நாட்டில் வெசாக் பண்டிகையின் போது மதுபானம் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டால், கிறிஸ்மஸ் காலத்திலும் மதுபான விற்பனை தடை செய்யப்பட வேண்டும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.
மதம் என்பது விருந்து மற்றும் குடித்து விட்டு வாழ்க்கையை வீணாக்குவது அல்ல என்றும் அவர் கூறினார். கனேமுல்ல பிரதேசத்தில் உள்ள தேவாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

சுற்றுலா அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் கிறிஸ்மஸ் தினத்தன்று மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பத்திரிகைகளில் பார்த்ததாகவும், கிறிஸ்மஸ் நாளில் மதுபானம் வாழ்க்கையை அழிக்க அனுமதிப்பது செழுமையின் பார்வையா என்று கேள்வி எழுப்பினார்.
அதேவேளை ஏப்ரல் 21 நடந்த பேரழிவுக்கான எந்த ஒரு செயலூக்கத்தையும் நாம் இன்னும் காணவில்லை எனவும் குறிப்பிட்ட பேராயர், தலைமறைவாக உள்ளவர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளதாக உணர்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் ஆணைக்குழுவின் அறிக்கையில் பலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இதுவரை ஒருவர் கூட விசாரிக்கப்படவில்லை எனவும் அவர் விசனம் வெளியிட்டார்.
மேலும் நாம் அரசியல் சக்திகளின் அல்லது தலைவர்களின் கைக்கூலிகளாக இருக்கக் கூடாது என்றும், நாங்கள் கற்பிக்கும் தத்துவம் இன்னும் உயர்ந்தது எனவும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கூறினார்.