எழுதியவர் – தூரா.துளசிதாசன்

இதயங்களின் கனதிகள்
காற்றில் கலைந்து விட
மனப்பறவை புன்னகையோடு
சிறகை விரித்திட
நகைச்சுவையை நாளும்
அள்ளி வீசியெறிந்தவன்
நாடி துடிப்பின்றி
உறங்குகிறான்
நீங்காத நித்திரையில்…
அறுவை சிகிச்சையன்றி
சிரிப்பு சிகிச்சையால்
கோடி நெஞ்சங்களின்
இதய அடைப்புகளை
நீக்கிய மருத்துவன்
மறைந்து விட்டான்
மாரடைப்பால்…
மரணமே..! நீ
புசிப்பதற்கு வேறு
அகோரன் இல்லையா..?
விழிப்புணர்வுகளால் விழித்தவன்
விழிகளை மூடிக்கொண்டான்..
சீறும் சிந்தனைகளால்
சமூகக்கறைகளை சாடியவன்..
நகைச்சுவையால் மனங்களை
கொள்ளை அடித்தவனை
கொள்ளை கொண்டான்
மறலியவன் …
கொரனாவின் பிடியில்
தப்பியவனை தடுப்பூசி
காக்க மறந்ததெனோ..?
தமிழ் மனங்களில்
மையம் கொண்ட
சிரிப்பு புயலொன்று
மறைந்தது மர்மதேசத்தில்…
கனவு நாயகன்
கலாமின் கனவுகளை
நனவாக்கிய சின்னக்கலைவாணனை
சிறைப்பிடித்துக் கொண்டான்
காலனவன்…
மரங்களும் கண்ணீர்
சொரிகின்றன மனிதர்களோடு
துக்கம் அனுசரித்து…
பூமிப்பந்தை பசுமையாக்கிட
விதைகளை விதைத்தவன்
மண்ணிற்குள் புதைந்துவிட்டான்
தன்னையே விதையாக்கிட,
அவன் மரிக்கவில்லை
உயிர்ப்பித்து நம்மில்
வாழ்வான் விருட்சமாக….!