவே டம்ளரில் பாதி இருந்ததே அது என்ன?”

“அது கோல்டு வாட்டர் ஸார்”

“சோ இது எப்பிடி ஹாட் வாட்டராகும்? பச்சத் தண்ணி மிக்ஸ் பண்ணாம. ஹாட் வாட்டர் மட்டும் குடு. ஸிர்ப் ஹாட் வாட்டர், ஓகே மிலானா மத்” தனக்குத் தெரிந்த இந்தியும் கலந்து சாந்தமாகச் சொன்னார் தாமோதரன்.

”அது ரொம்ப ஹாட்டா இருக்கும் ஸார். குடிக்க முடியாது” அவனது பதிலும் மென்மையாக இருந்தது.

“ஓகே, நோ ப்ராளம். டிஃபன் சாப்பிட்டுமுடிக்கும் போது சரியாக இருக்கும்’

“சரி, ஸார்” என்று சொல்லிக் கொண்டே மூன்று டம்ளர்களிலும் கொதிக்கும் வெந்நீரை ஊற்றிச் சென்றான்.

“இப்டி யாரும் இவ்வளவு கண்டிசனா கேட்டதில்ல. குடுக்கறத குடிச்சிட்டு, சாப்பிட்டுப் போயிடறாங்க, கொஞ்சம் பேரு சாப்பிட்டப் பெறகு உப்பு கொறவு, சுகர் ஜாஸ்தி, காப்பிக்கு சூடு போதாதுன்னு சொல்லறாங்க. சாப்பிடத் தொடங்கின உடனே குறையைச் சொல்லி புதுசா ஆடர் பண்ணிச் சாப்பிடவங்க இல்லன்னே சொல்லலாம். ஏன்னு தெரியல. எல்லாருக்கும் பயமோ என்னவோ, இல்ல ஸ்டேட்டஸ் குறஞ்சிடும்னு நினைக்கறாங்களோ? இதுக்குப் படிக்காதவங்களே மேல். அப்பப்போ சிலர் நல்லதாவும் சொல்றாங்க. ஆமா கைவிரல்ல எல்லா விரலும் ஒரே மாதிரியா இருக்கு…’ என்று நினைத்துக் கொண்டே சென்றான்.

ஆர்டர் செய்த உணவுப் பொருட்களைக் காலதாமதமின்றி மரியாதையுடன் பரிமாறினான்.

அக்கம்பக்க மேசைகளிலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் சிலர் இந்நிகழ்வினைக் கவனிக்கத் தவறவில்லை. தேவையானதைத் தெளிவாகக் கேட்டுப் பெறுவதாகச் சிலர் பேசிக்கொண்டார்கள்.

“எல்லா வாடிக்கையாளர்களும் வாக்காளர்களும் இப்படி இருந்துவிட்டால் நாடு சீக்கிரம் முன்னேறிவிடும்” என்று அவர்களுள் ஒரு முதியவர் பேசிக்கொண்டார்.

“அதற்கு நம்மவர்களுக்குத் தைரியம் போதாது” என்று அவருடன் வந்திருந்த ஓர் இளைஞன் பதில் சொன்னான். வீட்டில் இருப்பதைப் போலவே இங்கேயும் இருக்க வேண்டுமென்று நினைப்பதாக, வேறு சிலர் நினைத்துக் கொண்டனர். நாம் ஒன்று கேட்டால், அவன் ஒன்று தருகிறான் என்று மற்றும் சிலர் ஆதங்கப்பட்டுக் கொண்டனர். ஏதோ என்னவோ எங்கேயோ நடக்கிறது; அது கனவோ கற்பனையோ எனும் பாவத்தில் சிலர் தத்தமது வேலைகளில் முனைந்திருந்தனர். சிலர் திறன்பேசியைப் பார்த்துக் கொண்டே சாப்பிட்டனர். அவர்களுக்கு சாப்பாட்டின் விதவிதமான ருசி தெரியவில்லை. திறன்பேசியின் ருசியேப் பெரிதாக இருந்திருக்கலாம்.

மேசையிலிருந்த காலி டம்ளர்களில் இரண்டை எடுத்து, இரண்டு டம்ளர்களிலிருந்த வெந்நீரைப் பாதிப் பாதி அளவு ஊற்றினார் தாமோதரன். சீக்கிரம் ஆறுவதற்கான வழி அது.

அரை மணி நேரம் உணவை ரசித்து, ருசித்து உண்ட பிறகு, வெந்நீர் குடிக்கும் அளவு பதமாகவும் இருந்தது; இதமாகவும் இருந்தது.

”ஸார், வேற ஏதாவது ஆர்டர் பண்ணனுமா” அடிக்கடி அவ்வழியே கடக்கும் போது மேசையைக் கடைக்கண்ணால் நோட்டம் விட்டுச் சென்ற சர்வர், இரண்டாவது முறையாக வந்து கேட்டான். மனைவியிடமும் பிள்ளைகளிடமும் அதே வினாவை வினவினார் தாமோதரன். பிறகு, “நோ வேண்டாம்பா”

”ஸார், டீ, காப்பி, ஃப்ரஸ் ஜூஸ், கூல்டிரிங்ஸ், டெஸர்ட் எதாவது”

“… … … … … … … … … … …”

“இன்னும் கொஞ்சம் ஹாட் வாட்டர் ஸார்”

“நத்திங் இனஃப். போதும்பா. பில் எடுத்திட்டு வா”

“ஓகே, ஸார்”

அவன் சென்றதும். வெந்நீர் போதாமல் வீட்டிலிருந்து கொண்டு வந்த பாட்டிலை எடுத்து வெந்நீர் பருகினாள் மகள். மகனும் கொஞ்சம் பகிர்ந்து கொண்டான்.

சற்று நேரத்தில் மென்மையான, கருப்பு நிறமுடைய புத்தகம் போன்ற ஒரு அட்டையில் பில் புக்- பில் கொண்டு வந்து மேசைமீது வைத்துவிட்டு சற்று நீங்கி நின்றான்.

“ஸார் கேஷா, கார்டா ஸார்”

“கார்டுதாம்பா”

“ஒன் மினிட் ஸார்’ என்று சொல்லிக் கொண்டே காசாளரிடம் சென்று ஸ்வைப்பிங் மிஷினை வாங்கி வந்து “ஸார் கார்ட் ப்ளீஸ்” கேட்டான். மொழியிலும் உடல் மொழியிலும் பணிவு இருந்தது எப்போதும் போல.

கார்டை வாங்கி ஸ்வைப்பிய சர்வர், “ஸார் பாஸ் வேட் ஸார்” என தாமோதரனிடம் நீட்டினான்.

அதை வாங்கிய அவரது மகன் பாஸ்ர்வேடை டைப் செய்து சர்வரிடம் திருப்பித் தந்தான்.

ரிசிப்டைக் கிழித்து மகனிடம் தந்துவிட்டு ‘ஓகே தேங்ஸ் ஸார்” என்றான் சர்வர்.

அதற்குள் பர்ஸிலிருந்து 50 ரூபாயை எடுத்து பில் புத்தகத்திற்குள் வைத்து சர்வரிடன் நீட்டினார் தாமோதரன்.

வாங்கிக் கொண்ட சர்வர் மறுபடியும் “ரொம்ப தேங்ஸ் ஸார்” என்று சிரித்த முகத்துடன் பதிலுரைத்தான்,

“நெய்ம் என்னப்பா?’

“விஜிந்தர் ஸார்”

“பிஹாரியா”

“இல்ல பெங்காளி ஸார்”

“ஓகே குட்” என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டார் தாமோதரன்.

மனைவியும் பிள்ளைகளும் அவரைத் தொடர்ந்தனர்.

அதற்குள் ஹலோ வெய்ட்டர் என்று கர்வமான, கனமான குரல் வந்தது. அடுத்த மேசையை நோக்கி ஓடினான் சர்வர்.

உணவகத்தில் அடுத்தப் பகுதியை அவர்கள் கடக்கும் போது ஒரு வாடிக்கையாளர் மற்றொரு தமிழ்நாட்டு சர்வரிடம், ‘ஏய் வாட் ஈஸ் திஸ்? என்ன மேன் இது குடிக்க வாட்டர் கேட்டா இப்படிக் கொதிக்கக் கொதிக்கக் கொண்டு வந்திருக்க. இதக் குடிச்சா குடலே வெந்து போயிருமே’ என்று கத்திக் கொண்டிருந்தார். அவரது உரத்த குரல், உடல் பருமன், டிப்டாப் ஆடை, மேக்கப், உடனிருந்தோரின் தோற்றம் அத்தனையும் பார்த்துப் பயந்த அந்த சர்வர் டம்ளரில் தண்ணீருடன் வெந்நீரைக் கலந்து கொண்டிருந்தான்.

கலப்படம் சாப்பிடுவதே நம்ம ஆளுகளுக்குப் பழகிப்போயிடிச்சு. எது சரி? எது தவறு என்று தெரியல. எது நல்லது? எது கெட்டது?ன்னும் தெரியல. படித்தவங்களுக்கும்தான். அப்படீன்னா பள்ளிக்கூடத்தில என்னதான் படிச்சாங்க. இவர்கள் எல்லாம் நாகரிகமானவர்களாம். காரில் வந்தால் மட்டும் அறிவாளி ஆகிவிட முடியுமா? இல்ல வில உயர்ந்த துணிகள போட்டுக்கிட்டா பெரியாளு ஆகிட முடியுமா? ச்சே. அப்பா அம்மா சொன்னதக் கேட்டிருந்தா நமக்கு இந்த நிலம வந்திருக்காது. வாத்தியாரு சொன்னபடி கேட்டிருந்தாலும் நம்ம வாழ்க்க நல்லா இருந்திருக்கும். இப்படிக் கண்டவன்கிட்ட திட்டு வாங்கிட்டு, தன்மானத்த விட்டு வேலை செய்ய வேண்டிய அவசியம் வந்திருக்காது என்று மனத்திற்குள் புலம்பியவாறு ஆர்டர் செய்த பொருட்களை எடுத்துவர விரைந்தான் அந்த சர்வர்.

தாமோதரன் புன்னகைத்துக் கொண்டே நடந்தார். அதில் ஏளனம் மிகுந்திருந்தது. அவரது நடையில் ஒரு பெருமிதம் தெரிந்தது.


ஒரு மாதத்திற்குப் பிறகு ஒரு விடுமுறை நாளில் அதே உணவகத்திற்குத் தன் குடும்பத்துடன் வந்தார் தாமோதரன். மீண்டும் வெந்நீருக்காக அவர் வாதாட வேண்டியிருந்தது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x

SCSDO's eHEALTH

Let's Heal